Published : 24 Oct 2013 10:52 AM
Last Updated : 24 Oct 2013 10:52 AM
கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது பற்றி போக்குவரத்து காவல் துறையினர் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரை சாலையில் (காமராஜர் சாலை) காந்தி சிலை அருகே நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிலை அமைக்கக் கூடாது எனக் கோரி கடந்த 2006-ம் ஆண்டு பி.என்.சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறி ஞர் ஏ.எல்.சோமையாஜி, சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று வாதிட்டார்.
ஆனால் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, காமராஜர் சாலையிலிருந்து வலது புறமாக ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்புவோருக்கு சாலை சரியாக தெரியாமல் மறைக்கும் வகையில் சிவாஜி சிலை உள்ளது என்று வாதம் செய்தார்.
இதனையடுத்து சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு ஏதேனும் இடையூறு உள்ளதா என்பது பற்றி அந்தப் பகுதியின் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை நவம்பர் 13-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT