Published : 23 Sep 2016 12:17 PM
Last Updated : 23 Sep 2016 12:17 PM
முகங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து திறமைக்கான அங்கீகாரமும் வெற்றியும் கிடைக்கும் சுதந்திர வெளியாகி வருகிறது தமிழ்த் திரையுலகம். இங்கே தனக்கான பாதையைத் தாமே அமைத்துக்கொள்வதில் வெற்றி கண்டிருக்கிறார்
ஆர்.கே. சுரேஷ்.திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என்று அறிமுகமான இவரை ஸ்டூடியோ 9 சுரேஷ் என்றால்தான் கோலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். ‘தாரை தப்பட்டை', ‘ மருது’ படங்களுக்குப் பிறகு நடிகர் ஆர்.கே. சுரேஷ் ஆகியிருக்கிறார். இத்தனை கொடூரமான வில்லனா என வியந்த ரசிகர்களுக்கு ‘தனிமுகம்' படத்தின் மூலம் கதாநாயக முகம் காட்ட வருகிறார். அவரைச் சந்தித்தோம்.
உங்களைப் படத் தயாரிப்பாளராகத் தெரியும். ஆனால் நடிக்கவேண்டும் என்பதுதான் உங்கள் கனவா?
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு கட்டத்தில் கனவாக மாறிய காரணத்தால்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். ஆர்வம் வெறும் ஆர்வமாகவே இருந்துவிடக் கூடாது என்பதற்காக சண்டைப் பயிற்சி, நடனப் பயிற்சி, கூத்துப் பட்றையில் நடிப்புப் பயிற்சி என்று முறையாகப் பத்து ஆண்டுகள் என்னை தயார்படுத்திக்கொண்டேன். சரியான வாய்ப்புக்காக உணர்ச்சிவசப்படாமல் காத்திருந்தேன். அந்த நேரத்தில் இயக்குநர் பாலா அண்ணன் முதல் வாய்ப்பைக் கொடுத்தார்.
‘தாரை தப்பட்டை' நடித்த அனுபவம் எப்படி?
என்னதான் நாம் வெளியே கற்றுக்கொண்டு வந்தாலும் பாலா அண்ணன் புதிதாகப் பாடம் எடுப்பார். அவர் இயக்கத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலே அது நடிப்பில் பட்டப் படிப்பு போன்றது. முக்கியக் கதாபாத்திரம் என்றால் கேட்கவேண்டுமா?
கதாநாயகன், கதாநாயகியாக நடிப்பவர்களையே பாலா ஒரு வழி பாண்ணிவிடுவார் என்று சொல்வார்கள். வில்லனாக நடித்த உங்களை எப்படிக் கையாண்டார்?
இந்தக் கதாபாத்திரத்துக்கு இவன் அற்புதமாகப் பொருந்துவான் என்று அவர் நம்பிவிட்டால், அதன் பிறகு யார் சொன்னாலும் அவர்களை மாற்ற மாட்டார். அப்படி நட்சத்திரத் தேர்வில் கறார் காட்டும் அவர், தான் எதிர்பார்ப்பது கிடைக்கும்வரை வேலை வாங்குவார். அதற்காகத் ஒரு நடிகன் தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் நினைப்பார். அப்படி ஒப்படைத்துவிட்டால் நம்மை முழுமையாக வெளிக்கொண்டு வந்துவிடுவார். எனக்கும் அதுதான் நடந்தது.
படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தேன். ஆனால் ஒரு ஆசிரியரைப்போல அவர் வேலை வாங்கிய விதம் காரணமாக அந்தக் கதாபாத்திரமாக என்னையும் அறியாமல் மாறிப்போனேன். நம் அர்ப்பணிப்பைப் பற்றி அவரிடம் வாயால் சொன்னால் போதாது,
நம்ப மாட்டார். அதைச் சோதிக்க ஏதாவது சோதனை வைப்பார். என்னை ஆறுமாதம் தாடி வளர்க்கச் சொன்னார். ஒருநாள் திடீரேன்று தாடியை எடுக்கச் சொன்னார். பிறகு உன் பொறுமையைச் சோதிக்கவே அப்படிச்
செய்தேன் என்றார். அவர் ஒரு தனி உலகம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
அறிமுகப் படத்தைத் தொடர்ந்து ‘மருது' படத்திலும் வில்லனாக நடித்தீர்கள். வில்லனாகவே முத்திரை குத்திவிடுவார்கள் என்றுதான் இப்போது கதாநாயகனாக நடிக்கிறீர்களா?
இப்போதெல்லாம் யார் நடிக்கிறார், என்ன வேடம் என்பதை விட எப்படி நடிக்கிறார் என்பதை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கவனிக்கிறார்கள். மருது படம் பார்த்த விஷால் ரசிகர் ஒருவர் “விஷாலை நினைச்சு பயந்துகிட்டே இருந்தேன் சார். அவருக்கு கடைசிவரைக்கும் சரியான டஃப் கொடுத்தீங்க.” என்று சொன்னார். தான் பார்த்தது ஒரு திரைப்படம் என்பதை மறக்க வைப்பதில்தான் நடிகர்களுக்கான வெற்றி அமைந்திருக்கிறது. எனவே முத்திரை பற்றி நான் கவலைப்படவில்லை.
உங்களது சொந்தத் தயாரிப்பில் இனி தொடர்ந்து உங்களை நாயகனாகப் பார்க்கலாமா?
இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டிருக்கிறேன். விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்' முதல் அண்மையில் வெளியான ‘தர்மதுரை' வரை சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறேன். ஆனால் நான் தற்போது வளர்ந்துவரும் நடிகன். ஒரு தயாரிப்பாளராக குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான தரமான வணிகப் படங்கள் தயாரிக்கவே ஆசை. ஆனால் என் நடிப்பு என்று வருகிறபோது என் திறமைக்கு வெளியிலிருந்து கிடைக்கும் வாய்ப்புகள்தான் நேர்மையானவையாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். நான் இப்போது நடிக்கும் படங்கள் அனைத்துமே வெளி நிறுவனப் படங்கள்தான். கதாநாயகனாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று எந்தப் பிடிவாதமும் கிடையாது. மற்ற ஹீரோக்களின் படங்களில் நடிப்புக்கு வாய்ப்புள்ள வேடங்கள் கிடைத்தால் விட மாட்டேன்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்
புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன். அதில் வில்லனாக வேறு நடிகர்தான் நடிக்கிறார். கதை நாயகனாக சரவண ஷக்தி இயக்கத்தில் ஒரு படம், சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாகப் பல படங்கள் கைவசம் உள்ளன.
தனிமுகம் படத்தின் கதை உங்களுக்காக எழுதப்பட்டதா?
இல்லவே இல்லை. இந்தப் படத்தை இயக்குபவர் சஜித். பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர். சஜித் என்னிடம் சொன்ன கதை பிடித்துவிட்டது. இது ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் கதையல்ல. ஆனால் நான் ஏற்கும் கதாபாத்திரம் இருவேறு முகம் காட்டி, என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கிடைத்த அசத்தலான களம். அதனால் ஏற்றுக்கொண்டேன்.
‘தர்மதுரை' படத்துக்குக் கிடைத்த வெற்றி?
நம்பி, உண்மையாக உழைப்பவர்களை சினிமா என்றைக்கும் கைவிடாது என்பதை `தர்மதுரை’ படம் எனக்கு உணர்த்திவிட்டது.பேய்க் கதைகள், காமெடி கதைகள் என்ற ட்ரெண்டுக்கு நடுவே ஒரு குடும்பக்க்கதையை கொண்டாடியிருக்கிறார்கள். ‘தர்மதுரை' படத்தின் பெரிய பலமே அதன் கதைதான். திருநங்கை, சத்துணவு, ராகிங், பெண்ணுரிமை, தாய்ப்பாசம் இப்படி ஏகப்பட்ட கருத்துகளையும் சொல்லிய படத்தை ரசிகர்கள் வெற்றிபெறச் செய்திருப்பது நல்ல படத்துக்கு அவர்கள் எப்போதுமே துணை நிற்பார்கள் என்பதற்கான உதாரணமாகியிருக்கிறது. இன்னும் நூறுக்கும் அதிகமான திரையரங்குகளில் 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 21 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT