Last Updated : 05 Aug, 2016 11:10 AM

 

Published : 05 Aug 2016 11:10 AM
Last Updated : 05 Aug 2016 11:10 AM

சினிமாஸ்கோப்: ஒரு ஓடை நதியாகிறது

ஒரு திரைக்கதையை எதற்குப் படமாக்குகிறார்கள்? சும்மா பொழுதுபோக்குக்காகவா? நூற்றுக்கணக்கானோர் இரவு பகல் பாராமல் உழைத்து ஒரு படத்தை உருவாக்குவதன் காரணம் வெறும் கேளிக்கையல்ல. பொழுதுபோக்குக்கான சினிமாவில்கூட ஏதாவது செய்தி சொல்லவே திரைப்படத் துறையினர் விரும்புகிறார்கள். பிறகு ஏன் சிலருடைய படங்கள் புகழப்படுகின்றன, சில படங்கள் இகழப்படுகின்றன என்று கேட்கிறீர்களா? ஒரு படம் நல்ல படமாவதும் கெட்ட படமாவதும் திரைக்கதையில் இல்லை. அந்தத் திரைக்கதையை எப்படித் திரையில் காட்சிகளாகக் காட்டுகிறார்களோ அந்தத் தன்மையில் இருக்கிறது. அதாவது அதை எப்படிக் காட்சிப்படுத்துகிறார்கள் என்பதில்தான் அதன் தரம் அடங்கியுள்ளது.

அடிப்படையில் மகேந்திரன் முதல் விசுவரை அனைவரும் சமூகத்தை மேம்படுத்த வேண்டும் என்றுதான் படமெடுக்கிறார்கள். இயக்குநர் மகேந்திரன் போன்றோர் தங்கள் திரைக்கதையில், அது சொல்லவரும் விஷயத்தை நேரடியாக வெளிப்படுத்தும் காட்சிகளை அமைக்காமல், திரைக்கதை எதை உணர்த்த வேண்டுமோ அது தொடர்பான காட்சிகளை அமைக்கிறார்கள். ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் ஒரு காட்சி சட்டென்று நினைவுக்குவருகிறது. தன் குழந்தைக்குப் பெரியம்மை என ஆதுரத்துடன் அஸ்வினி கூறுவார். மிகவும் பொறுமையாக விஜயன், ‘பெரியம்மையை ஒழித்துவிட்டதாக அரசு சொல்கிறது, அரசாங்க மருத்துவமனையில் போய்ச் சொல். பணம் தருவார்கள்’என உரைப்பார். தன் குழந்தையின் நோய் குறித்த விஷயத்தில் இப்படிக் குரூரமாக ஒரு தகப்பனால் யோசிக்க முடியும் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட சாடிஸ்டாக இருக்க முடியும் என்று பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். இப்படியான காட்சிகளைக் கொண்ட திரைக்கதை மேம்பட்டதாக வெளிப்படும்.

கலையம்சம் கொண்ட திரைக்கதை

இயக்குநர்கள் சிலர் தாம் சொல்ல வரும் விஷயத்தை அப்படியே காட்சியாக்கிவிடுகிறார்கள். இயக்குநர் விசு வகையறா படங்கள் இப்படி நேரடியான வெளிப்படுத்தல்களாக இருக்கும். ஒரு விஷயத்தை இலைமறை காயாக உணர்த்தும்போது அதில் வெளிப்படும் நாசூக்குத் தன்மை திரைக்கதையின் கலையம்சத்தைக் கூட்டுகிறது. பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தால் திரைக்கதை சிதறு தேங்காய் போல் ஆகிவிடுகிறது. கலை எதையும் நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும். கோயிலில் சிலை மூலம் கடவுளை உணர்த்துவதைப் போன்றது அது. அதே நேரத்தில் சமூகத்தின் பழக்கவழக்கங்களை அப்படியே விதந்தோதுவதும் ஒரு நல்ல திரைக்கதையின் வேலையாக இருக்காது. அது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் வழக்கங்களைக் குறித்த பல கேள்விகளை எழுப்பும். அதுதான் திரைக்கதையின் பிரதானப் பண்பு. அப்படியெழும் கேள்விகளுக்கான பதில்களை நோக்கிப் பார்வையாளர்களை நகர்த்தும். இந்த இடத்தில் தரின் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ ஞாபகக் குளத்தின் மேற்பரப்பில் ஓர் இலையாக மிதக்கிறது.

திரைக்கதையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவர்கள் தரின் எந்தப் படத்தையும் தவறவிட மாட்டார்கள். அவரது திரைக்கதை உத்தி மிகவும் கவனிக்கத்தக்கது. மிக இயல்பாகத் திரையில் சம்பவங்களை நகர்த்திச் செல்லும் சாமர்த்தியம் கொண்டவர் அவர். இல்லையென்றால் ஒரு வரிக் கதையான ‘தென்றலே என்னைத் தொடு’ படத்தைச் சுவையான பாடல்களால் உருவாக்கி ஒரு வருடம் ஓடக்கூடிய வெற்றிப் படைப்பாக மாற்றியிருக்க முடியுமா? அவரது எல்லாத் திரைக்கதைகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. பெரும்பாலானவை முக்கோணக் காதல் கதைகள். பார்வையாளர்களின் உணர்வெழுச்சியை ஒட்டியே விரிந்து செல்லும் திரைக்கதையின் முடிவில் அவர்கள் எதிர்பாராத முடிவு காத்திருக்கும்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கணவன் உயிரை முன்னாள் காதலனிடம் விட்டுவிட்டுக் காத்திருக்கிறாள் மனைவி. கணவன் பிழைப்பானா மாட்டானா என்று எல்லோரும் காத்திருக்க தரோ ஈவிரக்கமற்று, சற்றும் எதிர்பாராத வகையில் மருத்துவரைக் கொன்றுவிடுகிறார். ஆனால் தன் பிரியத்துக்குரிய காதலியின் கணவரது உயிரைக் காப்பாற்றிவிட்டார் மருத்துவர். அந்த மனநிறைவே அவருக்குப் போதும், இதற்கு மேல் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறார் என்பதே திரைக்கதை உணர்த்தும் செய்தி.

இலக்கணத்தை மீறிய நாயகி

‘அவளுக்கென்று ஓர் மனம்’ படமும்கூட ஒருவகையில் முக்கோணக் காதல் கதையே. இந்தப் படத்தின் தலைப்பே வித்தியாசமானது. பொதுவாக ஒரு சொல்லைத் தொடர்ந்து உயிரெழுத்துடன் ஆரம்பிக்கும் சொல் வரும்போது மட்டுமே ‘ஓர்’ என எழுதுவது தமிழ் மரபு. அப்படிப் பார்த்தால் அவளுக்கென்று ஒரு மனம் என்பதுதான் தலைப்பாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் ‘அவளுக்கென்று ஓர் மனம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது, தலைப்பு இலக்கணத்தை மீறியதைப் போலவே இந்தப் படத்தின் நாயகியும் இலக்கணங்களை மீறியவள். அதைத்தான் தலைப்பின் மூலம் சொல்லாமல் சொல்கிறார் தர் என்று தோன்றுகிறது. அவள் இலக்கணங்களை எதற்காக மீறுகிறாள் என்பதை அறியும் பார்வையாளர்கள் அவளது மீறல்களின் நியாயங்களை உணர்ந்துகொள்வார்கள். அதுதான் இந்தத் திரைக்கதையின் சிறப்பு.

செல்வந்தப் பெண்ணான லலிதா பருவ வயதில் பெற்றோரை இழந்து, உயர் நீதிமன்ற நீதிபதியான மாமா வீட்டில் தஞ்சமடைகிறாள். மாமாவின் மகன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவருக்கும் மணம் முடிக்க வேண்டும் என்று கண்ணனின் பெற்றோர் நினைக்கிறார்கள். கண்ணனுக்கோ லலிதாவின் கல்லூரித் தோழி மீனா மீது காதல். மீனா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் கண்ணனின் நண்பனான கோபால் என்னும் இளைஞனைக் காதலிக்கிறாள். அவன் ஒரு பெண் பித்தன். தன் சுகத்துக்காகப் பிறரைப் பயன்படுத்தத் தயங்காதவன். யதேச்சையாக அவனது சுயரூபத்தை அறிந்துகொண்ட மீனா அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். அவள் விலகிய தருணத்தில் தோழி லலிதா மூலம் கண்ணனின் கண்களில் பட்டுவிடுகிறாள். அவனுக்கு மீனாவை மிகவும் பிடித்துவிடுகிறது. அவளையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். லலிதா ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு தோழிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்கிறாள்.

இதன் பின்னர் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களால் லலிதாவுக்கும் கோபாலுக்கும் உறவு ஏற்படுகிறது. லலிதாவின் நடவடிக்கைகள் மாறுகின்றன. இரவில் தாமதமாக வீட்டுக்கு வருகிறாள். சில நாள்களில் குடித்துவிட்டு வருகிறாள். இதனால் குடும்ப மானம் போவதாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் குடும்ப மானத்தைக் காப்பாற்றத்தான் லலிதா இவை அனைத்தையும் செய்கிறாள் என்பதுதான் திரைக்கதையின் விசேஷம். குடும்ப மானத்தைக் காப்பாற்ற மீனா வீட்டிலேயே பூஜை செய்கிறாள், தீர்த்தம் பருகுகிறாள், லலிதாவோ கோபாலுடன் பாருக்குப் போகிறாள், குடிக்கிறாள். இரண்டும் இரண்டு துருவமான செய்கைகள். ஒன்றை உலகம் கையெடுத்துக் கும்பிடும். மற்றொன்றைக் காறித் துப்பும். ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது குடிகாரியாக மாறிய லலிதாமீது நம்மால் கோபப்பட முடியாது. அவளது செய்கைகளுக்குப் பின்னே அப்பழுக்கற்ற தூய எண்ணம் நிறைந்திருப்பதை நம்மால் உணர முடியும். அப்படியான திரைக்கதையை அமைத்திருப்பார் தர். அதுதான் ஒரு திரைக்கதையின் சிறப்பு.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x