Last Updated : 31 Mar, 2017 10:43 AM

 

Published : 31 Mar 2017 10:43 AM
Last Updated : 31 Mar 2017 10:43 AM

இயக்குநரின் குரல்: ‘ஈட்டி’ மீண்டும் பாயும்! - இயக்குநர் ரவி அரசு பேட்டி

“ஈட்டி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துவிட்டு ஏன், இவ்வளவு நிதானம்? என்று நண்பர்கள் கேட்டனர். ஒரு திரைக்கதையை பல முன்னணிக் கதாநாயர்களுக்கு ஏற்ப எழுதினேன். அதுதான் இந்த ‘ஐங்கரன்’. விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஆகிய மூவருக்கும் ஏற்ற விதத்தில் ஒரு திரைக்கதை; ஜெயம்ரவி, விஷால், கார்த்தி, தனுஷ் ஆகிய நால்வருக்கும் பொருந்தும்விதமாக ஒரு பிரதி; விஜய் சாருக்கு ஒரு பிரதி; ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு பிரதி என்றும் மொத்தம் நான்கு பிரதிகளை எழுதியிருந்தேன். நான்கு பிரதிகள் என்றாலும் இது முழுநீள ஆக்‌ஷன் கதை என்பது பொதுவான அம்சம்”– என்று தன் அலுவலக அலமாரியைத் திறந்து திரைக்கதை பிரதிகள் மொத்தத்தையும் எடுத்து மேஜையின் மீது அடுக்கி வைத்தபடியே பேசத் தொடங்கினார் ரவிஅரசு.

இந்தக் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

அவர் இதற்குமுன் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் வேறு களத்தில் கதை பயணிக்கும். அது அவருக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மெக்கானிக்கல் இன்ஜினியர் கதாபாத்திரம். “இந்தக் கதை எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது” என்று ஜி.வி.பிரகாஷ் கதையைப் படித்த பின் கூறினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

‘ஐங்கரன்’ கூட்டணி எப்படி உருவானது?

காமன் மேன் பிக்சர்ஸ் கணேஷ் என் நண்பர்தான். இருவரும் இணைந்து ஒரு படத்தை எடுக்கலாம் என்று திட்டமிட்டோம். ஜி.வி.பிரகாஷ் எனக்கு ஏற்கெனவே அறிமுகமுள்ளவர் என்பதால் இந்தக் கூட்டணி எளிதாகச் சாத்தியமானது. முதல் கட்டப் படப்பிடிப்பில் நாற்பது சதவீத காட்சிகளைப் படமாக்கி முடித்துவிட்டோம். ‘ஈட்டி’ படத்தில் பணிபுரிந்த ஒட்டுமொத்தக் குழுவினரும் என்னுடன் இணைந்து பணியாற்றுவதால் வேலை விரைவாக நடக்கிறது.

என்ன கதை?

கழுத்தை ஒட்டி இருக்கும் சட்டையின் காலர் பொத்தானைப் போட்டுக்கொண்டு நின்றால் விளையாட்டாக, ‘அவன் லூஸூப் பையன்’ என்று சொல்வார்கள். அதே சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை போடாமல் திறந்துவிட்டால் ரவுடி என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட இந்த இரண்டு நிலையிலும் இருப்பவன்தான் படத்தின் நாயகன். எல்லா விஷயங்களுக்கு உள்ளேயும் ஒரு அறிவியல் இருக்கும். அதை இந்தப் படத்தில் தெளிவாகப் பிரதிபலிக்கிறேன். பொறியியல் துறை மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் படமாகவும் இது இருக்கும்.

ஈட்டியைப் போலவே இதுவும் கமர்ஷியல் படமா?

‘ஈட்டி’ யை ‘செமி கமர்ஷியல்’ படம் என்றுதான் சொல்ல வேண்டும். வசனம், மேக்கிங், படமாக்கல் என்று ஒரு இயக்குநரின் படமாக அது இருந்ததால் கிடைத்த பாராட்டுகள் என்னைத் திக்குமுக்காட வைத்தன. அந்தப் பாராட்டுகள் உண்மையானவை என்பதை உணர்ந்துகொண்டதால் முழு கமர்ஷியல் படம் எடுத்தாலும் சொல்ல வந்த கதையை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தே அடுத்த கதைக்கு நேரமெடுத்துத் திரைக்கதை எழுதினேன். உலகத்திலுள்ள எல்லா அரசியலையும் பேசுவோம்.

ஆனால் உள்ளூர் அரசியல் பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் ஒரு பிரச்சினை எரிந்துகொண்டிருக்கிறது. அவை அனைத்துமே தலைபோகிற பிரச்சினைகள். ஆனால் தெருவைத் தாண்டி நம் பார்வை படர்வதில்லை. சமூக அக்கறையும் தெறிக்கும் இதுபோன்ற பிரச்சினைகளை செமி கமர்ஷியல் வகைப் படங்களாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் திட்டம். அதில் மசாலா இல்லாமல் பார்த்துக்கொள்வேன். ஏனென்றால் மசாலா இல்லாமலே மக்களைத் திரையரங்கிற்கு அழைக்க முடியும். கதையும் திரைக்கதையும் அதைச் செய்யும். இந்த இரண்டையும் நட்சத்திரங்கள் தங்கள் தோளில் சுமந்துவருவார்கள்.

விஜய்சேதுபதியோடு இணையப்போவதாகச் செய்திகள் வெளியானதே?

விஜய்சேதுபதி என் நண்பர். அவரிடம் நான்கு திரைக்கதைகளுக்கான ஒருவரிக் கதைகளைச் சொல்லியிருக்கிறேன். அவரும் தற்போது பிஸியாக இருக்கிறார். நானும் ‘ஐங்கரன்’வேலைகளில் தீவிரமாக இருக்கிறேன். விரைவில் நாங்கள் இருவரும் இணைவோம். அடுத்தடுத்து விஜய், அஜித் மாதிரி மாஸ் ஹீரோக்களை நோக்கியும் என் பயணம் நகரும்.

‘ஈட்டி 2’ எடுக்கும் திட்டம் இருக்கிறதா?

ரத்தம் உறைவதை மையமாக வைத்து இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை. பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்கும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் முதல் படமான ‘ஈட்டி’யில் அதைத் தொட்டேன். அதுவும் என் திரைக்கதையின் தேவைக்கு என்ன வேண்டுமோ அதுவரைக்கும்தான் ‘த்ரோம்பாஷ்தினியா’ என்ற நோய்பற்றித் தொட்டிருப்பேன். அதை முழுக்க எடுக்க வேண்டும். அது ‘ஈட்டி’ இரண்டாம் பாகமாக இருக்கும். ஈட்டி மீண்டும் பாயும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x