Published : 16 Jun 2017 10:31 AM
Last Updated : 16 Jun 2017 10:31 AM
‘வனமகன்’ திரைப்படம் வெளியாகும் முன்பே, டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்துப் பல்வேறு முன்னணி இயக்குநர்கள் தங்களுடைய படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு சாயிஷா சைகலிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகவுள்ள சாயிஷா சைகலிடம் பேசியதிலிருந்து...
பொதுவாக நடிகைகள் தெற்கே இருந்து இந்தித் திரையுலகில்தான் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், நீங்களோ தமிழ்ப் படங்களில் அதிகக் கவனம் செலுத்திவருகிறீர்களே?
‘வனமகன்’ படத்தில் விஜய் எனக்கு மிக அற்புதமான கதாபாத்திரத்தை வழங்கியுள்ளார். அந்தக் கதாபாத்திரம் மிகவும் கனமானது. இப்படி ஓர் அறிமுக வாய்ப்பு யாருக்கும் கிடைத்துவிடாது. அதுமட்டுமல்லாது எனக்குத் தென்னிந்திய மக்கள் மீது அலாதி பிரியம் இருக்கிறது. தென்னிந்தியாவில் இருப்பது குடும்பத்தில் இருப்பதைப் போல் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதை நான் நேசிக்கிறேன்.
நீங்கள் சினிமா பின்னணி கொண்டவர் எனக் கேள்விப்பட்டோமே...
ஆம். எனது குடும்பத்தில் நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், என்னை நடிப்புத்துறைக்காக யாரும் ஊக்குவித்து வளர்க்கவில்லை. மிக எளிமையாக ஆரவாரமில்லாமல் வளர்க்கப்பட்டேன். ஆனால், நான் திலீப் குமார் போன்ற சாதனையாளர்களுடன் வளர்ந்தேன் என்பதை நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
‘வனமகன்’ இசை வெளியீட்டு விழாவில் பலரும் உங்கள் நடனத் திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசினர். உங்களுக்கு நடனத்தில் எப்படி விருப்பம் வந்தது?
நடனம் எனது மிகப்பெரிய ஆர்வம். நடன ஆர்வம் என் ஆழ்மனதில் ஊற்றெடுத்தது. என் சிறு வயதிலிருந்தே நான் பல்வேறு நடன வகைகளைக் கற்றிருக்கிறேன். கற்றலுக்குக் காலம் கிடையாது. ஆதலால் இன்றளவும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். நடனமாடுவது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
‘டேம் டேம்’ பாடலுக்குப் பிரபு தேவா நடன வடிவமைப்புச் செய்துள்ளார். அவர் தற்போது ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தை இயக்குகிறார். அதில் நீங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளீர்கள். அதைப் பற்றி..
‘வனமக’னில் பிரபுதேவா நடன இயக்கத்தில் நான் ஆடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். தற்போது அவருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். அவர் என் திறமை மீது நம்பிக்கை கொண்டு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதே எனக்குக் கிடைத்த கவுரவம். விஷால், கார்த்தி போன்ற பெரிய நட்சத்திரங்கள் என்னுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டதை எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன். அவர்கள் என்னைப் பற்றிப் பாராட்டிப் பேசிய வார்த்தைகளுக்கு ஏற்ப எப்போதுமே நடப்பேன். படத்தைப் பற்றி பிரபுதேவா பேசுவார். நான் இப்போதைக்கு ஏதும் கூற இயலாது.
இயக்குநர் ஏ.எல்.விஜய் தனது படங்களில் ஹீரோயின்களை மிகவும் உயர்த்திக் காட்டுவார். ‘வனமக’னில் உங்கள் கதாபாத்திரம் குறித்துச் சொல்லுங்கள்...
நான் சந்தித்தவர்களில் விஜய் ஓர் அற்புதமான மனிதர். என் மூத்த சகோதரர் அவர். ‘வனமக’னில் அவர் எனக்குக் கொடுத்த கதாபாத்திரத்துக்காக அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். அவரிடம் நான் நிறையப் பாடம் கற்றுக்கொண்டேன். அப்படத்தில் எனது கதாபாத்திரம் நவநாகரிக நகர மங்கையைப் போன்றது. அப்படிப்பட்ட மங்கை பழங்குடியின நபர்மீது காதல் கொள்கிறாள். இந்தப் படம் எளிமையான வாழ்க்கையில் பொதிந்துகிடக்கும் மகிழ்ச்சியைக் காட்டுகிறது.
ஜெயம் ரவியைவிடப் படத்தில் உங்களுக்கு அதிகமான வசனங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறதே...
ஜெயம் ரவி ஒரு ஜென்டில்மேன். படத்தில் நான் அதிக வசனங்கள் பேச அவர் அனுமதித்திருக்கிறார் என்பதிலிருந்தே அவர் அவரது நடிப்பு மீதும் திறமை மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை உணரலாம். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படத்துக்காக வசனங்களிலும் நடனத்திலும் அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க விஜய் - ஜெயம் ரவி படம். நான் திரைக்குப் புதிது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு மகிழ்விப்பார்கள் என நம்புகிறேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT