Published : 30 Oct 2014 09:52 AM
Last Updated : 30 Oct 2014 09:52 AM
ஷாரூக்கான், ஃபரா கான் நட்புக் கூட்டணியில் பாலிவுட்டுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு மசாலா திரைப்படம் ‘ஹேப்பி நியூ இயர்’. ‘மேய்ன் ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’ படங்களுக்குப் பிறகு, ஃபரா கான் தன் நண்பர் ஷாரூக் கானை மறுபடியும் இயக்கியிருக்கிறார். கவுரி கானின் ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் வெளிவந்திருக்கிறது.
சந்திரமோகன் ஷர்மா அலைஸ் சார்லி (ஷாரூக் கான்), தன் தந்தை மனோஹர் ஷர்மாவின் (அனுபம் கெர்) மரணத்துக் காக தொழிலதிபர் சரண் க்ரோவரைப் (ஜாக்கி ஷரஃப்) பழிவாங்குவதற்காக நடத்தும் நகைச்சுவைத் திருட்டு த்ரில்லர்தான் இதன் கதை.
சேஃப்டி லாக்கர்களை உருவாக்கும் தொழிலதிபர் சரண் க்ரோவர். அவர் மனோஹர் ஷர்மா உருவாக்கிய ‘ஷாலிமார்’ என்னும் சேஃப்டி லாக்கரை ஏமாற்றி கைப்பற்றுகிறார். துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் வைரங்களைப் பாதுகாப்பதற்காக அதை பயன்படுத்துகிறார். அதிலிருக்கும் வைரங்களைத் திருடுவதன் மூலம் சரண் க்ரோவரைப் பழிவாங்குவதற்கு சார்லி திட்டமிடுகிறார். சரண் க்ரோவரின் மகன் விக்கி க்ரோவர் (அபிஷேக் பச்சன்) கைரேகையால்தான் ஷாலிமரைத் திறக்க முடியும். இதற்காக நந்து (மற்றொரு அபிஷேக் பச்சன்), டேமி (பொம்மன் ஈரானி), ஜக் மோகன் பிரகாஷ் (சோனு சுத்), ரோஹன் (விவான் ஷா) ஆகியோர் அடங்கிய கூட்டணியை சார்லி ஒன்று சேர்க்கிறார். வைரங்களைத் திருடுவதற்காக சார்லி டீம் வர்ல்ட் டான்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை வருகிறது. சார்லி டீமுக்கு நடனம் கற்றுக்கொடுப்பதற்காக வருகிறார் மோகினி (தீபிகா படுகோன்). சார்லி எப்படி வைரங்களைத் திருடி சரண் க்ரோவைரைப் பழிவாங்கினார் என்பதுதான் ஹேப்பி நியூ இயர்.
திரைக்கதையின்படி, நடனம் படத்தின் முக்கியமான அம்சமாக இருக்க வேண் டும். நடனப் போட்டியின் முதல் சுற்றிலேயே ஏமாற்றிதான் சார்லி டீம் போட்டியில் கலந்துகொள்கிறது. ஆனால், அவர்கள் எப்படி நடனம் கற்றுக் கொண்டு வர்ல்ட் டான்ஸ் சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுகிறார்கள் என்பது போன்ற கேள்வி களெல்லாம் கேட்கக் கூடாது. படத்தில் வெகு சில நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டும்தான் இயல்பாக சிரிக்க முடிகிறது. படத்தின் பெரும்பான்மையான நகைச்சுவைக் காட்சிகளும், நீளமான சண்டைக் காட்சிகளும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.
பாலிவுட்டின் ஹிட் ஜோடியான ஷாரூக் கான் -தீபிகா படுகோன் காதல் ட்ராக் எல்லாம் ஒரு பாடலிலேயே முடிந்துவிடுகிறது. படத்தின் கதாநாயகி அறிமுகமே ஒரு மணிநேரத்துக்குப் பிறகுதான் நடக்கிறது. அதனால் ஷாரூக் கான் -தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி பற்றியெல்லாம் சொல் வதற்கு ஒன்றுமில்லை. பார் டான்ஸராக தீபிகா மராட்டி இந்தி பேசி நடித்திருக் கிறார். ‘ஹாரோ தோ ஹாரோ, பர் இஜ்ஜத் மத் உத்தரோ’ என்ற வசனத்தை பேசியே க்ளைமாக்ஸ் வரை சமாளித்துவிடுகிறார் தீபிகா.
ஷாரூக் கானின் ஹீரோயிசத்துக்காக திரைக்கதை எழுத ஆரம்பித்து, ஃபரா கான் உடனடியாக அதை நகைச்சுவை யாக்கி முடித்திருக்கிறார். அப்பா சென்டி மென்ட், அம்மா சென்டிமென்ட், மேரா பாரத் மஹான் சென்டிமென்ட் என சென்டிமென்ட்களுக்குப் படத்தில் பஞ்ச மில்லை. ஆனால், அந்த சென்டிமென்ட் கள் திரைக்கதைக்கு வலுவூட்ட உதவவில்லை.
விஷால்-சேகர் இசைக் கூட்டணியில் ‘மன்வா லாகே’, ‘சத்கலி’, ‘நான்சென்ஸ் கி நைட்’ போன்ற பாடல்கள் ஹிட் நம்பர்ஸ். ஷாரூக் கான் இந்தப் படத்துக்காக ‘எயிட் பேக்’ வைத்திருக்கிறார். படத்துக்காக அவருடைய அதிகபட்ச உழைப்பு அவ்வ ளவுதான். அபிஷேக் பச்சன் சிரிக்க வைப் பதற்காக அடிக்கடி வாந்தி எடுக்கிறார். ஆனால் அவர் படத்தில் நடித்திருப் பது ஓரளவுக்குதான் திரையில் வெளிப் படுகிறது. பொம்மன் ஈரானி, சோனி சூத், விவியன் ஷா, ஜாக்கி ஷரஃப் போன்றவர்களுக்கு நடிப்பதற்கு ஃபரா கான் வாய்ப்பளிக்கவில்லை. அதற்கு அவசியமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
வழக்கமாக ஃபரா கான் - ஷாரூக் கான் கூட்டணியில் வெளிவரும் படம் எப்படி இருக்குமோ அப்படிதான் ஹேப்பி நியூ இயரும் இருக்கிறது. குறிப்பாகச் சொல்லும்படி எந்தச் சிறப்பம்சமும் இல்லை. பாலிவுட்டுக்கே உரிய மசாலா அம்சங்களில் எதையும் விட்டுவிடாமல் சேர்த்திருக்கிறார் ஃபரா கான். படத்தில் வரும் நகைச்சுவைக்குச் சிரிக்க வேண்டுமானால் நிச்சயமாக மூளையை மட்டும் பயன்படுத்தக் கூடாது. மூன்று மணி நேரத்துக்கு மூளையைச் செயல்படாமல் பார்த்துக்கொண்டால், ஹேப்பி நியூ இயரை ஒரு நல்ல என்டர்டெய்னர் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT