Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM
மௌனப் பட வரலாற்றில் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘பேட்டில்ஷிப் பொட்டம்கின்’ ரசிகர்களின் நினைவுகளில் என்றும் நீந்திக்கொண்டிருக்கும் கடல் காவியம். உலகிற்கு மாண்டேஜ் எனும் புது வகைக் காட்சித் துளிகளை அறிமுகப்படுத்திய படம். அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து ‘மதர்’, ‘த பெஸ்ட் டீச்சர்’ உள்ளிட்ட நல்முத்துகள் வந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஹங்கேரியும், போலந்தும் புதிய திரைமொழியுடன் படங்களைத் தந்தாலும், ரஷ்ய அலை சினிமா சில பத்தாண்டுகளுக்கு ஓய்ந்துவிட்டது. கடலே கண்காணாத தூரத்திற்குப் போய்விட்டதோ என்ற பிரமை ஏற்பட்டது. உண்மையில் போர் பற்றிய படங்கள் குறைந்தன. இந்நிலையில் வியக்கவைக்கும் அழகியலோடு ‘வெய்ட்டிங் பார் தி ஸீ’ வந்துள்ளது. இதன் பாடுபொருளை இரண்டே வரியில் சொல்லிவிடலாம். எல்லாவற்றையும் இழந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்று நம்பும் இளைஞனின் கதை.
தனது மனைவியையும், சிறு கப்பல் போன்ற மீன்பிடிப் படகின் பல சிப்பந்திகளையும் கடலுக்கு வாரிக் கொடுத்துவிட்டு ராட்சத அலைகளிலிருந்து தூக்கி எறியப்படும் கேப்டன் காரத், தப்பி உயிர் பிழைக்கிறான். எங்கோ தூர தேசத்திலிருந்து விட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கடலோரக் கிராமத்திற்கு மீண்டும் வருகிறான்.
பலபேரின் மரணத்துக்குச் சாட்சியாக இருந்த அவனை துரதிருஷ்டத்தின் குறியீடாகவே மக்கள் பார்க்கிறார்கள். எல்லா சுகங்களையும் இழந்த வனாயிற்றே என்று அரவணைத்து வருடிக் கொடுக்காமல் அடித்து விரட்டுகின்றனர். அவன் மறுபடியும் மீன்பிடித் துறைமுகத்துக்கு வருகிறான். அங்கும் இயற்கையின் கோர தாண்டவம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி அப்பகுதியில் இருந்த கடலையே காணாமல் ஆக்கியிருப்பதைப் பார்க்கிறான்.
காரத், வெகு தூரத்தில் ஒதுங்கியுள்ள தன் மீன்பிடிப் படகைக் கண்டுபிடித்து அதைச் செப்பனிடத் தொடங்குகிறான். அவனை இம்சிக்கும் மனைவியின் தங்கை அவனிடம் தன் காதலைத் தெரிவிக்கிறாள். காதலையும் அங்கீகரித்துவிடாமல், தன்னிடம் எதையோ சொல்லவரும் நண்பனையும் தவிர்த்துக் கருமமே கண்ணாயிருக்கிறான். இது மட்டுமின்று கடல் உள்வாங்கிய திசையை நோக்கிச் செப்பனிட்ட படகைக் கயிறுகளைக் கட்டி இழுத்துச் செல்கிறான்.
திஜிகிஸ்தான் இயக்குநர் குடொய்ஜனசரோவ் மாபெரும் லட்சியப் படைப்பாகவே ரஷ்ய மொழியில் இதை உருவாக்கியுள்ளார். சோக காவியமோ என பார்வையாளர்கள் வறண்டு தவிக்க, கஜகஸ்தான் புல்வெளிகளும் வெண்மணல் பாலைவெளியும் பரந்தகன்ற பளிங்கு மலைகளும் தேவதைக் கதைகளில் வருவது போன்ற கிராம மக்களின் வாழ்வியலும் ஒருதலைக் காதலும், மந்திரவாதிகளின் பாதாள அறை யாகங்களும் பழங்கால ரயிலும் படத்தைப் பேரழகுக் காவியமாக மாற்றிவிடுகின்றன.
அவனது மீன்பிடிப் படகை இழுத்துச் செல்ல சரக்கு டிரக் வண்டிகள் உதவிக்கு வருகின்றன. சோம்பலான ஒட்டகங்கள் இந்தப் பணிக்கு அழைக்கப்பட, அவை இழுக்க முடியாமல் ஆட்டங்காட்டுவது உச்சபட்ச நகைச்சுவை. கேப்டனது காத்திருப்புக்கு முடிவேயில்லையா என்று இதயம் கனக்கும் இடத்தில் படம் வேறு பல அர்த்தங்களை முன்வைக்கிறது.
ஒரு அதிகாலை மழை நாளில் மின்னல் அடிக்கிறது. கடல் பழையபடி வந்து தளும்புகிறது. அதன் சத்தத்தில் அவன் விழித்தெழுகிறான். மழைத் தூறல்களுக்கிடையே அவனது படகு இப்போது கடல் நீரில் மிதந்துகொண்டிருக்கிறது.
பழைய படகின் கேப்டன் காரத்தாக வருபவர் எகோர் பிரோவ். மனைவியின் தங்கையாக அனஸ்தசியா மிகுல்சினா. சிறந்த நண்பனாக டெட்லோவ் பக். பாலைவன நிலவியல் காட்சிகளின் எழிலைத் தன் கேமிராவில் தேக்கித்தந்த செல்லோஸ் அனைவரும் நம்மையும் கஜகஸ்தான் குடிமக்களாகவே உணரவைத்துவிட்டார்கள்.
சிறந்த பல திரைப் படங்களை இயக்கிய பக்டியர் குடொய்ஜ்சரைவ் இப்படத்தின் இயக்குனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT