Published : 24 Jun 2016 11:53 AM
Last Updated : 24 Jun 2016 11:53 AM

ஹாலிவுட் நம்மை விழுங்கிவிடும்!- ரெசூல் பூக்குட்டி பேட்டி

ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ஆஸ்கர் விருது வென்றவர் ரெசூல் பூக்குட்டி. அதற்குப் பிறகு பல்வேறு முக்கியமான படங்களுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்துவருகிறார். ‘ரெமோ' படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிக்காகச் சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதிலிருந்து…

‘ரெமோ' ஒரு காதல் கதை என்கிறார்கள். அதில் உங்களுடைய பணியைப் பற்றிச் சொல்லுங்கள்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் பாக்கியராஜ் என்னிடம் கூறியபோது, எனக்கு அதன் ஆழமும், என்னை ஏன் அணுகினார்கள் என்பதற்கான காரணமும் புரிய வந்தது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை அவரது வழக்கமான உடல்மொழியுடன் நீங்கள் பார்க்கலாம், ஆனால் பெண் குரலோடு. அது உங்களுக்குச் சற்றும் நெருடலாக இருக்காது.

சிவகார்த்திகேயன் பெண் வேடம் தரிக்கும்போது அவருக்கு ஒரு பெண்ணை வைத்து டப்பிங் செய்வதால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்துக்கான முழு நியாயம் செய்துவிட முடியாது என்பதால் சிவகார்த்திகேயனின் குரலையே சில தொழில்நுட்ப மாறுதல்களுடன் பயன்படுத்துவது என முடிவு செய்தோம். குரல் மாற்றம் அவ்வளவு இயல்பாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

‘2.0’ படத்தில் பணியாற்றுவது பற்றி...

உண்மையில் ‘2.0’ படத்தால் நான் மிகப் பெரிய சவாலுக்குள் சிக்கியிருக்கிறேன். காரணம் ஷங்கர் எனும் பிரம்மாண்டம். நான் இப்போது எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி நிற்கிறேன். அதன் உச்சியைத் தொட வேண்டும். நான் ஒரு முறை ஷங்கரிடம் சொன்னேன், “நான் கேமராவையும், ஷாட்களையும், ஓசைகளையும் இன்னும் பலவற்றையும் ஒருசேர கவனிக்க வேண்டியிருக்கிறதே” என்றேன். அதற்கு அவர் சொன்னார், “ஆமாம், செய்யுங்கள். நீங்கள் ஒரு வித்தகராயிற்றே” என்று. கதையை ரசிகர்களுக்குக் கடத்தும் விதம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலுமே 2.0 ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும்.

நீங்கள் சவுண்ட் மிக்ஸிங்கை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு இந்தியாவுக்கு நோபல் பரிசு வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. ஆனால், எனக்கு திடீரென சினிமா மீது காதல் ஏற்பட்டது. ஒலியால் ஈர்க்கப்பட்டேன். அதனால், இந்தியாவுக்கு நோபல் பரிசுக்கு பதிலாக ஆஸ்கர் விருது வென்றிருக்கிறேன்.

கீர்த்தி சுரேஷுக்கு ஒலிப் பாடம் நடத்தும் ரெசூல்

சவுண்ட் மிக்ஸிங் என்பது ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

ஒரு படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் அவருடைய பணியே மிக முக்கியமானது என்றே கூறுவர்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. எனது பணியில் ஒரு சாதுர்யம் இருக்கிறது. ஒரு படத்தில் பளிச்சிடும் சிறந்த ஒளிப்பதிவோ, சிறந்த கலை அம்சமோ, சிறந்த உடை அலங்காரமோ இருந்தால் அது ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாகும். ஆனால், ஒரு நல்ல ஓசையைக் காண முடியாது.

அதை ரசிகர்கள் உணர வேண்டும். எனவே, எனது தொழில்நுட்பத்தின் சவாலே மற்ற பிற நல்ல தொழில்நுட்பங்களை விஞ்சி நிற்கும் வகையில் ஓசையைச் செதுக்க வேண்டும் என்பதே. இதைத்தான் சாதுர்யமாகச் செய்கிறேன். ரசிகர்களின் ஆழ்மன உணர்வுகளை வருட வேண்டும். இந்த இடத்தில் இப்படியான ஓசை எதற்காக என நீங்கள் யோசிக்க மாட்டீர்கள்; மாறாக அத்தருணத்தில் அதை சிலாகித்துக்கொண்டிருப்பீர்கள். எனவே, எனது தொழில்நுட்பம் மனித உணர்வுகளுடனான ஒரு பயணம்தான்.

