Last Updated : 24 Sep, 2016 09:29 AM

 

Published : 24 Sep 2016 09:29 AM
Last Updated : 24 Sep 2016 09:29 AM

மொழி கடந்த ரசனை 02: நயனம் என்ற தோட்டத்திற்கு மெதுவாக வா

அமரத்துவம் பெற்ற பல இந்திப் படப் பாடல்களின் ஆசிரியர்கள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்கள். ஆனால் அந்த மொழி அவர்களின் கவித்திறனை வெளிக்கொணர்வதில் பெரும் பங்கு ஆற்றியது. பஞ்சாபி, உருது, போன்ற இந்தி மொழிக்கு நெருக்கமான நடைமுறைகளை உடைய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட அந்தக் கவிஞர்கள் எழுதிய பாடல்கள் மொழியைத் தாண்டிய அகில இந்திய உணர்வுகளை ரசிகர்களுக்கு அளித்தன.

பஞ்சாபி மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராஜேந்திர கிஷன் என்ற இந்தித் திரைப்படப் பாடலாசிரியர் அப்படிப்பட்ட விளக்கத்துக்கு மிகவும் பொருத்தமானவர். ராஜேந்திர கிருஷன் என்கிற ராஜேந்திர கிஷன் தற்போதைய பாகிஸ்தான் பிரதேசமாக விளங்கும் டுகல் பகுதியில் பிறந்தவர். தேசப் பிரிவினைக்கு முன்னர் அப்பகுதியில் பேச்சு மொழியாக பஞ்சாபியும் இலக்கிய மொழியாக இந்தியும் கவிதை, நாட்டிய மொழியாக உருதுவும் போற்றப்பட்டன. மத, மொழி வேறுபாடு இல்லாமல் விளங்கிய இச்சூழல் மொழி வரையறை இல்லாத கவி உணர்வு பெருகிட ஏற்றதாய் இருந்தது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்துப் பண்டிகைகளின்போது, பத்திரிகைகள் உருதுக் கவிதைப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கின.

பணக்காரப் பாடலாசிரியர்

இந்தப் பின்புலத்தில் வளர்ந்த ராஜேந்திர கிஷன், பள்ளி நாட்களிலிருந்தே இந்தி, உருதுக் கவிதைகள் எழுதியதில் வியப்பில்லை. இந்தச் சங்கம உணர்வு பின்னர் அவர் மும்பை சென்று ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் பாடலாசிரியராகவும் பரிமளிக்க அடிகோலியது.

ராஜேந்திர கிஷனைப் பற்றி, அதிகம் அறிந்திராத ஆச்சரியமான ஒரு தகவலும் சுவையானது. தமிழ் மொழியை நன்கு அறிந்திருந்த ராஜேந்திர கிஷன் 18 தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.வி மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் உருவான ‘பெண்’, ‘ரத்தபாசம்’, ‘நல்லபிள்ளை’ ஆகியவை இவற்றில் அடங்கும்.

ஒரு சமயம் இவருக்கு லாட்டரியில் கிடைத்த 46 லட்சம் ரூபாய் ராஜேந்திர கிஷனை அக்காலத்திய மிகப் பணக்காரத் திரைப்படப் பாடலாசிரியராக ஆக்கியது.

ராஜேந்திர கிஷன் எழுதிய சில கவித்துவம் மிக்க திரைப் பாடல்கள், அவை இடம் பெற்ற படங்கள், அதற்கு இசை அமைத்தவர்கள், பாடல்களைப் பாடியவர்கள் மற்றும் அவற்றில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பற்றிப் பார்க்கலாம்.

- ராஜேந்திர கிஷன்

திரைப் பயணம்

1940 வரை சிம்லாவில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திர கிஷன் பம்பாய் வந்து திரைத் துறையில் நுழைய முயன்ற பொழுது அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு திரைக்கதை எழுதும் பணி. ‘அமர்கஹானி’, ‘படிபஹன்’ போன்ற சில படங்களுக்குத் திரைக்கதை எழுதிய பின்னர் 1951-ம் ஆண்டு அவருக்குக் கிடைத்த ‘அல்பேலா’, ‘ஆராம்’ ஆகிய பாடல் வாய்ப்புக்கள் அவரை அடுத்த 60 வருடங்களுக்கு இந்தித் திரை உலகின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவராக ஆக்கியது.

1951-ல் வெளிவந்த அல்பேலா (வசீகரன்) என்ற இந்தித் திரைப்படம் இன்றுவரை மும்பை மாஹிம் பகுதியில் உள்ள சித்ரா டாக்கீஸ் அரங்கிலும் பூனே நகரின் பல திரை அரங்குகளிலும் மீண்டும் மீண்டும் திரையிடப்படுகிறது. ‘நல்ல பிள்ளை’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு, அதன் இசை அமைப்பாளர் ‘சி.ராமச்சந்திரா’ என்று அழைக்கப்பட்ட சித்தால்கர் ராமச்சந்திரா மற்றும் படத்தின் பாடல்களை எழுதிய ராஜேந்திர கிஷன் ஆகியோரே முக்கியக் காரணமாக விளங்கினர்.

மறக்க முடியாத தாலாட்டு

அல்பேலா படத்திற்காக ராஜேந்திர கிஷன் எழுதிய ஒரு பாடல் ‘லோரி’ என்று இந்தியில் அழைக்கப்படும் தாலாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தது. குழந்தைகளைத் தூங்கவைக்கத் தாய்மார்கள் பாடும் இந்த வடிவத்தில் கதாநாயகனின் திருமணமாகாத தங்கை பாடுவதாக அமைந்தது. எளிய வரிகளில் அமைந்த ஒரு சிறந்த பாடல் இது.

‘தீரே ஸே ஆஜா ரீ நிந்தியா தீரே ஸே ரீ அக்கியன் மே

சுப்கே நயன் கீ பகியன் மே’ என்று தொடங்கும் இப்பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

‘மெதுவாக வா தூக்கமே மெதுவாக, கண்களின் மேல் வா

நயனம் என்ற தோட்டத்திற்கு மெதுவாக வா’ என்று தொடங்கி,

‘தூக்கமே, இனிமையான கனவு என்ற கொடியை எடுத்துக்கொண்டு சென்று, சுகம் தரும் பொழுதுகள் என்ற இடத்தில் படர விடு’ என்று தொடருகிறது. ‘இரவு, நட்சத்திரங்களில் ஒளிந்துகொண்டு சந்திரனைத் தாலாட்டும்பொழுது சிரிப்பது உன் தூக்கத்தில் தெரியும்’ என்று போகும் இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் ரசிக்கத் தக்கது.

இப்பாடலில் வரும் அக்கியான், பகியன் என்ற சொற்கள் பெரும்பான்மையான இந்திப் பாடல்களில் இடம்பெறும் உருதுச் சொற்கள். ஆங்க் –ஆங்க்கே –கண் –கண்கள் என்ற இந்திச் சொல் இல்லாமல் அக்கியான் –நயன் (நயனம்) என்ற சொற்கள் பாடும்பொழுது இசை மெட்டுக்கு மிக ஏற்றதாக விளங்குகின்றன.

(ரசிப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x