Published : 12 Aug 2016 11:59 AM
Last Updated : 12 Aug 2016 11:59 AM
தி.நகர் சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் காலேஜ் ஹவுஸ் என்னும் விடுதி இருந்தது. பின்னாளில் எனக்கு நெருங்கிய நண்பனான வியட்நாம் வீடு சுந்தரம், அங்கேதான் தங்கியிருந்தார். அவரது கலைப் பயணம்‘யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்’ என்னும் பெயரில் ஒய்.ஜி. பார்த்தசாரதி நடத்திவந்த நாடகக் குழுவில் தொடங்கியது. உடை, செட், ஒளி ஒலி, ஒப்பனை என நாடக ஆக்கத்தின் சகல துறைகளிலும் சுந்தரம் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார் என்று பார்த்தசாரதியின் மகன் ஒய்.ஜி.மகேந்திரன் நினைவுகூர்கிறார்.
அப்போது பட்டு என்பவர் இந்தக் குழுவுக்கான நாடகப் பிரதிகளை எழுதிவந்தார். அவற்றை நகல் எடுத்துத் தரும் வேலை சுந்தரத்துக்கு. ஆனால், இவர் வெறுமனே நகலெடுத்துத் தராமல், சில இடங்களில் மெருகேற்றித் தந்திருக்கிறார்.
அந்த அனுபவத்தில் விரைவில் இவரே எழுதிய ‘வியட்நாம் வீடு’ என்னும் நாடகத்தில் ஒய்.ஜி.பி. நடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஒய்.ஜி.பி., இது சிவாஜி கணேசனுக்குத்தான் பொருந்தும் என்று சொல்லிவிட்டார். சிவாஜியை எப்படிக் கேட்பது என்று சுந்தரம் சோர்ந்துபோனார்.
ஆனால், அதிருஷ்டம் அவர் பக்கம் இருந்தது. இவர் தன் அக்கா அகிலாவுக்கு அந்தக் கதையைச் சொல்ல, அவர் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண் தன் கணவரிடம் அந்தக் கதையைச் சொன்னார். அந்தக் கணவர் சிவாஜியின் ஆடிட்டர். அவர் மூலம் இது சிவாஜியின் காதுக்குப் போக, சிவாஜியின் அண்ணன் வி.சி.ஷண்முகத்தைச் சந்தித்துக் கதை சொல்லும் வாய்ப்பு சுந்தரத்துக்குக் கிடைத்தது. பிறகு சிவாஜியைச் சந்தித்துக் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மிகவும் கவனமாகக் கதையைக் கேட்ட சிவாஜி, ஒரு சில இடங்களைத் திரும்பச் சொல்லுமாறு கேட்டிருக்கிறார். சிவாஜிக்குக் கதை மிகவும் பிடித்துவிட்டது. 1967, ஆகஸ்ட் 15 அன்று அரங்கேறிய இந்த நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது நாள் நாடகத்தின்போது சிவாஜி, சுந்தரத்துக்கு ‘வியட்நாம் வீடு’என்னும் பட்டத்தைக் கொடுத்தார். சிவாஜி நடிப்பில், பி.மாதவன் இயக்கத்தில் இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றியை அடைந்தது.
சுந்தரம் மேஜர் சுந்தர்ராஜனுக்காக ‘ஞான ஒளி’, ஒய்.ஜி.பி.க்காகக் ‘கண்ணன் வந்தான்’ ஆகிய நாடகங்களை எழுதினார். இரண்டும் சிவாஜிக்கு மிகவும் பிடித்துப்போயின. ‘ஞான ஒளி’, ‘கௌரவம்’ என்னும் பெயர்களில் இவை சிவாஜியின் நடிப்பில் திரைப்படங்களாயின.
‘கௌரவம்’ தொடர்பாக ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒல்லியான ஒரு நபர் கலைந்த தலைமுடியுடன் என் அப்பாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி இந்த நாடகத்தின் கதையை வரிக்கு வரி அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததைப் பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது. என் அப்பா வி.பி.ராமன் பிரபல வக்கீல். சட்டம் சம்பந்தப்பட்ட இந்தக் கதையில் தவறு எதுவும் வந்துவிடக் கூடாது என்பதால் சுந்தரத்தை என் அப்பாவிடம் அனுப்பியிருந்தார் ஒய்.ஜி.பி.
கௌரவம் படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாஜி சுந்தரத்துக்குக் கொடுத்தார். அவருக்கு உதவுவதற்காகப் பிரபல ஒளிப்பதிவாளர் வின்சென்ட் தொழில்நுட்ப இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
சுந்தரம் கதை எழுதும் காட்சியை ‘வேதம் புதிது’ கண்ணன் விவரிக்கிறார்: “மற்றவர்கள் 100 பக்கங்களில் கதை எழுதினால் இவர் 400 பக்கங்களில் எழுதுவார். அவ்வளவு குண்டு குண்டாக எழுதுவதுவார். பல வண்ணங்களில் எழுதும் பழக்கம் அவருக்கு உண்டு.” அவர் வெறும் கதை வசனகர்த்தா மட்டுமல்ல; தொழில்நுட்ப விஷயங்களும் அவருக்கு அத்துப்படி என்கிறார் கண்ணன்.
“கட், டிஸால்வ், டிரான்ஸிஷன் ஆகியவற்றின் வித்தியாசத்தை அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கதை, வசனம் எழுதுபவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பார். ஒரு எழுத்தாளர் படக்கூடிய கஷ்டங்களையும் அவர் எனக்குச் சொன்னார். கஷ்டத்திலும் நம் எழுத்துத் திறமை கைகொடுக்கும் என்றார். நம்முடைய அடையாளத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்காக எழுதித்தந்து நம்மால் சம்பாதிக்க முடியும் என்று சொன்னார். நான் என் குருவை இழந்துவிட்டேன்” என்று கண் கலங்குகிறார் கண்ணன்.
சுந்தரம் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ என்னும் நாடகத்தையும் எழுதினார். அதுவும் பிறகு படமாக்கப்பட்டது. உணர்ச்சிகரமான காட்சிகளைத் திறம்படக் கையாள்வது சுந்தரத்தின் பலம். என்றாலும் சுந்தரம் நகைச்சுவை உணர்ச்சியும் கொண்டவர் என்கிறார் ஒய்.ஜி. மகேந்திரா.
சம்பளம் தராமல் இழுத்தடித்துக்கொண்டிருந்த ஒரு தயாரிப்பாளர் வரும்போதெல்லாம் அவர் காதில் விழும்படி, “பாவத்தின் சம்பளம் மரணம். ஆனா, எனக்கு வர மாட்டேங்குதே, சம்பளம் வர மாட்டேங்குதே…” என்ற தன் வசனத்தை யாரையாவது விட்டுச் சொல்லச் சொல்லுவார். சங்கடத்தில் நெளியும் தயாரிப்பாளர் சம்பள பாக்கியைத் தந்துவிடுவாராம்.
பின்னாட்களில் நாடகங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் அவர் எழுதிக்கொண்டிருந்தார். டிவி தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். என்னுடைய நெருங்கிய நண்பனான அவரோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் பல தொடர்களில் அவர் வசனங்களைப் பேசும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன. மேடை நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று பொழுதுபோக்கு ஊடகங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டுவந்த சுந்தரத்தின் மறைவு இந்த மூன்று துறைகளுக்கும் பெரும் இழப்புதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT