Published : 05 May 2017 11:00 AM
Last Updated : 05 May 2017 11:00 AM
‘சகாவு' மலையாளப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் வெற்றி மாறன், கவுதம் மேனன் ஆகியோர் இயக்கத்தில் நடித்துவருவதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மகிழ்ச்சிக்கு மத்தியில் அவரிடம் பேசியபோது...
‘சகாவு' படத்தில் உங்களுடைய கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது பற்றி...
படம் வெற்றியடைவது முக்கியமில்லை. என்னைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி, சுமார் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டேன். நல்ல படங்களில் இருக்க வேண்டும் என நினைப்பேன். மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’, நிவின் பாலியுடன் ‘சகாவு' என இரண்டுமே வித்தியாசமான கதைகள், அவற்றில் என்னுடைய கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறாக இருக்கும். எனக்கு மலையாளம் தெரியாது. மொழி எப்போதுமே தடையில்லை. கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கிக்கொண்டால் எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
‘காக்கா முட்டை' படத்துக்குப் பிறகு உங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதை உணர்கிறீர்களா?
ஐஸ்வர்யா ராஜேஷ் என்றால் நன்றாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதில் எனக்குப் பயம் அதிகரித்திருக்கிறது. இதனால் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற பதற்றம் என்னிடம் தொற்றிக்கொண்டுவிட்டது. மக்கள் ஏற்றுக் கொள்வார்களா, நமக்குப் பொருத்தமாக இருக்குமா என நிறைய யோசிக்கிறேன். ‘தர்மதுரை' படத்தில் 3 கதாபாத்திரங்கள் இருந்தன. எனது கதாபாத்திரம் எடுபடுமா என்று பயந்தேன். ஆனால், டப்பிங் பேசி முடித்தபோது எனது கதாபாத்திரம் தனியாக நிற்கும் என்று தோன்றியது.
தமிழ் தெரியத நடிகைகள் முன்னணி நடிகைகளாக இருக்கிறார்களே என்ற வருத்தம் உள்ளதா?
கண்டிப்பாகக் கிடையாது. முன்னணி நாயகியாக வேண்டும் என்று எண்ணத்தோடு ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருக்கிறேன். தமிழ் தெரியாத நாயகிகள் முன்னணி நாயகிகளாக இருப்பதுதான் மிகவும் கடினம். மொழி தெரியாமல் என்ன வசனம் பேசுகிறோம் அதன் அர்த்தம் என்ன என உணர்ந்து சரியாக உதட்டை அசைப்பது நடிப்பதுதான் கடினம். அவர்கள் முன்னணியில் இருப்பதற்குக் கண்டிப்பாக உழைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறேன். பிறகு ஏன் வருத்தப்பட வேண்டும்?
‘டாடி' படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகவுள்ளீர்கள். எப்படி இருக்கிறது இந்தி திரையுலகம்?
தென்னிந்தியத் திரையுலகத்தோடு ஒப்பிடும்போது இந்தித் திரையுலகம் என்பது கடல் மாதிரி மிகவும் பெரியது. அங்கு பணிபுரியும்போது வேறொரு உலகத்தில் இருப்பது போன்று இருந்தது. புது நாயகி என்பதால் படக்குழுவினர் என்னை அருமையாகப் பார்த்துக்கொண்டார்கள். அந்த விஷயத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என நினைக்கிறேன். மொழி தெரியாது என்பதால் எனக்காக மொத்தப் படக் குழுவும் காத்திருந்து காட்சிப்படுத்தினார்கள்.
‘வடசென்னை', ‘துருவ நட்சத்திரம்' படங்கள் குறித்து...
இரண்டிலுமே முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறேன். என்னுடைய திரையுலக வாழ்வில் இரண்டு படங்களுமே பெரிய படங்களாகவும், முக்கியமான படங்களாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நடிகை என்றால் ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க வேண்டிய சூழல் வரும். எப்படிச் சமாளிக்கிறீர்கள்?
கமர்ஷியல் படங்கள் செய்யும்போது எனக்குப் பிரச்சினை வந்ததில்லை. ஒரே நேரத்தில் 3 படங்களை ஒப்புக்கொண்டு நடிப்பதில்லை. ஒவ்வொரு படத்திலும் எனது கதாபாத்திரத்தை உள்வாங்கி, கதாபாத்திரமாகவே மாறி நடிக்கவே முயற்சிக்கிறேன். ஒரு கதாபாத்திரமாகவே நினைத்துக்கொண்டு நடித்து முடித்ததும், இன்னொரு கதாபாத்திரத்துக்கு உடனே என்னைத் தயார் செய்துகொண்டு நடிப்பது கடினமாகத்தான் இருக்கும். இது நடிகர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வரும் சவால்தான்.
எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
எனக்குப் பிடித்திருந் தால் அந்தக் கதாபாத்திரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். 'சகாவு' படத்தில் 60 வயதுக் கிழவியாக நடிப்பதற்காக, நான் 60 வயதுக் கிழவியாக மாறியா நடிக்க முடியும். அந்த வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் கடினமாக இருந்தது. என்னதான் மேக்கப் எல்லாம் போட்டாலும், உடலில் கூன் விழுந்து, வசன உச்சரிப்பை வயதுக்குத் தகுந்தாற்போன்று மாற்றி நடித்தது மறக்க முடியாத அனுபவம். அதற்கான பாராட்டும் கிடைத்துவருவதுதான் என்னைப் போன்றவர்களுக்கு சந்தோஷம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT