Published : 10 Feb 2017 10:12 AM
Last Updated : 10 Feb 2017 10:12 AM
“அரசியல் பின்னணியில் நடக்கும் ஒரு பழிவாங்கல் கதை இது. மக்களின் பார்வையில் அரசியல் ஒரு சாக்கடை, அங்கு ரவுடிகள்தான் அதிகம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அரசியல் தலைவருக்கான தகுதி என்பது முழுக்க வேறு என்பதை அரசியலை விரும்பி ஏற்றுக்கொண்டு வருபவர்களின் பின்னணியிலிருந்து இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். தலைவனாவது எளிதான வேலை கிடையாது. எதிரிகள், துரோகிகள், கூடவே இருப்பவர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பலவற்றை கடந்துதான் தலைவனாக முடியும் என்பதுதான் இந்தப் படத்தின் மையமான விஷயம்” என்று பேச ஆரம்பித்தார் ‘எமன்’ படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர்.
அரசியல் பின்னணியில் பல படங்கள் வந்துள்ளன. இதில் என்ன புதுமை?
ஒவ்வொரு காட்சியிலும் வலுவான உள்ளடக்கம் இருக்கும். விஜய் ஆண்டனி, தியாகராஜன், மியா ஜார்ஜ், தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் என நால்வருமே இக்கதையைக் கேட்டவுடன் இதை எப்படி எழுதினீர்கள் என்றுதான் கேட்டார்கள். தமிழில் இப்படியொரு கதை வந்ததில்லை என்றுகூட சொல்லலாம். மொத்தம் 14 கதாபாத்திரங்கள். படம் முடிந்தவுடன் 14 கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்.
‘நான்’ படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய் ஆன்டனியுடன் இணைந்துள்ளீர்கள். அவருடைய வளர்ச்சியைப் பற்றி...
‘நான்' சமயத்தில் பின்னணி இசை, பாடல்கள் உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சண்டை எல்லாம் போட்டுள்ளோம். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் அது ஆரோக்கியமான சண்டையாக எங்களுக்குள் இருக்கும். தற்போது ‘எமன்' படத்திலும் சண்டை இருந்தது. இப்போதும் படம் நன்றாக வர வேண்டுமே என்பதற்காகத்தான். அவர் நடிகராக நிறைய முன்னேறியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் அந்தப் பரிமாணத்தை என்னால் உணர முடிந்தது. இப்படத்தில் நான் அவரிடம் ரொம்பவும் எளிதாக வேலை வாங்கினேன்.
அடிப்படையில் நீங்கள் ஒளிப்பதிவாளர். ஆனால், வெளிப்படங்களுக்கு ஏன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிவதில்லை?
தமிழ்த் திரையுலகில் தொழில் நுட்ப ரீதியில் பலம் பொருந்திய இயக்குநர்கள் மிகவும் குறைவு என நினைக்கிறேன். ஒளிப்பதிவாளர் பணி அப்படியில்லை, நீங்கள் நிலைத்திருக்க வேண்டும் என்றால் தொழில்நுட்ப ரீதியில் உங்களை அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். தயாரிப்பாளரையும் நாயகனையும் சம்மதிக்க வைத்துவிட்டால் இயக்குநராகிவிடலாம். ஆனால் அவ்வாறு ஒளிப்பதிவாளராக முடியாது.
‘ஆனந்த தாண்டவம்' படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன். அது சரியாகப் போகவில்லை. அதற்குப் பிறகு இயக்குநராகலாம் என்று கதை எழுதினேன். அது குறித்துச் செய்திகள் வெளிவந்தவுடன், அதுவரை ஒளிப்பதிவாளர் பணிக்காக பேசிவந்தவர்கள் யாருமே என்னிடம் பேசவில்லை. ‘அவன் இயக்குநராகப் போகிறான், நமது இயக்கத்தில் தலையிடுவான்’ என்றெல்லாம் பலரும் பேசியுள்ளார்கள். அப்போதுதான், இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்தேன்.
ஒளிப்பதிவைவிட ரொம்பவும் வேலை வைப்பது இயக்குநர் பணி. யாரிடமிருந்து கற்றீர்கள்?
அனைத்துமே ஜீவா சாரிடமிருந்துதான். ‘12 பி' சமயத்தில் ஜீவா சார் அலுவலகத்தில் தங்கினேன். அப்படத்தின் கதை விவாதத்தில் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு அவருடைய படங்களின் கதை விவாதத்தில் தொடர்ச்சியாகக் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அப்போதிலிருந்தே அனைத்தையும் கவனித்துக் கற்றுக்கொண்டேன். இயக்கம், ஒளிப்பதிவு இரண்டையும் ஒருவரே கையாள்வது மிகக் கடினம். ஆனால், அதை ஜீவா சாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எப்படிக் கற்றுக்கொண்டேனோ அப்படித்தான் பணியாற்ற முடியும். ஒளிப்பதிவின்போதே என்னால் டேக் ஒ.கேவா என்று சரியாகக் கணிக்க முடிகிறது.
உங்களுடைய வளர்ச்சியைப் பார்க்க ஜீவா இல்லாததை எப்படி உணர்கிறீர்கள்?
வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா சாரின் இழப்பைப் போன்று ஒரு இழப்பைச் சந்திக்கவில்லை. அவர் இறக்கும்போது, நான் ஒளிப்பதிவாளராகக்கூட ஆகவில்லை. அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணம் தொடங்கியது. நிறைய இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் தொலைபேசியில் என்னை அழைத்து “ஜீவா சாரின் ஒளிப்பதிவு போலவே இருக்கிறது. அவருடைய உதவியாளர் என்பதை நிரூபித்துவிட்டாய்” எனப் பாராட்டியபோதெல்லாம் கலங்கி அழுதிருக்கிறேன்.
ஆனால், நான் பணிபுரிந்து ஒரு ஃப்ரேம்கூட ஜீவா சார் பார்த்ததில்லை. “ஷங்கர் என்ற உதவியாளர் நல்ல வருவார்” என்று அவர் இறுதியாக அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் தீர்க்கதரிசி. அவர் நினைவாகவே ஜீவா சங்கர் எனப் பெயரை மாற்றிக்கொண்டேன். அவர் இறந்து 10 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று வரைக்கும் அவர் என்கூட இருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். அவரது ஆன்மா என்னை கவனித்துக்கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT