Published : 09 Sep 2016 10:39 AM
Last Updated : 09 Sep 2016 10:39 AM

காலம் மறக்காத நான்கு காவியங்கள்!

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு நிறைவு : செப்டம்பர் 16

குன்றிமணி அளவுகூட உணர்ச்சி குன்றாத தன் கானக் குரலால் இந்திய தேசத்தை மெய்மறக்கச் செய்தவர் எம்.எஸ்.எஸ். இசையுலகின் கலங்கரை விளக்குகளில் ஒன்றாகத் தலைமுறைகள் கடந்து அவரது இசை ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இசையுலகுக்கு அவர் அளித்துச் சென்ற கொடைகள் அதிகம். ஆனால் திரைக்கு அவர் அளித்ததோ சிறு துளி. ஆம்! எம்.எஸ். நடித்தப் படங்கள் நான்கு மட்டும்தான். ஆனால் அவை நான்குமே காலம் மறக்காத இசைக் காவியங்கள்.

இந்திய எல்லையைக் கடந்து உலகப் புகழ்பெற்ற இந்த இசைக்குயில், நடனத்தை முறையாகப் பயின்று அரங்கேற்றம் செய்தவர். தாயாரிடமிருந்து வாய்ப்பாட்டையும் வீணையை இசைக்கவும் கற்றுக்கொண்டு இளமையிலேயே அவற்றில் நிபுணத்துவம் பெற்றார். பத்து வயதில் இசைத்தட்டு வழியே நாடெங்கும் பிரபலமான எம்.எஸை “ யாரிந்த இளங்குயில்?” எனக் காண விரும்பினார் தமிழ் சினிமாவின் தந்தை, ‘புரட்சி இயக்குநர்’ கே. சுப்ரமணியம். எம்.எஸ்ஸின் மேதைமை அவரது இசையில் அடங்கியிருப்பதைக் கண்ட அவர், அவரது பாடும் திறமையின் பரிமாணங்கள் முழுமையாக வெளிப்படும் விதமாக ‘ ஸேவாஸதனம்’(1938) படத்தில் அவரை அறிமுகம் செய்தார்.

ஸேவாஸதனம் (சேவை இல்லம்)

சமூக அவலங்களைத் துணிச்சலாகக் காட்டிவந்த கே.சுப்ரமணியம், வயது முதிர்ந்தவர்கள் சிறு பெண்களை மணந்து கொள்வதையும், அத்தகைய பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்ட சிறுமிகள் கணவனாலும் அவரது வீட்டாராலும் துன்புறுத்தப்படுவதையும் இந்தப் படத்தில் எடுத்துக்காட்டினார். ஈஸ்வர சர்மா என்ற முதியவரைத் தனது பதின்வயதில் இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு உளவியல்ரீதியாகத் துன்பப்படும் சுமதி என்ற இளம்பெண் கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாடி, நடித்தார்.

அன்றைய ஆனந்த விகடன் வார இதழில் இந்தி எழுத்தாளர் முன்சி பிரேம் சந்தின் ‘பாஷார் கா ஹன்ஸ்’ என்ற இந்தி நாவல், தமிழில் மொழிபெயர்ப்புத் தொடர்கதையாக வெளியானது. அதன் உரிமையை நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கி, அதற்குத் திரைக்கதையமைத்துப் படமாக்கினார் கே.சுப்ரமணியம்.

இந்தப் படத்தில் எம்.எஸ்.ஸின் வயோதிகக் கணவனாகத் திருச்சியைச் சேர்ந்த நாடக நடிகரான எஃப்.ஜி. நடேச அய்யர் நடித்தார். இவர் பூணூலை அறுத்து வீசுவதுபோன்ற காட்சி அன்று பெரும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. இந்தக் காட்சி உட்படப் படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் பழமைவாதிகளைக் கோபப்படுத்தியதால் இயக்குநர் கே.சுப்பிரமணியத்தைத் தங்கள் சாதியிலிருந்து விலக்கிவைத்தனர். இந்தப் படத்தில் எம்.எஸ்.எஸின் குரலில் படத்தில் இடம்பெற்ற ‘மா ரமணன்’, ‘உமா ரமணன்’, ‘சியாம சுந்தர கமலவதன’, ‘ஆதரவற்றவர்க்கெல்லாம்’, ‘என்ன செய்வேன் எங்கு செல்வேன்’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் இசைத்தட்டுகளாக வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதோடு படமும் மிகப் பெரிய வெற்றிபெற்றது.

சகுந்தலை

‘ஸேவாஸதன’த்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் தனது இசைத்திறனுக்கு இடமளிக்கும் கதைகளில் மட்டும் நடித்தால் போதும் என்று தன் மனம் காட்டிய வழியில் நடந்தார். அப்படி அவர் அடுத்து நடித்த இசைச்சித்திரம்தான் ‘சகுந்தலை’ (1940). டி.சதாசிவத்துடன் இல்லற வாழ்வில் இணைந்த பிறகு ‘சந்திரபிரபா சினிடோன்’ என்ற சொந்தப் பட நிறுவனத்தைக் கணவருடன் இணைந்து தொடங்கியவர், அதன் முதல் தயாரிப்பாக மதுரை ராயல் டாக்கீஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரித்த ‘சகுந்தலை’ படத்தில் நடித்தார்.

இந்தப் படத்துக்கு டி.சதாசிவமே வசனங்கள் எழுத, படத்தை இயக்கியவர் தமிழ் சினிமாவின் முதல் காட்சி மொழி இயக்குநராகப் பெயர்பெற்ற எல்லீஸ் ஆர் டங்கன். ‘சகுந்தலையாக எம். எஸ் நடிக்கும்’ என்று விளம்பரம் செய்யப்பட்ட இந்தப் படத்தின் இசையை அதுவரை இருந்துவந்த வழக்கமான அளவில் அல்லாமல் சற்றுப் பெரிய அளவிலான இசைத்தட்டுகளில் வெளியிட்டு இசை ரசிகர்களைத் திகைக்க வைத்தது ஹெச்.எம்.வி ரெக்கார்ட்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் மன்னன் துஷ்யந்தனாக இசையுலகின் மற்றொரு முடிசூடா மன்னர் ஜி.என். பாலசுப்ரமணியம் நடித்தார். எம்.எஸ்ஸும், ஜி.என்.பி.யும் இணைந்து பாடிய ‘பிரேமையில் யாவும் மறந்தோமே’, ‘மனமோகனாங்க அணங்கே’ ஆகிய ‘டூயட்’ பாடல்களைக் கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். இந்தப் பாடல்கள் தவிர எம்.எஸ். பாடிய, ‘மனம் குதூகலிப்பதும் ஏனோ’, ‘எந்தன் இடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன’, ‘ஆனந்தம் என் சொல்லுவேன்’, ‘எங்கும் நிறைநாத பிரம்மம்’ முதலான பாடல்கள் அவரை இசையுலகின் முடிசூடா ராணியாக்கின.

துஷ்யந்தன் சகுந்தலைக்கு அணிவித்த முத்திரை மோதிரத்தை விழுங்கிய மீனைப் பிடித்து இரண்டாக வெட்டி பங்கிட்டுக்கொள்ளும் மீனவர்களாகக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் டி.எஸ்.துரைராஜும் நடித்த நகைச்சுவைக் காட்சி மிகவும் பிரபலமானது. இந்தக் காட்சியை சென்னை அடையாற்றில் வெளிப்புறப் படப்பிடிப்பாகப் படம்பிடித்திருந்தார் இயக்குநர் டங்கன்.

சாவித்திரி

திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார் எம்.எஸ். ஆனால் ஆனந்த விகடன் பத்திரிகைப் பணியிலிருந்து விலகியிருந்த கணவர் சதாசிவம் அவரது நண்பர் ரா.கிருஷ்ணமூர்த்தி இருவரும் இணைந்து ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்க விரும்பினார்கள். அதற்குப் பெரும் முதலீடு தேவைப்பட்டது. எனவே ஒய்.வி. ராவ் அழைப்பை ஏற்று சாவித்திரி (1941) படத்தில் நாரதராக ஆண் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் எம்.எஸ்.எஸ். இந்தப் படத்தில் நாரதராக நடிக்கத் தரப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை முதலீடாக வைத்தே ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப்பட்டுப் பெரும் புகழ்பெற்றது. ‘மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர்பதமே’, ‘மங்களமும் பெறுவார்’ ‘ப்ருஹிமுகுந்தேத்தி’, உள்பட எம்.எஸ்.எஸ் பாடிய பாடல்கள் படத்தை வெற்றிபெறச்செய்தன.

‘சாவித்திரி’ படத்தில் நடிப்பதற்காக கொல்கத்தா செல்லும் வழியில் காந்தியடிகளின் சேவா கிராமத்துக்குச் சென்று அங்கே அண்ணலைத் தரிசித்த எம்.எஸ்., அவர் முன்னால் அமர்ந்து பிரார்த்தனைப் பாடல்களை மனமுருகப் பாடினார். அவரது குரலில் மெய்மறந்த காந்திஜி “ ‘ஹரி தும் ஹரோ ஜனகீபீர்’ என்ற பஜன் பாடலை எம்.எஸின் குரலில் எனது பிரார்த்தனையில் இடம் பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். பின்னர் காந்திஜிக்குப் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலை எம். எஸ் பாடியபோது அது இந்தியர்களின் உள்ளத்தில் உணர்வுபூர்வமாய் ஊடுருவிச் சென்றது.

மீரா

கிருஷ்ண பக்தை மீராவாகவே எம்.எஸ்.எஸ். மாறிவிட்டிருந்த அவரது கடைசிப் படம் மீரா (1945). மீராவின் கணவர் மேவார் அரசராக நாகய்யா நடித்திருந்தார். ‘சகுந்தலை’க்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் எம்.எஸ்ஸை இரண்டாவது முறையாக இயக்கியவர் எல்லீஸ் ஆர்.டங்கன். மீண்டும் கணவரின் தயாரிப்பு. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியின் வசனம், காலத்தால் அழியாத பாடல்களை இந்தப் படத்துக்காக இசையமைத்த எஸ்.வி.வெங்கட்ராமன் என விரியும் எல்லாப் பெருமைகளையும் சிறு புள்ளிகளாக்கிவிடுகிறது எம்.எஸ்.எஸ்.ஸின் குரலில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘காற்றினிலே வரும் கீதம்’ என்ற அமரத்துவம் வாய்ந்த பாடல்.

கண்ணனைத் தேடி துவாரகை நோக்கிப் பயணிக்கும் மீரா பாயாக ‘எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ’ என்று பாடும் பாடலில் ரசிகர்கள் திரையரங்கில் கண்ணீர் வடித்திருக்கிறார்கள். எம்.எஸ்ஸின் நூற்றாண்டில் அவர் காற்றில் கலந்திருப்பதை அவரது திரைகானங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x