Published : 02 Mar 2014 09:58 AM
Last Updated : 02 Mar 2014 09:58 AM

வல்லினம்: திரை விமர்சனம்- இந்து டாக்கீஸ் குழு

டைட்டில் கார்டுகளோடு அனி மேஷன் கதையொன்று காட்டப்படுகிறது. ஈட்டியைக் கண்டறிந்த ஆதி மனிதர்கள் காட்டில் வேட்டையாடுகிறார்கள். சிங்கம் பாய்ந்து வருகிறது. இந்த நான்கு பேரின் பலம் பெரிதா, சிங்கத்தின் பலம் பெரிதா? வாழத் தகுதியான வல்லினம் மனிதனா, மிருகமா என்ற கேள்வி எழ, நான்கு மனிதர்களும் ஒன்றிணைந்து சிங்கத்தை வீழ்த்துகிறார்கள்.



படத்தில் சிங்கத்தின் இடத்தில் கிரிக்கெட். கார்ப்பரேட் உலகம் மார்க்கெட்டிங் சவாரி செய்யும் பணக்கார விளையாட்டு. கோடிகளில் புரளும் ஸ்பான்சர்ஷிப், வீரர்களுக்குக் கிடைக்கும் பணம், பரிசுகள்... விளையாட்டு என்றால் அது கிரிக்கெட்தான் என்ற ஊடகங்களின் ஒரு சார்பான சித்தரிப்பு என இந்தியர்களின் வாழ்க்கையில் கிரிக்கெட் செலுத்திவரும் வலுவான செல் வாக்கையும், அதனால் மற்ற விளையாட்டுக்கள் கவனம் பெறத் தவறி விட்டதையும் கதையாக்கியிருக்கிறார் 'ஈரம்' படத்தின் மூலம் கவர்ந்த இளம் இயக்குநர் அறிவழகன்.

வலிமை பொருந்திய சிங்கம் போன்ற கிரிக்கெட்டுக்கும் இதர விளையாட்டுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியில் வென்றது எது என்பதே 'வல்லினம்' கதை.

திருச்சியில் ஒரு கல்லூரியில் படிக்கும் கிருஷ்ணா (நகுல்), கூடைப்பந்து விளையாடும்போது அவன் நண்பன் சிவா (கிருஷ்ணா) எதிர்பாராத விதமாக இறந்து போய்விட, இனிமேல் கூடைப்பந்தைத் தொடுவதில்லை என்று முடிவெடுக்கிறான். கல்லூரியையும் மாற்றிச் சென்னைக்கு வந்துவிடுகிறான். கல்லூரியில் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள். அழகான ஒரு பெண்ணின் (மிருதுளா) நட்பும் கிடைக்கிறது. அந்தக் கல்லூரி கிரிக்கெட்டில் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதால் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட்டே முன்னால் நிற்கிறது. கூடைப்பந்தாட்டம் முதலான விளையாட்டுக்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. அவற்றை ஆடுபவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் கிருஷ்ணா மீண்டும் கூடைப்பந்தைக் கையில் எடுக்கிறான். ஒரு கட்டத்தில் கிரிக்கெட் குழு, கூடைப்பந்தாட்டக் குழு இரண்டும் முட்டிக்கொண்டு நிற்கின்றன. கூடைப்பந்து அணிக்குக் கல்லூரி நிர்வகத்தின் ஆதரவு கிடைக்க வில்லை. அவர்கள் டோர்னமென்ட் ஆட எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிரிக்கெட் அணியினர் கோப்பை வென்றதால்தான் அவர்கள் கல்லூரியில் ஆதிக்கத்துடன் இருக்கிறார்கள். தாங்களும் கோப்பையை வென்றால்தான் ஆதிக்கம் பெற முடியும் என்பதை உணர்ந்த கூடைப்பந்து அணி, கோப்பையை வெல்லும் முனைப்புடன் போராடுகிறது. இந்தச் சவாலை அந்த அணி எப்படி எதிர்கொண்டது? இளம் விளையாட்டு வீரனின் கல்லூரி வாழ்க்கையையும் காதலையும் கொண்டு கதையை சுவாரஸ்யமாகக் கட்டமைத்திருக்கிறார் இயக்குநர். கிரிக்கெட்டின் புகழுக்கும் செல்வாக்குக்கும் பின்னணியில் இருக்கும் பணபலம் குறித்த அம்பலங் களைக் கதையினூடே இயல்பாகக் கொண்டுவருகிறார். கார்ப்பரேட் உலகின் நிழலாகவே கிரிக்கெட் இருக்கிறது என்பது இரண்டு தொழிலதிபர்கள் பேசிக்கொள்வதன் வழியாகச் சொல்லப்படுகிறது.

கூடைப்பந்து விளையாட்டை முன்னிறுத்திய விதத்திலும் அதனைக் காட்சிப்படுத்திய விதத்திலும் 'ஈரம்' அறிவழகன் பளிச்செனத் தெரிகிறார். மாணவர்களிடையே வரும் மோதலையும் நட்பையும் நன்றாகச் சித்தரித்திருக்கிறார். ஆனால் பணக்காரக் காதலி, பணக்கார வில்லன், காதலியும் வில்லனும் நண்பர்கள், காதலியின் அப்பா நாயகனுக்கு உதவுவது எனத் தொன்றுதொட்டு வரும் காட்சிகள் இருப்பது குறை.

விளையாட்டுக் காட்சிகள் செறிவாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. மற்ற காட்சிகளில் சினிமாத்தனம் தெரிகிறது. நகுலின் நடிப்பு படத்திற்குப் பெரிய பலம். தன் ஒவ்வொரு அசைவிலும் விளையாட்டு வீரனைக் கண் முன் கொண்டு வருகிறார். காட்சிகளுக்கு அழகு சேர்ப்பதையும் தாண்டிக் கதாநாயகி மிருதுளாவுக்குச் சில பங்களிப்புகள் இருக்கின்றன. அவற்றை அவர் நிறைவாகச் செய்திருக்கிறார். ஜகன் கலகலப்பு கூட்டுகிறார். சந்துரு, அம்ஜத் கான் ஆகியோர் நடிப்பு கச்சிதம்.

பாஸ்கரனின் ஒளிப்பதிவு கல்லூரி காட்சிகள், கூடைப்பந்து விளையாட்டுக் காட்சிகள், ரயில் காட்சிகள் என வித்தியாசப்படுத்தியிருக்கிறது. படம் முழுவதும் சிவப்பு நிறப் பின்னணி அமைத்திருப்பது அழகு. பாடல்கள் கதையிலிருந்து விலகி நிற்கின்றன. எனினும் தமனின் பின்னணி இசை குறிப்பிடும் வகையில் இருக்கிறது.

கூடைப்பந்து மீது பெரும் நேசமுள்ள அணியினர் ஒரு கட்டத்தில் அதில் கிடைக்கப்போகும் பரிசுப் பணத்தின் மீது ஆசைப்படுவதையும் இயக்குநர் காட்டுகிறார். இந்தக் காட்சி இந்திய விளையாட்டுத்துறையின் யதார்த்தமாக நிற்கிறது. முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு வலுவான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாகச் சொன்ன இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x