Published : 22 Jul 2016 12:28 PM
Last Updated : 22 Jul 2016 12:28 PM

சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய படங்கள்

முதல் சினிமா வாய்ப்பு ரஜினிக்கு அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடவில்லை கனவைச் சுமந்துகொண்டு, முதலில் நாடக வாய்ப்பு தேடித் திரிந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கண்டக்டர் வேலையிலிருந்தும் டிஸ்மிஸ் ஆகியிருக்கிறார். அப்படியும் அவர் மனம் கனவைக் கைகழுவ நினைக்கவில்லை. அது எழுபதுகளின் தொடக்கம். தங்க இடமின்றி, வறுமை, பசியைப் பொறுத்துக்கொண்டு சென்னை பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சிவாஜிராவ் கெய்வாட்.

ஒரு முறை பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுடன் உரையாற்ற வந்திருக்கிறார் இயக்குநர் பாலசந்தர். அப்போது தீர்க்கமான பார்வையுடன் தன்னை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த சிவாஜி ராவைக் கவனித்தார் பாலசந்தர். அந்த வித்தியாசமான முகமும், கண்களும் கோதிவிடப்பட்ட தலைமுடியும் பாலச்சந்தரை அந்தக் கணமே ஈர்த்தன.

அழைத்தார் குரு

உரையாடல் முடிந்து கிளம்பியபோது, தன்னை அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு சிவாஜி ராவிடம் கூறிவிட்டுச் சென்றார். அடுத்த நாள் காலையே பாலசந்தரைப் பார்க்க அவரது அலுவலகத்தில் இருந்தார் சிவாஜி ராவ். “இப்போது, அபூர்வ ராகங்கள் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் சின்னக் கதாபாத்திரம்தான். பண்ணுகிறாயா? ஆனால் ரொம்ப பவர்ஃபுல்” என்றதும் ராவின் கண்களில் ஒளிர்ந்த வெளிச்சத்தைப் பார்த்து, “அந்த ரோலில் உன்னை அறிமுகம் செய்யப்போகிறேன்” என்றார். அடுத்த சில தினங்களிலேயே ‘அபூர்வ ராகங்கள்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சீக்கிரமே படமும் முடிந்தது. படத்தில் டைட்டில் தயாராவதற்கு முன்பு சிவாஜிராவை அழைத்தார் பாலசந்தர்.

அப்போது நடந்ததை ரஜினியே இப்படிச் சொல்கிறார்:

“டைட்டிலில் பெயர் போட வேண்டும். சிவாஜிராவ் என்ற பெயர் வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் வேண்டாம். `ராவ்’ என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது’ என்றார். `நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்க சார்!’ என்று கூறிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.

என் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்தேன். `சரத்’, ‘ஆர்.எஸ்.கெய்க்வாட்’ என்ற இரண்டு பெயர்கள் என் மனதில் இருந்தன. அதைச் சொன்னேன். நண்பர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக, ‘நன்றாக இல்லை’ என்று கூறினார்கள்.

மறுபடியும் பாலசந்தர் சார்கிட்ட போய், “நீங்களே ஆசிர்வாதம் செய்து ஒரு பெயர் வையுங்க!” என்றேன்.

அந்த நாள், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று பவுர்ணமி.

பாலசந்தர் சார் சொன்னார்: “என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் காந்த், மற்றவன் ரஜினிகாந்த். காந்த் என்ற பெயரை ஏற்கெனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது. ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளாக நினைத்துக்கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன்” என்றார்.

இப்படி பாலசந்தர் எனக்குப் பெயர் சூட்டியதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டேன். ‘நல்ல வில்லனா வரணும் என்று ஆசிர்வாதம் செய்யுங்க’ என்றேன்.

‘வில்லன் எதுக்கப்பா! நீ பெரிய நடிகனாக வருவே. பார்த்துக்கொண்டே இரு!’ என்றார் பாலசந்தர் சார்.”

சிவாஜிராவ் கெய்க்வாடுக்கு பாலசந்தர் ரஜினிகாந்த் என்று பெயர் சூட்டியது அன்று அசாதாரண நிகழ்வு. இன்றும் ரஜினியின் நினைவுகளில் அதுவே மறக்க முடியாத தருணமாக இருக்கும். அப்படிப்பட்டவரைத் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாற்றியதில் ‘டான்’ கதைகளுக்கே அதிக பங்கு இருப்பதை அவரது திரைப்பயணத்தை ஆய்வு செய்தால் அறிந்துகொள்ள முடியும்.

ரஜினியை மாற்றிப்போட்ட பில்லா

ரஜினிகாந்த்துக்கு 1980 ஒரு முக்கியமான வருடம். ஏராளமான வில்லன் படங்கள், கமல் ஹாஸனோடு இணைந்து நடித்த குணச்சித்திர வேடங்கள் என்பதையெல்லாம் தாண்டி, 1978-ல் ‘பைரவி’ திரைப்படம் மூலமாகக் கதாநாயகனாக ரஜினிகாந்த் அறிமுகம் ஆகி, ‘முள்ளும் மலரும்’, ‘அவள் அப்படித்தான்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்கள் மூலமாக ஒரு அழுத்தமான நடிகராக ரஜினிகாந்த் மாறியாயிற்று.

இந்தக் காலகட்டத்தில், 1980 ஜனவரியில் ‘பில்லா’ வெளியாகிறது. அமிதாப் நடித்த ‘டான்’ படத்தின் ரீமேக். தமிழில் பிரமாதமாக ஓடியது. ரஜினிகாந்த், ஒரு சூப்பர் ஸ்டார் ஆவதற்கான ஆரம்ப முயற்சிகளில் பலமான அஸ்திவாரம் பில்லாவே. இக்காலகட்டத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகியோரே பழைய தலைமுறை ஹீரோக்கள். இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அலட்சியமான ஒரு உடல்மொழியோடு ரஜினிகாந்த் என்ற இளைஞனைக் கதாநாயகனாகத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுசேர்த்தது ‘பில்லா’.

‘பில்லா’வுக்குப் பின்னர் ‘அன்புக்கு நான் அடிமை’, ‘காளி’, ‘ஜானி’, ‘பொல்லாதவன்’ என்று வரிசையாக வெளிவந்த ரஜினிகாந்த்தின் அந்த வருடத்திய ஹிட்களுக்கு சிகரம் வைத்தாற்போல் 1980 டிசம்பரில் ‘முரட்டுக் காளை’ வெளியாகி, பிரம்மாண்ட ஹிட் ஆகிறது.

பாலிவுட்டிலும்

இதன் பின்னர் அடுத்த சில வருடங்களில் வெளியான தொடர்ச்சியான சூப்பர் ஹிட்களால் இயல்பாகத் தமிழகத்தின் வணிக சினிமாவின் தலையாய இரண்டு இடங்களில் ரஜினிகாந்த்துக்கு ஒரு இடம் அமைகிறது. தமிழ் மட்டுமன்றி இந்திக்கும் ரஜினிகாந்த் செல்கிறார். அவரது முதல் இந்திப் படமான ‘அந்தா கானூன்’ (சட்டம் ஒரு இருட்டறையின் ரீமேக்), 1983-ல் வெளியாகி நன்றாக ஓடுகிறது. இதன் பின்னர் வரிசையாக இந்திப் படங்களில் நடிக்கிறார். எல்லாக் கதாபாத்திரங்களுமே தமிழில் அவர் செய்துவந்த ‘பிரம்மாண்டமான ஹீரோ’ என்ற இமேஜை முன்னிறுத்துபவையே (வானில் சிகரெட்டைத் தூக்கிப்போட்டு துப்பாக்கியில் சுட்டுப் பற்றவைப்பதைப் போன்ற காட்சிகளை ஒரு ஹீரோ செய்வது).

நூறாவது படமாக ‘ ராகவேந்திரர்’ 1985-ல் வருகிறது. அதுவரை ரஜினிகாந்த் செய்துவந்த சூப்பர் ஹீரோ வேடமாக இல்லாமல், திடீரென ஒரு ஆன்மிகவாதியாக நடிக்கிறார். பின்னர் சரமாரியாக அவரது வழக்கமான பாணிப் படங்கள் வெளிவருகின்றன. இந்த நிலை இன்று வரை ரஜினிகாந்த்துக்குத் தொடர்கிறது. லிங்கா வரையிலுமே ரஜினிகாந்த் அவரது ஃபார்முலா படங்களில்தான் நடித்துவந்தார். எனினும், இனி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதை ‘கபாலி’யின் மூலம் தன் ரசிகர்களுக்கு அவர் உணர்த்திவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x