Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM
உள்ளம் உருகுதய்யா என்ற பாடலைக் கேட்பவர்களின் உள்ளத்தையும் உருக்கும் வண்ணம் பாடியவர். சட்டி சுட்டதடா என்ற பாடலைக் கேட்டால் சாந்தி கிடைக்கும். ஓடியோடி உழைக்கணும் என்ற பாடலைக் கேட்டால் தொழிலாளி படும் பாடு புரியும். இப்படி எல்லா உணர்ச்சிகளையும் தன் குரலில் வெளிப்படுத்தியிருக்கும் அவரின் குரலுக்கு வசமாகாதவர்கள் எவரும் இல்லை. அவர் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடிய டி.எம்.எஸ்.!
தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்திரராஜன் - சுருக்கமாக டி.எம்.எஸ். மார்ச் 24 அன்று அவரின் 92ஆவது பிறந்த தினம். டி.எம்.எஸ். பாடிய பாடல்களைக் கேட்டே, அந்தக் குறிப்பிட்ட பாடலில் நடித்திருக்கும் நடிகர் யார் என்று சொல்லிவிடலாம். இந்த வாய்ஸ் மாடுலேஷன் டி.எம்.எஸ்ஸின் தனிப்பட்ட சிறப்பு. இப்படிச் சரித்திரம் படைத்த இந்தச் சாதனைக் குரலோன், கடந்த ஆண்டு மே 25 அன்று காலமானார். டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை அவர் உயிருடன் இருக்கும் போதே ஆவணப்படமாக எடுத்திருக்கிறார் விஜயராஜ். அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் உதவியாளர்.
‘இமயத்துடன்’ என்ற தலைப்புடன் உருவாகியிருக்கும் இந்த ஆவணப்படம் 150 வாரங்களுக்கு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது . இந்தத் தொடரில் டி.எம்.எஸ்.ஸோடு இணைந்து பணிபுரிந்த பல பிரபலங்கள் டி.எம்.எஸ். குறித்துப் பேசியவை அப்படியே ஆவணமாக்கப் பட்டிருக்கின்றன. லதா மங்கேஷ்கர், முகமது ரஃபியின் குடும்பம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கமல், ரஜினி என அந்தப் பட்டியல் பெரியது.
“இந்தத் தொடரில் சிறு வயது டி.எம்.எஸ்.ஸாக அவரின் பேரன் சுந்தரையே நடிக்கவைத்திருக்கிறேன். மதுரையில் டி.எம்.எஸ். படித்த செயின்ட் மேரி பள்ளி, அவர் பாட்டு கற்றுக் கொண்ட வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் பழுத்த முதுமையில் அவரைக் கொண்டு போய் பேசவைத்தபோது டி.எம்.எஸ். ஸின் முகத்தில் மகிழ்ச்சியும் உணர்ச்சியும் கரைபுரண்டது” என்று சொல்லும் இயக்குநர் விஜயராஜ் மேற்கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
“டி.எம்.எஸ். முதல்முதலாகப் பாடிய சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு அவரை அழைத்துச் சென்று பேசவைத்தபோது நெகிழ்ந்து போய் பேசினார். இன்றைக்கு சென்ட்ரல் ஸ்டூடியோ கிடையாது.
கோவை பட்சிராஜா ஸ்டூடியோ வில்தான் எம்.ஜி.ஆருக்காக எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே பாடலை மலைக்கள்ளன் படத்திற்காக பாடினார். பெரும் முயற்சிக்குப் பின் அந்த ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த ஸ்டூடியோவும் இப்போது இல்லை.
சேலம் மாடர்ன் தியேட்டரில் `தேவகி’ படத்திற்காக டி.எம்.எஸ். நாயகனாக நடித்திருக்கிறார். இந்த ஸ்டூடியோவும் இன்றைக்கு இல்லை. இதுபோன்ற இடங்களில் பழைய நினைவுகளில் மூழ்கி டி.எம்.எஸ். உணர்ச்சிப் பிழம்பாகப் பேசியதை இந்தத் தொடரில் காணலாம்.
இந்தியாவில் எங்கும் கிடைக்காத டி.எம்.எஸ். அவர்களின் பாடல்களைக் காட்சிகளோடு கொடுத்து உதவிய மலேசிய அன்பர் கிறிஸ்தபர் கொலம்பியா, அரிய தகவல்களை தந்து உதவிய திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், தயாரிப்பாளர் சங்ககிரி சுவாமிநாதன் ஆகியோரின் உதவிகளை மறக்கவே முடியாது.
அதேபோல இறப்பதற்கு முன் இந்த ஆவணப்படத்தை அவர் கண்டு களித்த அரிய தருணத்தை மறக்கமுடியாது” என்று நெகிழ்ந்து போகிறார் விஜயராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT