Published : 24 Mar 2017 10:02 AM
Last Updated : 24 Mar 2017 10:02 AM
தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மிகை நாடகமின்றிச் சித்தரித்து ‘மஞ்சப்பை’ படத்தின் மூலம் வெற்றியை ருசித்தவர் ராகவா. தற்போது ஆர்யா, கேத்ரின் தெரேசா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கடம்பன்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து….
பார்வையாளர்களை அழவைத்து வெற்றிக்கொடுத்த ‘மஞ்சப்பை’ அனுபவம் எப்படியிருந்தது?
எனது பாட்டி சென்னை வந்து என்னோடு இரண்டுமாதம் தங்கியிருந்தார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் கல கலக்க வைத்துவிட்டார். பாட்டி வந்துசென்றபிறகுதான் ராகவன் என்ற ஒருவன் இந்த அப்பார்ட்மெண்டில் இருக்கிறான் என்பதே அண்டை அயலாருக்குத் தெரியவந்தது. எனது தாத்தா, பாட்டி மட்டுமல்ல; கடந்த தலைமுறைகளின் மூத்தோர் அனைவருமே வெள்ளந்தி மனிதர்கள்தான். முதியோர் இல்லங்கள் இருந்தாலும் மூத்தோரை மதிக்கும் நம் தமிழர் பண்புக்குக் கிடைத்த வெற்றிதான் ‘மஞ்சப்பைக்கு'க் கிடைத்த வெற்றி’ .அந்தப் படம் வெளியான பிறகு எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஆயிரத்துக்கும் அதிகமான மின்னஞ்சல்கள் வந்து குவிந்தன.
‘கடம்பன்’ என்ற தூய தமிழ்த் தலைப்பு ஆச்சரியப்படுத்துகிறது…
நம் பண்பாட்டில் எத்தனையோ கதாபாத்திரங்கள் நம் பார்வையில் படாமல் அப்படியே இருக்கின்றன. கடம்பன் என்றால் மலையில் வாழும் வீரன் என்று பொருள். முருகக் கடவுளின் இன்னொரு பெயர். காக்கக்கூடியவன் என்பது இன்னொரு பொருள். மலையிலும் காட்டிலும் வாழும் மக்களைக் காக்கக்கூடியவன்தான் இந்தப் படத்தின் நாயகன்.
இந்தப் படத்துக்காக ஆர்யா செய்த சாகசங்கள் பற்றிய செய்திகள் நிறையவே வெளியாகிவிட்டன. வெளிவராத செய்தி ஏதாவது இருக்கிறதா?
நிறைய இருக்கிறது. இந்தப் படத்தில் கடம்பனாகவே ஆர்யா தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார். கடம்பனாகவே வாழ்ந்தார் என்று சொல்லவேண்டும். ஐநூறு அடி மலையில் இருந்து இடுப்பில் கயிரைக் கட்டிக்கொண்டு கீழே குதிக்கவேண்டும். அந்த ஷாட் அசலாக வரவேண்டும் என்று 20 முறை சளைக்காமல் மலையிலிருந்து குதித்தார். 16-வது முறை குதிக்கும்போது கண்ணின் இமை கிழிந்து தையல்போடும்படி ஆகிவிட்டது. ‘வேண்டாம் ஆர்யா’ காயம் ஆறியபிறகு எடுத்துக்கொள்வோம் என்றேன். “கடம்பனுக்கு இந்தக் காயமெல்லாம் தூசு” என்று சொல்லிவிட்டு அடுத்து ஒருமணி நேரத்தில் நான்குமுறை குதித்து 20-வது முறையில் ஓகே செய்துகொடுத்தார்.
காட்டுக்குள் மழை பெய்வதுபோல் ஒரு நாள் முழுவதும் படமாக்கினோம். காட்டில் படமாக்க வனத்துறையிடம் அனுமதி வாங்க மூன்றுமாதம் போராடினோம். அது கடைசிநாள் படப்பிடிப்பு. ஆர்யாவுக்கு 105 டிகிரி காய்ச்சல். படப்பிடிப்பை நிறுத்தலாம் என்றால் அனுமதிக்காக மேலும் 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். தயாரிப்பாளர் தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று நடுங்கும் உடலைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஒருநாள் முழுவதும் மழையில் நனைந்தபடி நடித்துக்கொடுத்தார். காட்டுக்குள் செருப்பில்லாமல் ஓடி, குதித்து முட்டியைப் பெயர்த்துக்கொண்டு, பாதத்தைக் கிழித்துக்கொண்டு... தினசரி ஆர்யாவுக்கு ரத்தக்களறிதான். அர்ப்பணிப்பு என்றால் அது ஆர்யா என்று என்னை உணரவைத்தார்.
காடுகளும், அதில் வாழும் பழங்குடிகளும் சந்தித்துவரும் நெருக்கடிகள் இன்று முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. அதைப் பின்னணியாக வைத்துக் கதை எழுத ஆராய்ச்சியில் இறங்கியிருப்பீர்கள். உங்கள் ஆராய்ச்சியில் கிடைத்த விஷயங்களிலிருந்து கதைக்கு எவ்வளவு தேவைப்பட்டது?
தேனிமுதல் சேலம்வரை ஆறுமாத காலம் மிகப்பெரிய பயணம் சென்றுவந்தேன். மலைகிராமங்களை அடைய ஆறு மணிநேரமெல்லாம் நடந்திருக்கிறோம். எனது ஆராய்ச்சியில் கிடைத்த அனைத்துமே அதிர்ச்சிகள்தான். ஆனால் இந்தக் கதைக்கு எவ்வளவு தேவையோ அதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். காட்டின், மலையின் மைந்தர்களின் குரல் உண்மைக்கு நெருக்கமாக இதில் பதிவாகியிருக்கிறது. இது எல்லா ரசிகர்களுக்கும்போய் சேரவேண்டும் என்பதற்காக சினிமாவுக்குத் தேவையான அம்சங்களைச் சேர்த்திருக்கிறேன். அதில் ரசனை இருக்குமே தவிர நோக்கத்தைச் சிதைக்கும் மசாலா தன்மை இருக்காது.
காடுகளில் படமாக்கும்போது திரைப்படத்துறைக்கும் அதிக பொறுப்பு இருப்பதை உணர்ந்து படமாக்கினீர்களா?
கண்டிப்பாக. பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இரண்டுக்கும் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் தடைவிதித்தோம். காட்டுக்குள் எப்படி நடந்துகொள்ளவேண்டும், மலைவாழ் மக்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லித் தந்தபிறகே படப்பிடிப்பைத் தொடங்கினோம்.
கதாநாயகி?
ரதி என்ற மலைவாழ்ப்பெண்ணாக நடித்திருக்கிறார் கேத்ரின் தெரேசா. மிகத்துணிச்சலான கதாபாத்திரம். இவருக்கும் சண்டைக்காட்சி இருக்கிறது. டூப் போடாமல் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
ட்ரைலரில் நூற்றுக்கணக்கான யானைகளை வைத்து படமாக்கியிருப்பதுபோல் தெரிகிறதே.. எல்லாம் கிராஃபிக்ஸா?
இல்லவே இல்லை… தயாரிப்பாளரிடம் கதை சொன்னதுமே க்ளைமாக்ஸில் இடம்பெறும் இவ்வளவு யானைகளுக்கு எங்கே செல்வீர்கள் என்றார். இந்தியாவில் யானைக்கூட்டத்துக்கு மத்தியில் படமாக்குவது சாத்தியமல்ல என்று தெரிந்துகொண்டேன். அப்போதுதான் தாய்லாந்தில் இருக்கும் ‘சியாங் மாய்’ யானைப்பண்ணைகள் பற்றி அறிந்து அதற்கு விசிட் அடித்தேன். ஒவ்வொரு யானைப்பண்ணையிலும் ஒன்றோ இரண்டோ அல்ல; சுமார் 200 யானைகள். அத்தனையும் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள்.
ஐந்துநாள் முன்னதாக சென்று நாயகன், நாயகி மற்ற நடிகர்கள் அனைவரும் யானைகளுடன் பழகி 10 நாட்களில் பிரமாண்ட க்ளைமாக்ஸைப் படம்பிடித்துத் திரும்பினோம். இதை நான் இந்தியாவில் எடுக்க நினைத்திருந்தால் 40 நாட்கள் ஆகியிருக்கும். இத்தனை பிரம்மாண்டமான காட்சி இதற்குமுன் எந்தத் தமிழ்ப் படத்திலும் இல்லை என்பதைப் படம் பார்த்தபின் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT