Last Updated : 10 Feb, 2017 10:09 AM

 

Published : 10 Feb 2017 10:09 AM
Last Updated : 10 Feb 2017 10:09 AM

அந்த வகைப் பாடலுக்கே ஆயுள் அதிகம்! - பாடலாசிரியர் பார்வதி நேர்காணல்

‘‘எப்போதும் தமிழ் மீது துளிர்த்துக்கொண்டே இருக்கும் தனித்த ஆர்வம். மகாகவி பாரதி மீதான மகா பிரியம். நண்பர்கள் சூழும் இடங்களில் சினிமா குறித்து முன் வைக்கும் விவாதம் இதெல்லாம்தான் ஒரு பாடலாசிரியையாக என் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யத் தூண்டியது!’’ - மென்மையாகப் பேசத் தொடங்குகிறார், பாடலாசிரியர் பார்வதி.

எஸ்.எஸ்.தமன் இசையில் ‘வல்லினம்’ படத்தில் இடம்பெற்ற ‘நகுலா’ பாடல் வழியே பாடலாசிரியராக அறிமுகமாகி டி.இமான் இசையில் ‘ஜில்லா’ படத்தில் ‘வெரசா போகையில’ பாடல் மூலம் தனித்த அடையாளம் பெற்றவர். ‘அமரகாவியம்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ‘அதே கண்கள்’ என்று அடுத்தடுத்த பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார். கவிதை கலந்து காஃபி அருந்தியபடியே அவருடன் ஒரு சந்திப்பு:

இந்தப் பாடலாசிரியர் பயணம் எப்படிச் சாத்தியமானது?

பள்ளி, கல்லூரிக் காலங்களில் தமிழாசிரியர்கள் மட்டும் என் மீது அளவு கடந்த அபிப்ராயத்தை வைத்திருந்தனர். அதுக்கு காரணம் என் தமிழ் உச்சரிப்பு. சிறு வார்த்தையைப் பயன்படுத்தும்போதும் அழுத்தம், திருத்தமாகத்தான் பேசுவேன். அந்த நுணுக்கம்தான் தமிழ் மீது தீராத காதலை விதைக்கக் காரணம். பாடலாசிரியர் ஆகலாம் என்ற கனவு துளிர்த்தும் மெட்டுக்கு எழுதும் ஆற்றல் இயல்பாகவே அமைந்தது. கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ற மாதிரி எழுதுவதையும், ஒரு மெட்டுக்கு வார்த்தையின் ஒலி எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதையும் அண்ணன் அறிவுமதியிடம் கற்றுக்கொண்டேன்.

இன்றைய சினிமா சூழலில் ஒரு பெண் பாடலாசிரியருக்கான இடம் எந்த மாதிரி உள்ளது?

நான் திரைப்பட பாடல்கள் எழுத வரும்போது கவிஞர் தாமரை ஒருவர்தான் தனி அடையாளத்தோடு எழுதிக்கொண்டிருந்தார். ஒரு பெண் பாடலாசிரியராகப் பயணிப்பது மிகவும் எளிமையான விஷயம் என்றுதான் உள்ளே வந்தேன். ‘அமரகாவியம்’, ‘ஜில்லா’ படங்களில் எழுதிய பாடல்களுக்கெல்லாம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிறகும் சிரமமாகவே இருந்தது. இந்தச் சூழல் ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. என்றாலும் பெண் பாடலாசிரியராகப் பயணிப்பது கூடுதல் கஷ்டம்தான். இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.

மென்மையான, அழுத்தமான வரிகள் கொண்ட பாடல்கள் வெளிவரும் சூழலுக்கு நடுவே, துள்ளல் இசைப் பாடல்கள் மட்டும் இளைஞர்களிடம் எளிதில் போய்ச் சேர்ந்துவிடுகிறதே?

எல்லாக் காலகட்டத்திலுமே துள்ளல் இசைப்பாடல்கள் எளிதில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. ‘வல்லினம்’ படத்தில் ராப் வகை பாடல் ஒன்றைத்தான் எழுதினேன். படத்தின் நீளம் காரணமாக அதை வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போதும் அந்த மாதிரியான பாடல்கள் எழுத ஆர்வமாகவே இருக்கிறேன். ஒரு பாடலாசிரியர் ஆபாசமான வார்த்தைகளைக் கோக்காமல் மற்றபடி எல்லாவிதமான பாடல்களையும் எழுதத் தயாராகவே இருக்க வேண்டும். பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு முறை ‘மியூசிக்ல இருக்கிற ‘எம்’ தான் மெலடி. அது இல்லாமல் போனால் ‘ இட் மேக்ஸ் யூ சிக்’ என்று சொன்னார். அதுதான் உண்மை. துள்ளல் இசை பாடல்கள் உடனடியாக ஈர்த்தாலும், மென்மையான பாடல்களுக்கே ஆயுள் அதிகம்.

இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மூவரும் கூட்டாக அமர்ந்து ஒரு பாடல் உருவாக்கும் சூழல் குறைந்து ‘வாட்ஸ் அப்’பில் டியூன் அனுப்பிப் பாடல் எழுதி வாங்கும் சூழல் அதிகரித்து வருகிறதே?

அந்த மாதிரி நான் வேலை பார்த்ததில்லை. ஆனால் அதில் பிரச்சினை எதுவும் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு பாடல் உருவாகும்போது அதன் ஜீவன் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நேரில் பார்த்து, கலந்து பேசி ஒரு பாடல் உருவாகும்போது அதன் மதிப்பு அதிகம்தான். ஆனால், அதற்காக இப்போது உள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாவதையும் நிறுத்த முடியாது.

புதிதாக எழுத வந்துள்ளவர்களில் சிலர் இலக்கிய புலமை குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற விமர்சனமும் இங்கே உள்ளதே?

எல்லா இடத்திலும் இலக்கியம் தேவைப்படுவதில்லை. பாடலிலும் அப்படித்தான். எல்லாச் சூழ்நிலையிலும் ‘நறுமுகையே’ மாதிரியான பாடல்களை கொடுக்க முடியுமா என்ன? ‘ஜில்லா’ படத்துக்காக ‘வெரசா போகலையில’ பாடலை எழுதும்போது எளிமையான வார்த்தைகளில் அந்தப் பாடல் இருந்தால் போதும் என்ற விவாதம் வந்தது. அதன்படியே உருவானது. முழுமையாக இங்கே எதையும் கற்றவர்கள் இல்லை. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விஷயமும் மாறும். இளம் பாடலாசிரியர்கள் அதை உணர்ந்தே எழுதுகிறார்கள்.

ஜிப்ரான் இசையில் சமீபத்தில் வெளியான ‘அதே கண்கள்’ படத்தின் பாடல் தனித்து அடையாளம் பெற்றுள்ளதே?

‘போன போக்கில் சொல்லும் சின்ன வார்த்தையே..’ என்று நான் எழுதிய பாடல் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி. இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தில் என் கவிதை வரிகளைச் சற்றே மாற்றி எழுதியிருக்கிறேன். ஜிப்ரான் இசை கேட்ட மாத்திரத்தில் ஈர்க்க வைத்ததும் ஒரு காரணம். அதேபோல பாடகர் அனுதீப் தேவ், பாடகி நம்ரதா ஆகிய இருவரும் பாடலை சிறப்பாகப் பாடியுள்ளனர். படத்தின் காட்சியும் அழகாக அமைந்தது. இதெல்லாம் ஒன்றுசேர்ந்ததால் தனித்துக் கவனிக்கப்படுகிறது

கடந்த பன்னிரெண்டு ஆண்டு களுக்கும் மேலாக அதிக பாடல் எழுதிய பாடலாசிரியராக பயணித்த நா. முத்துக்குமாரின் இழப்பு, அவரால் ஏற்பட்ட வெற்றிடம் எப்படி உள்ளது?

‘வளையாமல் நதிகள் இல்லை. வலிக்காமல் வாழ்க்கை இல்லை.. வரும் காலம் காயம் ஆற்றும்’ அவரது இந்த மாதிரியான வரிகள் எல்லாம் என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு உந்து சக்தியாக இருந்திருக்கின்றன. அவரது இடத்தை வேறு ஒரு பாடலாசிரியரால் நிரப்ப முடியாது. பாடலாசிரியர்கள் நா. முத்துக்குமார், அண்ணாமலை, எடிட்டர் கிஷோர் மாதிரியான திறமையானவர்களை சமீபத்தில் இழந்துவிட்டோம். இங்கே பல திறமைசாலிகள் உழைப்பு, உழைப்பு என்று உடல்நலனில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடுகிறார்கள். முடிவில் அந்த உழைப்பே எமனாக மாறிவிடுகிறது. அதையும் நாம் கவனிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x