Published : 17 Jun 2016 11:53 AM
Last Updated : 17 Jun 2016 11:53 AM
சினிமா பேசத் தொடங்கிய நாள் முதலே அழுத்தமான கதைகளைக் கொண்ட திரைப்படங்களையே நாம் ரசித்துவந்திருக்கிறோம். அதிலும் சுவாரசியமான திருப்பங்களும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய சம்பவங்களும் கொண்ட கதைகளே நமக்குத் திருப்தி அளிக்கின்றன. சினிமா தொடங்கிய பத்து நிமிடத்துக்குள் கதை ஆரம்பிக்கவில்லை என்றால் நெளியத் தொடங்கிவிடுகிறோம்.
கதை ஆரம்பிப்பது என்றால் அந்தப் படத்தின் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ வேண்டும். படத்தின் எஞ்சிய பயணத்தைத் தீர்மானிக்கும் வலுவான காட்சி ஒன்று தொடக்கத்தில் இடம்பெற்றுவிட வேண்டும். உதாரணமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், காதலனும் காதலியும் சேர்ந்துவிடுவார்கள் என்று கதையின் முடிவைச் சொல்லியே படத்தைத் தொடங்கினார் இயக்குநர்.
காதலர்கள் இணைந்துவிடுவார்கள் என்று தெரிந்தபோதும் அவர்கள் எப்படி இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களைத் தொடர்ந்து படம் பார்க்கவைத்தது, ரசிகர்கள் படத்தின் இறுதிவரை ஆர்வத்துடன் அமர்ந்திருந்தார்கள். ஆக, படம் தொடங்கிய அந்தப் பத்திருபது நிமிடங்களுக்குள் திரையரங்கில் ஆர்வத்துடன் கூடியிருக்கும் ரசிகர்களைத் திரைப்படம் எந்த வகையிலாவது தன் வசப்படுத்திவிட வேண்டும்.
இந்தப் படம் பார்ப்பதற்கு உகந்தது, நமக்கானது என்ற நம்பிக்கையை அது விதைத்துவிட வேண்டும். இல்லையென்றால் ரசிகர்கள் திரைப்படத்திலிருந்து உணர்வுரீதியாக விலகிவிடுவார்கள். பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் திரைப்படத்துடன் பிணைப்பது இயலாத காரியமாகிவிடும்.
வெற்றிக்கதையில் கதையின் தன்மை
ரசிகர்களுடன் அந்தரங்கமான உறவைப் பேணும் சினிமாவுக்கான கதை மிக எளிமையாக, உணர்வுபூர்வமானதாக இருந்தால் போதும். அறிவுஜீவித்தனமான கதையைவிட உணர்வுபூர்வமான கதையே ரசிகர்களைக் கவர்கிறது. உலகம் முழுவதுமே எளிய கதைகள்தாம் பெரிய அளவில் வரவேற்கப்படுகின்றன. சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பைசைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ என எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அவற்றின் கதைகள் எளிமையானவை, உணர்வுகளால் பொதியப்பட்டவை.
சில்ட்ரன் ஆஃப் ஹெவனில் ஒரு சாதாரண ஷூதான் படத்தின் மைய இழை. தன் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக ஷூ வாங்கித் தர வழியில்லாத ஏழைக் குடும்பம், அவர்களுடைய உணர்வுப் போராட்டம், ஷூவால் அந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இவைதான் அந்தப் படம். இந்தப் பிரச்சினையை உலகின் எந்த நாட்டினரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
இந்தக் குடும்பத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடாதா, அவர்கள் வாழ்வில் மேம்பட்டுவிட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்துவிடுகிறது. எனவே படத்தை ஆர்வத்துடன் பார்க்கத் தயாராகிவிடுகிறார்கள். அவர்களுக்கும் திரைப்படப் பாத்திரங்களுக்கும் இடையே வெள்ளித்திரை மறைந்துவிடுகிறது. நம்மில் ஒருவர் என்று கதாபாத்திரங்களுடன் உறவை மானசீகமாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியான ஓர் உறவு ரசிகர்களுக்கு உருவாகிவிட்டால் போதும். அதன் பின்னர் எதையும் பார்க்க அவர்கள் தயாராக இருப்பார்கள்.
பொருத்திப் பார்க்கும் மனநிலை
சாமானிய மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாடச் சம்பவங்களோடும் சிக்கல்களோடும் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். இயக்குநர் சேரனின் ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் பெரிய காதல் காவியமல்ல. சேரனும் தமிழகத்து சத்யஜித் ராய் அல்ல. எனினும் சாதாரணமான அந்தப் படம் பெரிய வெற்றியை ஈட்டியது.
