Published : 31 Oct 2014 02:34 PM
Last Updated : 31 Oct 2014 02:34 PM
ஒரு நெடுங்கதை திரைப்படம் ஆகும்போது அதன் ஜீவன் கெட்டு உருத்தெரியாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. பாலுமகேந்திரா கதை நேரத்தில் சில சிறுகதைகளை உன்னதமான குறும்படங்களாக எடுத்துக் காட்டியும் இன்னமும் நம் இயக்குநர்கள் சுஜாதாவின் கதைகளுக்குத் திரைவடிவம் தராதது பெரும் சோகம்.
ஆனால் சுஜாதாவின் கதைக் கருக்களும் காட்சிகளும் வசனங்களும் திரையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சில சிறுகதைகளை அற்புத சினிமாவாக்கிய பெருமை மகேந்திரனைச் சேரும். அதே போல காட்ஃபாதர் நாவலையும் படத்தையும் ஜீவன் குறையாமல் தமிழில் வடித்த பெருமை மணி ரத்னத்தையும் அவரது படக் குழுவையுமே சாரும்.
காட்ஃபாதர் நாவல் படித்த பின் அந்தப் படம் பார்க்கத் தயக்கமாகவே இருந்தது. எனினும் பலரும் தந்த உற்சாகத்தில் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தேன். மரியோ பூஜோவின் இருட்டு உலகத்தை எப்படி சினிமாவாக எடுப்பார்கள்? நான் மனதில் கட்டமைத்த மனிதர்களை எப்படி நடமாட விடுவார்கள்? ரத்தம் சில்லிடும் நிகழ்வுகளை எப்படி அதே உணர்வுடன் திரையில் காட்டுவார்கள்?
காட்டியிருந்தார் கப்போலா. ஏழு பரிந்துரைகள், மூன்று விருதுகள் (சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை) என ஆஸ்கரை ஆக்கிரமித்தது முதல் பாகம். காட்ஃபாதர்- 2 மற்றும் 3 என ஹாட்ரிக் அடித்த படம் இன்றும் உலகம் முழுதும் கொண்டாடப்படும் படைப்பு. திரைக்கதையை மரியா பூஜோவும் கப்போலாவும் சேர்ந்து எழுதியதுதான் நாவலைத் திரைப்படமாக்கும் ரசவாதத்தை எளிமைப்படுத்தியது என்று நினைத்துக்கொண்டேன்.
காவியக் கதாபாத்திரம்
நியூயார்க்கின் மாஃபியா குடும்பம் பற்றிய கதை. ஒரு கார்பரேட் நிர்வாகம் போல அதன் செயல்பாடுகள், சிக்கல்கள், துரோகங்கள், மாற்றங்கள் என இயல்பான தொனியில் செல்லும் ஆக் ஷன் படம். மார்லன் பிராண்டோ இதன் முதல் கதாநாயகத் தேர்வு அல்ல. சொல்லப்போனால் இந்தக் கதையையே பெரிதாக இஷ்டப்பட்டு ஆரம்பிக்கவில்லை கப்போலா.
நடிகர்களைத் தேர்வுசெய்து பார்த்தபோது பிராண்டோ திருப்திகரமாக இருந்தார். அவர் வார்த்தைகளை மென்றுகொண்டே பேசும் பாங்கும், பாத்திரத்தைக் உள்வாங்கி அவர் செய்த ‘அண்டர்பிளே’ நடிப்பும், அவர் தோன்றும் எல்லாக் காட்சிகளிலும் செய்யப்பட்டிருந்த ஒளி அமைப்பும் அந்தப் பாத்திரத்தை காவியத் தன்மை பெறச் செய்தது எனலாம்.
காட்ஃபாதர் லைட்டிங் என்று சொல்லும் அளவிற்குப் புதிதாகத் தெரிந்த ஒளி அமைப்பில் (ஒளிப்பதிவு: கார்டன் வில்லிஸ்) நாயகன் கண்களுக்கு வெளிச்சமே படாது. அவன் உள் நோக்கங்கள் எதிராளிக்குப் புரியாததன் குறியீடாய் அது அமைந்திருக்கும்.
பேசாமல் பேசும் காட்சிகள்
பேரம் பேசும்போது நம் உடல் மொழி மட்டுமல்ல, நம் உடன் இருப்போர் உடல் மொழியும் நம் எண்ணங்களை உணர்த்தும். டான் போதை மருந்துக் கும்பலுடன் பேசுகையில் மூத்த மகனின் உடல் மொழி நிலைகொள்ளாமையை வெளிப்படுத்தும். அதுதான் பின்னர் குடும்பத்தில், தொழிலில் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்க வைக்கிறது. டான் உயிருக்கு ஆபத்து வருகிறது. கப்பல் படையிலிருந்து வரும் இளைய மகனின் திட்டங்களை மாற்றி அமைக்கிறது. மைக்கேல்
(அல் பசினோ) விடுதியில் பழி வாங்கும் படலம் அபாரமான ஆக் ஷன் சீன். பேசிக்கொண்டிருக் கையில் இடையில் பாத்ரூம் சென்று, அங்கு பதித்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து சரமாரியாகச் சுடும் காட்சி, பின்னர் பல இயக்குநர்களால் சுடப்பட்ட காட்சி!
அதேபோல் தன் அதிகாரத்தை உணர்த்த, அந்தத் திரைப்படத் தயாரிப்பாளர் போர்வைக்குள் அவர் பெரிதும் நேசிக்கும் குதிரையின் தலையை வெட்டி வைக்கும் காட்சியைக் கூறலாம்.
டான் என்கிற பாத்திரப் படைப்பு உலக சினிமாவைப் பெரிதும் பாதித்தது என்பது உண்மையே. எலியாஹூ கோல்ட்ராட் எனும் நிர்வாக மேதை பேரத்தில் தன் நிலையை வைத்து எதிராளியைப் பணியவைக்கும் முறைக்கு ‘Mafia Deal’ என்று பெயரிட்டது திரைப்படம் தாண்டி இந்தப் படத்தின் வீச்சை நமக்குப் புரியவைக்கிறது.
தமிழில் மீண்டும்
நாயகன் படம் காட்ஃபாதர் படத்தின் நகலா என்றால் ஆமாம், இல்லை என இரு பதில்கள் சொல்லலாம். ஆனால் காட்ஃபாதர் கதையை வேறு களத்தில் அதே திரைக்கதை வடிவத்தில் மிக அழகாக, சாமர்த்தியமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்ப் படம் இன்னொன்று உண்டு தெரியுமா?
பெரிசுதான் ஊர்கட்டு. மூத்த மகன் லாயக்கில்லை. காதலியுடன் ஊருக்கு வரும் இளைய மகன், தந்தை தொழிலில் ஆர்வம் இல்லை, கல்யாணம் செய்து வெளியே செல்லத் திட்டம், குடும்பப் பகையும் ஊர் அரசியலும் அப்பாவைக் காவு வாங்குகிறது, இளைய மகன் வேறு வழி இல்லாமல் தந்தை ஸ்தானத்தில் அமர்கிறான், பகைக் கணக்கைத் தீர்க்கிறான்.
ஆமாம், தேவர் மகன்தான். காட்ஃபாதர் மிகச்செறிவான படைப்பு. கப்போலாவின் கை வண்ணம் ஒவ்வொரு இழையிலும் தெரியும். அதன் உன்னதம் பல படிமங்களில் உள்ளது. இன்றைய கார்பரேட் கட்டமைப்பைச் சரியாகச் சொல்லும் படம் என்பதால், இதை என் கருத்தரங்குகளுக்கு நிறைய பயன்படுத்தியுள்ளேன்.
வழக்கமாக இதைத் தமிழில் எடுக்க என்ன செய்யலாம், எடுத்தால் யார் நடிக்கலாம் என்று குறி பார்த்துச் சொல்வேன். இதை இனிமேல் தமிழில் பண்ண முடியுமா? தாராளமாகப் பல முறை புதிது புதிதாகப் பண்ணலாம். 25 வருடங்கள் கழித்து மணி ரத்னமே கமலை வைத்து மீண்டும் பண்ணலாம்.
நல்ல எழுத்தாளரைப் பயன்படுத்தும் இயக்குநர் விருப்பப்பட்டால் அஜித் (பழைய படங்கள் சாயல் இல்லாமல்) பண்ணலாம். எனக்கு பாலா போன்ற ஒரு இயக்குநர் விஜய் சேதுபதி போல ஒருவரை நடிக்க வைத்துப் புதிய பரிமாணத்துடன் காட் ஃபாதரைப் பார்க்க ஆசை.
கதைதான் நாயகன். நடிகன் அதற்குத் தேவையான அளவு தன்னைப் பொருத்திக்கொண்டால் போதும். இயக்குநரின் சினிமாதான் உலக சினிமா. காட்ஃபாதர் நிச்சயம் அவ்வகையில் கப்போலாவின் உலக சினிமா.
தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment