Published : 29 Mar 2015 08:51 AM
Last Updated : 29 Mar 2015 08:51 AM

திரை விமர்சனம்: வலியவன்

எது வலிமை? யார் வலியவன்? இந்தக் கேள்விகளை அழுத்தமாக எழுப்ப முயற்சிக்கிறார் இயக்குநர் சரவணன்.

சென்னை ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் வினோத் (ஜெய்), ஒரு சுரங்கப்பாதையில் சுமியை (ஆண்ட்ரியா) சந்திக்கிறார். பார்த்தவுடனே ஆண்ட்ரியா ஜெய்யிடம் காதலை சொல்ல, ஜெய் ஆடிப்போகிறார். சுதாரித்துக்கொண்டு திரும்பிப் பார்ப்பதற்குள் அந்தப் பெண்ணைக் காணோம். எதற்காக அந்தப் பெண் நம்மிடம் காதலைச் சொல்ல வேண்டும் என்ற அவஸ்தையுடன் ஆண்ட்ரியாவைத் தேடி அலைகிறார் ஜெய்.

சலிக்கும் அளவுக்குக் கண்ணாமூச்சி விளையாடிய பிறகு ஆண்ட்ரியாவே வந்து சந்திக்கிறார். “உன்னை எனக்கு முன்பே தெரியும்” என்கிறார். ஃபிளாஷ்பேக் தொடங்குகிறது. ஆரம்பிக்கும்போது ஆச்சரியப்படவைக்கும் பின்கதை முடிவதற்குள் பொறுமையைச் சோதித்துவிடுகிறது. இதில் பாட்டு வேறு...

ஆண்ட்ரியாவிடம் ஜெய் காதலைச் சொல்ல, அவர் நழுவப் பார்க்கிறார். விடாமல் துரத்தும் ஜெய்யிடம் ஆண்ட்ரியா ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். “ஒரு ஆளை அடிக்க வேண்டும்” என்பதுதான் அந்த நிபந்தனை. அந்த ஆள் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீரன். ஆனாலும் ஜெய் ஒப்புக்கொள்கிறார். அதற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார். அதற்குக் காரணம் காதல் மட்டுமல்ல.

குத்துச் சண்டை வீரனுக்கு எதிராக ஜெய்யை ஆண்ட்டிரியா களமிறக்குவதற்கும் அதை ஜெய் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதற்கும் என்ன காரணம்? ஜெய்க்கு ஜெயம் கிடைத்ததா? எப்படி அது நிகழ்ந்தது?

நீதிக்குப் புறம்பாகத் தவறு செய்யும் பட்சத்தில் வலியவனாக இருந்தாலும் பலம் இல்லாதவர்களிடம் கூடத் தோற்க வேண்டி இருக்கும் என்பதுதான் வலியவனின் அடிப்படை. கருத்து என்ற அளவில் கவரும் இந்த ஒரு வரிக் கதையைச் சொல்ல இயக்குநர் சில வலிமையான காட்சிகளை வைத்திருக்கிறார். ஆனால் அதற்கு இரண்டாம் பாதி வரும் வரை நீங்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

பெரும்பாலான படங்களில் இடைவேளையின்போது பதற்றம், ஆர்வம் போன்ற ஏதாவது ஒரு உணர்வு வரும். ஆனால் அப்படி எந்த உணர்வையும் சரவணன் நமக்குத் தரவில்லை. வலுவான ஒரு காரணத்துக்காக நாயகனுக்கு உத்வேகமூட்டிச் செயலில் ஈடுபடுத்துகிறாள் நாயகி. இது ஏன், எப்படி நடக்கிறது என்பதெல்லாம் இரண்டாம் பாதியில் சொல்லப்படுகின்றன. முதல் பாதி? நேரத்தைக் கடத்தவே பெருமளவில் பயன்பட்டிருக்கிறது. அதிலும் அந்த இரண்டு பயணங்கள் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன.

ஜெய் குடும்பத்தின் சூழலைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது. அழகம் பெருமாள், ஆண்ட்ரியாவுக்கு இடையில் உள்ள நட்பு அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு இது கொஞ்சம் புதுசு. ஷாப்பிங் மால் திரையரங்கில் நடக்கும் சண்டையும் அதைப் பற்றிப் பின்னால் பேசப்படும் வசனங்களும் அழுத்தமாக உள்ளன.

பாடல்கள் படமாக்கப்பட்டுள்ள விதம் நன்று. ஆனால் பாடல்கள் முணுமுணுக்கும்படி இல்லை என்பதோடு, எந்தப் பாடலும் திரைக்கதையில் ஒட்டவில்லை. இசை இமானா? தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. இரவு நேரப் பயணம், சண்டைக் காட்சி, ஷாப்பிங் மால் காட்சிப்படுத்தப்படும் விதம் ஆகியவை சிறப்பு.

ஜெய்யின் நடிப்பு பின் பாதியில் சோபிக்கும் அளவு முன்பாதியில் கவரவில்லை. ‘எங்கேயும் எப்போதும்’ வார்ப்பிலிருந்து அவர் விரைவில் வெளியே வர வேண்டும்.

ஆண்ட்ரியா படம் முழுவதும் வருகிறார். கடலை போடுபவர்களைச் சமாளிப்பது, காதலனைச் சீண்டுவது, சவால் விடுவது, வயதில் மூத்த நண்பருடன் இயல்பாகப் பழகுவது ஆகியவற்றை அழகாகக் கையாள்கிறார். ‘யெல்லோமியா’ பாடலில் வசீகரிக்கிறார்.

அழகம் பெருமாளும் அவரது மனைவியாக வரும் அனுபமாவும் அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்கள். ஜெய்யின் தோழனாக வரும் பால சரவணன் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பை வரவழைக்கிறார். காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டுக் கருத்து சொல்லும் பாத்திரப் படைப்பு ரசிக்கவைக்கிறது.

“பலம் இருக்குங்கிறதுக்காக எதிரியை சம்பாதிக்க கூடாது”, “கைதட்டற ஆடியன்ஸ், கைதட்டு வாங்க நினைக்கல” என சில வசனங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

தார்மிக உணர்வுதான் நிஜமான வலிமை என்பதைச் சொல்ல வந்த நோக்கத்தைப் பாராட்டலாம். இந்தக் கருத்தை முழுப் படத்துக்கான திரைக்கதையாக மாற்றுவதில் படம் வெற்றிபெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x