Published : 12 May 2017 08:46 AM
Last Updated : 12 May 2017 08:46 AM

திரை வெளிச்சம்: விஷால் என்ன செய்ய வேண்டும்?

திருட்டு விசிடி , ஜி.எஸ்.டி. வரி, திரையரங்கக் கட்டண முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மே 30-ம் தேதி முதல் தமிழ்த் திரையுலகம் முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கோடம்பாக்கத்தில் பரபரப்பு கூடியிருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், “எந்தவொரு திரையரங்கிலும் படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய திரைத்துறை அமைப்புகள் இணைந்து முடிவு எடுத்துள்ளோம்.

தமிழ்த் திரையுலகத்துக்கு மே 30-ம் தேதிக்குள் நல்லது நடக்கும் என நம்புகிறோம். படம் எடுப்பதற்கான நிம்மதியான சூழல் உருவாகும்வரை எங்களால் வேலை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். விஷாலின் இந்த அறிவிப்பால், தமிழ்த் திரையுலகச் சங்கங்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாகத் தெரிகிறது. மே 12-ம் தேதிக்குப் பிறகு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஷால் முன்வைக்கும் கோரிக்கை

மே 19-ம் தேதிக்குப் பிறகு வெளியாகும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் அனைவரையும் தொலைபேசி வாயிலாக அழைத்த விஷால், “உங்களது திரைப்படங்களை வெளியிட வேண்டாம். மே 30-ம் தேதிக்குப் பிறகு திரையரங்குகள் செயல்படாது. அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்தவுடன் வெளியிடுங்கள்” என்று கோரிக்கை விடுத்துவருவதாகக் கூறுகிறார்கள். ஆனால், தயாரிப்பாளர்கள், ‘கோடை விடுமுறை என்பதால் இந்த இரண்டு தேதிகளை விட்டால் மே மாதத்தில் வேறு தேதிகளே கிடைக்காதே’ என்று ஆலோசித்து வருகிறார்கள். ஜூன் மாதம் முதல் பெரிய கதாநாயகர்களின் படங்கள் வரிசையாகத் திரைக்கு வரவுள்ளன.

தமிழ்த் திரையுலகில் பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. ஆனால், யாரிடமும் விஷால் கலந்து ஆலோசிக்கவில்லை. என்பது பலரது ஆதங்கம் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்தால் எப்படி அனைவரும் ஒத்துழைக்க முடியும்? முதலில் அனைத்துச் சங்கங்களின் கூட்டத்தையும் கூட்டி, வேலைநிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று விஷால் கோரிக்கை வைக்க வேண்டும்; அவர் அதைச் செய்வாரா என்ற கேள்வியையும் பலர் எழுப்பிவருகிறார்கள்.

ஒன்றிணையும் உரிமையாளர்கள்

தமிழ்த் திரையுலகின் முழு வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பின்போது உடனிருந்தவர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் மட்டும்தான். அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் செங்கல்பட்டு திரையரங்குகள் மட்டுமே உள்ளன. அபிராமி ராமநாதன் தலைமையில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், கோயம்புத்தூர் - திருப்பூர் மாவட்டத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எனப் பல சங்கங்கள் தற்போது விஷாலுக்கு எதிராகத் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்துத் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது “தமிழக அரசாங்கத்தை முறைப்படி அணுகி, விஷால் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தனிப்பட்ட முறையில் வேலைநிறுத்தம் என அறிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது நாங்கள் ஏன் இதில் பங்குபெற வேண்டும். எங்களுக்கு 'பாகுபலி 2' படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்று, நல்ல வசூல் செய்துவருகிறது. புதிய படங்கள் வெளியாகவில்லை என்றால், 'பாகுபலி 2' படமே எங்களுக்குப் போதும். இன்னொரு முக்கியமான விஷயம், புதிய படங்களின் தயாரிப்பாளர்கள்கூடத் தங்களுடைய படங்களை வெளியிடும் முனைப்பில்தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.

புலம்பும் தயாரிப்பாளர்கள்

வேலை நிறுத்தத்துக்கு எதிராகப் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த வேலைநிறுத்த அறிவிப்பால் 'வனமகன்', 'உள்குத்து', 'மாயவன்', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட பல படங்களின் வெளியீட்டை அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஜுன் மாதம் வெளியீடு என்று மாற்றினால் அனைத்துப் படங்களும் ஒரே தேதியில் வெளியாக முட்டிமோதும் நிலை உருவாகும். இதனால் எதிர்பார்க்கும் திரையரங்குகள் கிடைக்காது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் புலம்பிவருகிறார்கள். இந்த வெளியீட்டுச் சிக்கலுக்கு விஷால் ஒரு முடிவு காண வேண்டும் என்பதுதான் தற்போது அனைவரது கோரிக்கை.

புதிய கோரிக்கை

இந்த வேலைநிறுத்தம் குறித்து முன்னணித் தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசியபோது, “மத்திய - மாநில அரசுகளுக்கு விஷால் கோரிக்கைகள் விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்கள் ஒரு முக்கியமான கோரிக்கை வைக்கிறோம். ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து செய்த படம் 'கஜினி'. அந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் உட்பட அனைத்து நடிகர்களின் சம்பளமும் சேர்த்து மொத்த செலவு ஏழரை கோடிதான். இதே செலவில் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் - சூர்யா இணைந்து படம் செய்ய முடியுமா?. 'கஜினி' படம் வெளிவந்து 12 வருடங்களாகின்றன. தற்போது 2 மடங்கு அல்லது 3 மடங்கு பட்ஜெட் அதிகரிக்கலாம்.

ஆனால், இந்தக் கூட்டணி இப்போது இணைந்தால் சம்பளம் மட்டுமே சுமார் 60 கோடியைத் தொடும். முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் அனைவருமே சம்பளத்தைக் குறைத்தால் பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஏவி.எம். உள்ளிட்ட பல நிறுவனங்கள் படம் தயாரிக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் முன்னணிக் கதாநாயகர்களின் சம்பளம் மட்டுமே. இதைக் குறைப்பதற்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேச விஷால் தயாரா எனக் கேளுங்கள். பிறகு வேலைநிறுத்தம் பற்றிப் பேசலாம்” என்று காட்டமாகக் கூறினர். விஷால் என்ன செய்யப்போகிறார்? ஆர்வமாக எதிர்பார்க்கிறது கோலிவுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x