‘இந்தியாவின் மகள் நிர்பயா’ படத்திற்காக ஆசியாவிலிருந்து முதன்முறையாக கோல்டன் ரீல் விருதைப் பெற்றிருக்கிறீர்கள் அல்லவா?

எனது பணியை அங்கீகரித்து வழங்கப்பட்ட மிகப் பெரிய விருது அது. நிச்சயமாக மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், அதேவேளையில் எனக்கு விருது பெற்றுத் தந்த அந்தப் படத்தை எனது தேச மக்களால் பார்க்க முடியவில்லை என்பது மிகவும் வேதனையானது.

நமது அரசு அந்த ஆவணப்படத்துக்குத் தடை விதித்தது துரதிர்ஷ்டவசமானது. அந்த ஆவணப்படம் ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் திரையிடப்பட வேண்டியது. நமது பெண்களை மதிக்க வேண்டும் என்பதை நம் சமூகத்துக்குப் படிப்பினையாக வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் அந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம்.

அதே வேளையில் படத்தைத் தயாரித்தவர்கள் தரப்பிலும் சில தவறுகள் இருக்கின்றன. ஒரு கிரிமினல் உருவாவதில் சமூகத்தின் பங்கைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் மகள் குறித்து நான் பேசியபோது பாலிவுட் தோழர்கள் எனக்கு மிகப் பெரிய மரியாதை செய்தனர்.

ஆஸ்கர் விருதுக்குப் பிறகு சவுண்ட் மிக்ஸிங்குக்கான தேவையும், அங்கீகாரமும் இந்திய சினிமாவில் மாறியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த நிலை வேறு, தற்போது சவுண்ட் மிக்ஸிங்குக்கு இருக்கும் அங்கீகாரம் வேறு. இந்த மாற்றமே மிக மிக வரவேற்கத்தக்கது. இந்த ஆண்டு மட்டுமே, சவுண்ட் மிக்ஸிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 படங்கள் செய்திருக்கிறேன். சமகாலத் திரைப்படங்களில் ஓசையும் முக்கியக் கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கிறது.

ஒரு படம் வெளியாகும்போது விமர்சனங்களில் சவுண்ட் மிக்ஸிங் பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை எனும்போது வருத்தம் ஏற்படுகிறதா?

நிச்சயமாக இல்லை. சவுண்ட் மிக்ஸிங் குறித்து விமர்சிக்க அதுகுறித்த கூடுதல் புரிதல் வேண்டும். அதேவேளையில், ஒருமுறை ஒரு செய்தித்தாளில் எனது ஒரு படத்துக்கான விமர்சனத்தில் இந்தப் படத்தை அதன் சவுண்ட் டிசைனுக்காகவே பாருங்கள் என எழுதப்பட்டிருந்தது. அது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.

இந்திய சினிமா ஹாலிவுட்டுக்கு இணையாக வளர்ந்துவிட்டதா?

இதைப் பற்றி நான் 5 ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘அவதார்' படத்தின் இந்திய வசூல் ரூ.54 கோடி, ‘பாஸ்ட் அண்ட் பியூரி’ஸின் வசூல் ரூ.104 கோடி, ‘ஜங்கிள் புக்’கின் இந்திய வசூல் ரூ.200 கோடி. இந்த மூன்று படங்களின் புரமோஷனுக்கும் அவர்கள் இந்தியாவில் பெரிதாக எந்தச் செலவுமே செய்யவில்லை.

ஆனால் நாம் வசூலை அள்ளித் தருகிறோம். இதே நிலை தொடர்ந்தால் ஹாலிவுட் படங்கள் நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடும். இந்த நிலையில்தான் ஷங்கர் போன்ற இயக்குநர்கள் மிகவும் அவசியமானவர்கள். பிரம்மாண்டத்தின் தேவை இங்குதான் சமனாகிறது. இந்திய சினிமாவில் இத்தகைய படைப்புகள் அதிக அளவில் வர வேண்டும். இல்லாவிட்டால் பிரெஞ்சு படங்கள் தங்கள் அடையாளத்தைத் தொலைத்ததுபோல் நாமும் தொலைக்க நேரும்.

நல்ல ஓசையைக் காண முடியாது. அதை ரசிகர்கள் உணர வேண்டும். எனவே, எனது தொழில்நுட்பத்தின் சவாலே மற்ற பிற நல்ல தொழில்நுட்பங்களை விஞ்சி நிற்கும் வகையில் ஓசையைச் செதுக்க வேண்டும் என்பதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x