Last Updated : 30 Jun, 2017 10:06 AM

 

Published : 30 Jun 2017 10:06 AM
Last Updated : 30 Jun 2017 10:06 AM

சினிமாலஜி 10 - எச்சரிக்கை! இது படமல்ல...

சினிமாலஜி வகுப்பறையில் பேரமைதி. உறவை இழந்த பெருந்துயரத்தில் இருந்து மீளமுடியாத துக்கத்தை ஒத்த துன்பியல் பார்வையைப் பக்குவமாக மறைக்க முயன்று தோற்றார் சலீம் சார்.

“இந்த மாதிரி ஒரு வாய்ப்பு எப்பவாச்சும்தான் கிடைக்கும். அது இப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கு. உங்க எல்லாருக்கும் தனித்தனியா டிக்கெட் போட்டாச்சு. வந்து வாங்கிக்கலாம். சினிமாவைப் பார்த்து சினிமாவைக் கத்துக்கிறது ரொம்ப முக்கியம். அப்படி ஒரு படத்தை இப்பப் பார்க்கப் போறீங்க. நேத்தே இந்தப் படத்தைப் பார்த்துட்டேன். என்னால இயல்பா இருக்க முடியல. இந்த டிக்கெட்டுகளை உங்ககிட்ட கொடுத்துட்டு வீட்டுக்குப் போயிடலாம்னுதான் இப்ப கிளாஸுக்கே வந்தேன். இன்னிக்குப் படம் பாருங்க. இரவு முழுக்க இந்தப் படத்தைப் பத்தி எழுதுங்க. நாளைக்குக் காலைல எனக்கு நீங்க ரிப்போர்ட் சப்மிட் பண்ணனும்.”

விம்மி விம்மி பேசியவர் முன் சென்ற பார்த்தா, ‘கட்டளையே சாசனம்’ என்று தன் டிக்கெட்டை வாங்கிப் பார்த்து திடுக்கிட்டான். அந்தப் படத்தின் பெயர்: ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

மறுநாள். வகுப்பறையில் மயான அமைதி. ஒவ்வொருவரின் திரைப் பார்வைக் கட்டுரைகளையும் நிதானம் தவறாது வாசித்துக்கொண்டிருந்தார் சலீம் சார். அந்தத் திரை அனுபவப் பார்வைகளின் துளிகள் இதோ:

ப்ரேம்:

‘துபாய் - விவேகானந்தர் தெருவுக்குள் தொடங்கும் கதைக்களத்தை அறிமுகப்படுத்திய விதம் ஆகச் சிறப்பு. இல்பொருள் உவமை அணியைத் திரைமொழியில் புகுத்தும் விதமாக ‘டான்’ என்பவரைக் காட்டாமல், அந்த டான் குறித்த பிம்பத்தைப் பார்வையாளர்களிடம் கட்டமைத்ததை ‘காட்ஃபாதர்’ வகையறா படக்குழுக்கள் பார்த்துத் திருந்தத்தக்கது. பெண் அதிகாரியின் தோற்றமும் பாவனையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஹாலிவுட்காரர்கள் சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்து கஸ்தூரி கதாபாத்திரத்தைக் காண வேண்டும்...’

கவிதா:

‘... சமகால சமுதாயத்தில் பெண்களை பாலியல் வக்கிரப் பார்வையுடன் அணுகுவதையும், இழிவுபடுத்துவதையும் அழுத்தம் திருத்தமாகக் காட்சிக்குக் காட்சி காட்டியிருப்பது, ‘ட்ரிபிள் ஏ’ஒரு சமூக அக்கறை மிகுந்த படைப்பு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, புரொட்டகனிஸ்ட்டாக வலம் வரும் சிம்புவை வைத்தே பெண்களைக் கீழ்த்தரமாக கலாய்த்திருப்பது துணிகரச் செயல். தன் இமேஜுக்காகப் பெண்களை மதிப்பது போல் திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் பாசாங்கு இல்லாத நேர்மையாளராகவே சிம்புவைக் கருத வேண்டியுள்ளது..’

மூர்த்தி:

‘படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை குறியீடுகளால் கோட்பாடுகள் பலவற்றையும் முன்வைக்கிறது ‘அஅஅ’. குறிப்பாக, அஸ்வின் தாத்தா தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் போட்டுள்ள டி-ஷர்ட்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ‘டபுள் ட்ரபிள்’ என்று பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணியும்போது தற்கொலை எண்ணம் உள்ள காதலர் ஒருவரை மீட்கிறார். அங்கே காதல் குறித்த உளவியல் சிந்தனைகளை உதிர்க்கிறார். ‘சூப்பர்மேன்’ எனப் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்த இடத்தில் ஓர் ஆண் மகன் என்பவர் யார் என்பது நிறுவப்படுகிறது. இப்படிப் படம் முழுக்கக் குறியீடுகள் மூலம் பார்வையாளர்களுக்குத் தெளிவு பிறக்க வழிவகுக்கப்பட்டுள்ளது...’

ப்ரியா:

‘...யாரோ கேஸ்பர் நோவாவாம். 2015-ல் ‘லவ்’ என்ற படத்தை எடுத்துத் தெறிக்கவிட்டாராம். அவர் போன்றவர்கள் கவனிக்க வேண்டிய உன்னதப் படைப்பாளி ஆதிக் ரவிச்சந்திரன். தலை நரைத்த காலத்தில் எது காதல்? எது காமம் என நம் சமூகத்தின் மீது கேள்விகளால் பொட்டில் அறைவதோடு நின்றுவிடவில்லை; அந்தக் கேள்விக்கான விளக்கமாகவே அந்த ‘ஓர் இரவு போதும்’ என்ற பாடல் மூலம் உணர்வுகளின் உன்னதம் போற்றப்படுகிறது...’

மேனகா:

‘...ஒரு திரைக்கதையில் லாஜிக்கை எப்படித் துருத்தாமல் பார்வையாளர்களிடம் கடத்துவது என்பதை இப்படம் மூலம் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அஸ்வின் தாத்தாவுக்குத் துருத்தாமல் மேக்கப் போட்ட ரெஃபரன்ஸுக்காக ஹாலிவுட்காரர்களை கோலிவுட் நிச்சயம் வரவழைக்கும். ‘இந்த கேரக்டர் 55 வயது தாத்தா தானா?' என்று பார்வையாளர்கள் மனதில் சந்தேகம் எழும்போதெல்லாம், வேறொரு கேரக்டரை வைத்து ‘அஸ்வின் தாத்தா’என அழைக்க வைத்த உத்தியே படைப்பாற்றலுக்குச் சான்று. இதை ஒவ்வொரு காட்சியிலும் செய்துகாட்டியிருப்பது உலகத் தரத்தை இடக்கையால் ஒதுக்கிவைப்பதற்குச் சமமானது...’

ஜிப்ஸி:

‘ரஜினியும் கமலும் சேர்ந்த கலவைதான் சிம்பு என்பதை உலகுக்குச் சொல்வதற்குக் கையாண்ட விதம் அருமை. தேவாவே தன் உடல்நலனைச் சொல்வதுபோல் கமலும் ரஜினியும் கலந்தவர்தான் சிம்பு என்று சிம்புவே சொல்வது தன்னடக்கத்தின் உச்சம். அதை நிரூபிக்கும் விதமாக, ஒவ்வொரு மிரட்டல் காட்சிகளிலும் தலையை ஸ்டைலாகக் கோதி ‘சிறப்பு’ உரைக்கிறார். இது ரஜினி என்பது மெய்ப்பிக்கப்படுகிறது. உலகக் காவியங்கள் இதுவரை கண்டிராத ட்விஸ்ட் ஒன்றை தமன்னா கேரக்டர் அவிழ்த்துவிடும் காட்சி. அஸ்வின் தாத்தா மீதான காதல் உண்மையா பொய்யா எனத் தெரிய வரும் அந்தத் திருப்பத்தில், சிம்புவைப் போலவே பார்வையாளர்களும் எப்படி உணர்வுகளை வெளிப்படுத்துவது எனத் தெரியாமல் திக்குமுக்காடுகிறோம். இந்த இடத்தில் அபூர்வ சகோதரர்கள் அப்புவை நம் கண்முன்னே காட்டி, தான் கமல்ஹாசனுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை அற்புதமாக நிரூபிக்கிறார் சிம்பு...’

ரகு:

‘...ஒரு படைப்பு என்பது சமகாலத்தில் இளம் சமூகத்தையும் மூத்த சமூகத்தையும் சீரழிக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டும். இதை மிகக் கச்சிதமாகச் செய்திருக்கிறது இப்படம். ஆம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ஸ்மார்ட் போன், இணைய ஊடக சிலிர்ப்புச் சமாச்சாரங்களின் தீவிரத்தன்மையைப் படம் நெடுகிலும் இழையோடவிட்டது படக்குழுவின் பக்குவத்தின் உச்சம்...’

கீர்த்தி:

‘...இந்திய சினிமாவுக்கு மிக முக்கிய பலம் சேர்க்கும் அம்சம் என்றால் அது வசனம்தான். சீரிய வசனங்களை உள்ளடக்கிய இப்படம் நம் சென்சார் துறையைப் பகடி செய்திருப்பதை மிகச் சிலர்தான் கவனித்திருக்கக் கூடும். சென்சார் கத்தரி நறுக்குவதற்கு முன்பே தனக்குத் தானே பீப் ஒலி இட்டுக்கொண்டு பல காட்சிகளில் வசனங்களை மறைத்ததை மறுமுறை படம் பார்க்கும்போது கவனிக்க வாய்ப்புண்டு...’

பார்த்தா:

‘..... ....... ....... ......’

பார்த்தாவின் பார்வைக் கட்டுரை முழுவதுமே இங்கே சென்சார் செய்யப்படுகிறது. அதேவேளையில் அவரது ஃபேஸ்புக் பதிவு இங்கே:

‘அது ஒரு காம்ப்ளக்ஸ். ரம்ஜான் தினத்தில் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்காக ஸ்க்ரீன் 5-க்குள் நுழைந்தேன். அதிர்ச்சி. தியேட்டருக்குள் நான் ஒருவன் மட்டுமே. திரையில் ஒலித்த தேசிய கீதத்துக்கு நான் எழுந்து நின்று தேசபக்தியை வெளிப்படுத்தியதைக்கூட யாரும் பார்க்கவில்லை. படம் தொடங்கி 10 நிமிடம் கழித்து ஒரு காதல் ஜோடி என நம்பப்படும் இருவர் வந்தனர். பின்வரிசையில் தங்களுக்காக சீட்டில் அமர்ந்தார்கள். இடைவேளை. அவர்கள் வெளியே சென்றபோது ஒரு கோரிக்கை வைத்தேன்: ‘திரும்ப வந்துடுங்க. தனியா மீதிப் படத்தைப் பார்க்க பயமா இருக்கு’. அந்தப் பேரன்புக்காரர்கள் மீண்டும் வந்துவிட்டது பெருமகிழ்ச்சி. ஓர் உயிருக்கு உறுதுணையாக இருக்க சில உயிர்கள் இந்த உலகில் உள்ளன என்பதை உணர்ந்த தருணம் அது. வாழ்க மனிதம்.’

கடைசியாக ஒரே ஒரு குறிப்பு. சினிமாலஜி மாணவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக தங்கள் கட்டுரையின் கடைசிப் பகுதியில் குறிப்பிட்ட வரிகள் இவை:

‘அஅஅ’... சினிமா மாணவர்களுக்கே உரித்தான குறிஞ்சிப் பூ. ஒரு திரைப் படைப்பாளி ஒரு சினிமாவை எப்படி எடுக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வதற்குத் தேவையான அரிய பாடங்களைச் சொல்லித் தரும் படம் இது.

தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x