அந்தக் கதையை சினிமாவுக்கான கதை அல்ல என்றே பலர் தட்டிக்கழித்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் தம் வாழ்வில் பல காதல்களைக் கடந்துவந்த ரசிகர்கள், அந்தப் படத்தின் கதைநாயகனுடன் தங்கள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது தங்கள் படம். தங்கள் வாழ்வைச் சொல்லும் படம். அவ்வளவுதான். அதனால்தான் சேரனின் அமெச்சூர்தனமான நடிப்பையும் மீறி அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இத்தகைய உணர்வு கொந்தளிக்கும் திரைப்படங்களுடன் நாம் எளிதாகப் பிணைப்பு கொள்கிறோம்.
தமிழில் எம்.ஜி.ஆர். கதா நாயகனாக நடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தனது படங்களின் கதைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர். மதுரை வீரன், நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப் பெண் என அவரது எல்லாப் படங்களும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலான கதைகளைக் கொண்டவை. அப்படியான கதைகளைத் தேர்வுசெய்வதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார்.
ஏழைப் பங்காளன் என்ற தனது கதாபாத்திர வார்ப்புக்கு உதவும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகள்மீது ஆர்வம் காட்டினார். அவர் ஒரு ஆபத்பாந்தவன் என்னும் நம்பிக்கையை அவரது திரைப்படப் பாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் விதைத்தன. அதனால்தான் அவரால் அவ்வளவு ரசிகர்களை ஈர்க்க முடிந்தது. அவருடைய கதாபாத்திரங்களைப் போலவே எம்.ஜி.ஆரும் இருப்பார் என்ற நம்பிக்கையை அந்தப் படங்கள் உருவாக்கின. ஆகவே அவரால் சினிமாவைக் கடந்தும் வெற்றிகளைப் பெற முடிந்தது.
உத்திரவாதமான உணர்வுகள்
ஒரு படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதைவிட அது எல்லோரையும் கவரக்கூடியதாக, உணர்வுபூர்வமானதாக இருக்க வேண்டும். சினிமாவுக்குக் கதை எழுத முற்படுபவர் வாழ்க்கை சார்ந்த அனுபவத்தைப் பெற்றிருத்தல் நல்லது. வாழ்க்கையைத் துளித்துளியாக அனுபவித்துப் பார்த்த ஒருவருக்குத் தான், அதை ரசமான சம்பவங்களாக மாற்றும் ரசவாதம் கூடிவரும்.
அத்தகைய ரசவாதம் கூடிய கதைகளே திரைப்படத்தில் மாயாஜாலங்களை ஏற்படுத்தும். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில்தான், அதாவது திரைக்கதையின் அமைப்பில்தான், அது மாறுபடுகிறது. ஒரு கதை எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படியே அது திரையில் சொல்லப்படுவதில்லை. ஆகவே சினிமாவுக்குக் கதை எழுத மூளையைக் கசக்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் கதாசிரியர் இதயத்தில் உணர்வு நிரம்பியிருக்க வேண்டும்.
கதைகளில் அன்பு, பிரியம், பாசம், காதல், பிரிவு, துரோகம், எதிர்ப்பு, வீரம் போன்ற பல சங்கதிகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமைத்துத் தர வேண்டும். இவற்றை உள்ளடக்கிய கதைகளை எழுதினால் போதும், சுவாரசியமான திரைப்படத்துக்கு உத்தரவாதம் உண்டு.
தீவிர இலக்கியப் படைப்பை உருவாக்கத் தேவைப்படும் மொழியியல் நிபுணத்துவம் சினிமாவுக்குக் கதை எழுத அவசியமல்ல. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாக, நேரிடையாக விவரிக்கத் தெரிந்தால் போதும். கதையை எழுதிவிடலாம்.
பெரிய பெரிய வாக்கியங்கள், வாசகன் அறிந்திருக்காத புதிய புதிய சொற்கள் என எழுத்தாளர் தன் மொழி அறிவை எல்லாம் கொட்டி எழுதுவது போன்ற முயற்சி சினிமாக் கதை எழுதத் தேவையில்லை. இதனாலேயே யார் வேண்டுமானாலும் கதையை எழுதிவிடலாம் என நம்பிப் பலர் மோசம் போகிறார்கள். அதுதான் சோகம். புத்திசாலித்தனமான ரசிகர்கள் சினிமாவை இன்னும் அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT