Published : 12 Oct 2014 02:35 PM
Last Updated : 12 Oct 2014 02:35 PM
ஆசை ஆசையாய் அணிந்து கொள்ளும் பொன் நகை, ஒரு அன்பான குடும்பத் தம்பதியின் புன்னகையைச் சீர்குலையச் செய்கிற கதை ‘வெண்ணிலா வீடு’.
அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கார்த்தியும் (செந்தில்), தேன்மொழியும் (விஜயலட்சுமி) குழந்தையோடு நடுத்தரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். கார்த்தி ஒரு தனியார் நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய மேனேஜராக வேலை பார்க்கிறான். குழந்தை, வீடு ஆகியவற்றுக்கு இடையே இலவச டியூஷன் நடத்தும் இல்லத்தரசி தேன்மொழி. இவர்களின் பக்கத்து வீட்டுக்கு செல்வச் சீமாட்டியாகக் குடிவருகிறாள், இளவரசி (சிருந்தா ஆசாப்). பணக்காரத் திமிர் பிடித்த பெண்ணான இளவரசியைத் தன் அன்பால் வெல்கிறாள் தேன்மொழி. இருவரும் நெருக்கமான தோழிகளாகிறார்கள்.
கார்த்தி வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் மகளுக்கு திருமணம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கழுத்து நிறைய நகை இருந்தால்தான் வருவேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள் தேன்மொழி. அதை அறிந்த தோழி இளவரசி தன்னுடைய நகைகளைக் கொடுக்கிறாள். அதை அணிந்துகொண்டு திருமணத்துக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு திருட்டுக் கும்பலிடம் நகைகளைப் பறிகொடுக்கிறாள், தேன்மொழி. இந்தச் சம்பவத்துக்கு பிறகு இரண்டு தோழிகளின் நட்பில் எப்படி விரிசல் விழுகிறது. அதனால் ஏற்படும் மனக் கசப்பை சரி செய்ய தேன்மொழியின் கணவன் கார்த்திக் எடுக்கும் முயற்சிகள் என்ன? களவு போன 25 லட்சம் மதிப்பிலான நகை அழகான தம்பதியின் வாழ்க்கையை எப்படிச் சீர்குலைக்கிறது என்கிற கோணங்களில் மீதிக் கதை நகர்கிறது.
அட்சய திருதியை அன்று நகை வாங்கக் குவியும் மக்களோடும், அவர்களின் மனநிலை குறித்த விவாதத்தோடும் படத்தின் கதை தொடங்கும்போதே, இது தங்கத்தை பற்றிச் சொல்லப்போகிற திரைக்கதை என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. திருட்டுத்தனமாக ஒரு கேமரா நம் வீட்டு ஹால் வழியே நுழைந்து பெட்ரூம் வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை சூசகமாகச் சொல்லி எச்சரிக்கை மணி அடித்திருக்கும் இயக்குநர் வெற்றிமகாலிங்கத்தின் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது.
அவ்வளவு விசுவாசமான உழைப்பாளி என்று மெச்சிக்கொள்ளும் கார்த்திக்கின் முதலாளி, தனது குடும்ப நிகழ்ச்சிக்கு வந்தபோதுதான் நகை காணாமல் போனது என்பதை அறிந்து வேதனைப்படுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.அழுத்தமாக ஒரு விஷயத்தை திரைக்கதையில் நகர்த்திக்கொண்டு போகும்போது பாடல்கள் இடைச்செருகல்களாக வேண்டாத இடத்தில் நுழையும். அந்த மாதிரியான செயலுக்காகப் படக் குழுவினர் போராடவில்லை.
நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பேர்போன செந்திலுக்கு வித்தியாசமான வேடம். நிறைவாகச் செய்திருக்கிறார். விளை நிலத்தை விற்று கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையைக் கடத்துவோம் என்று முடிவெடுக்கும் சொந்த ஊர்க்காரர்களுக்குப் புரியும்படியாக எடுத்துச்சொல்லும் போதும், திருட்டுப்போன நகைக்காகப் பணத்தை திருப்பிக்கொடுப்பதற்காக அந்த நிலத்தை விற்கிற அளவுக்குப் போகும்போதும் செந்தில் அடக்கமாக, அளவாகவே நடித்திருக்கிறார்.
‘மாமா மாமா’ என்று கணவன் மேல் அன்பைப் பொழியும் கிராமத்துப் பெண்ணாக விஜயலட்சுமி கவர்கிறார். கிராமத்திலிருந்து நகரத்தில் குடியேறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வெளிப்படுத்தியுள்ள விதத்தை நிச்சயம் பாராட்டலாம். கார்த்திக்கைத்தான் தேன்மொழி காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் கார்த்திக்கின் நண்பர்கள் அவளுக்குக் காதல் வலை வீசும் சம்பவங்கள் பலவீனமான காமெடி சீன்களாகவே இருக்கின்றன. இவர்களைக் கடந்து மனதில் நிற்கும் கேரக்டரில் அசத்துகிறார் கார்த்திக்கின் குடிகார மாமா.
சிருந்தா ஆசாப் அப்பாவாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன் வில்லனாக நடித்திருக்கிறார். துடுக்கான வில்லன் என்பதைவிட மகள் மீது பாசத்தைப் பொழியும் சராசரி அப்பாவாக நடித்திருக்கும் விதம் சிறப்பு. ‘ஜானி ஜானி’ பாடல் இளைஞர்களை கவரும். பின்னணி இசைப் பணியையும் கதைக்கும், காட்சிக்கும் சிக்கலில்லாமல் கையாண்டிருக்கிறார், இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம். தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப்பின் வேலைகளும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றன.
வலுவான அம்சங்கள் பல இருந்தும் படத்தை உருவாக்கிய விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமற்ற சம்பவங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில்தான் வேகம் எடுக்கிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் பதைக்கவைக்கின்றன. ஆனால் சினிமா என்னும் அளவில் நல்ல அனுபவத்தைத் தராத வகையில் காட்சியமைப்பும் எடுக்கப்பட்ட விதமும் கச்சாத்தன்மை கொண்டிருக்கின்றன. காட்சிகளில் சோகம் அளவுக்கதிகமாக இருப்பது பார்வையாளர்களை அவஸ்தைக்குள்ளாக்குகிறது.
நம்பிக்கை தரும் காட்சிகள் மிகக் குறைவாக உள்ளன. படம் ஒரே தொனியில் நகருகிறது. இத்தகைய குறைகளை மீறிக் கவனிக்க வைக்கிறது அழுத்தமான கதை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT