Published : 10 Mar 2017 08:22 PM
Last Updated : 10 Mar 2017 08:22 PM

திரை வெளிச்சம்: ஒலிக்கிறது அபாயமணி!

சமகால சமூகத்தின் அசலான முகத்தையும் கடந்த காலத்தில் புதைந்துபோன வரலாற்றின் பக்கங்களையும் ஆதாரங்களுடன் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் ஆவணப்படங்கள். கடும் உழைப்பில் தயாராகும் இவை, அடுத்துவரும் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்லப்படும் வரலாற்றின் சாட்சியங்கள். நிகழ்காலச் சமூகத்தின் மனசாட்சியில் மாற்றங்களை உருவாக்கும் நேரடி சாட்சியங்கள் நிறைந்த திரை வடிவம். விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத ஆவணப்படங்கள் இன்று வெளிநாடுகளில் திரையரங்குகளில் வெளியாகின்றன.

பார்வையாளர்களின் வரவேற்பைப் பெறுவதிலும் அங்கே திரைப்படங்களுக்குச் சற்றும் குறைந்தவை அல்ல. ஆனால், இங்கே தலைகீழ் நிலை. திரைப்படங்களுக்குக் கிடைக்கும் முதலீடும் ஆதரவும் கவனமும் மாற்றுத் திரைப்படங்களான ஆவணப்படங்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால், தற்போது தமிழ் ஆவணப்படத்துறை உயிர்ப்புடன் மீண்டெழத் தொடங்கியிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலை யில் முதலீடு செய்பவர்களும் ஊடகங்களும் திரையரங்குகளும் ஆவணப்படங்களை ஏன் தள்ளி வைக்க வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியுடன் தேசிய அளவிலான ஒருநாள் ஆய்வரங்கம் சென்னையில் நடக்க இருக்கிறது.

‘ஆவணப்படங்கள் – அவசரம் அவசியம் - அபாய மணி ஒலிக்கும் தேசிய ஆய்வரங்கம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வரங்கை சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஒலிவியம் படைப்பகம்’என்ற தன்னார்வ அமைப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை, தி இந்து தமிழ் நாளிதழ் ஆகியவற்றுடன் இணைந்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகக் கலை அரங்கில் இம்மாதம் 14-ம் தேதி காலை 9 மணிமுதல் நடத்துகிறது.

ஒலிவியம் படைப்பகத்தைப் பேராசிரியர் பர்வின் சுல்தானா, டாக்டர் முருகப்பன், கலைச்செல்வன், பு. சாரோன் ஆகிய நான்கு ஆவணப்படச் செயற்பாட்டாளர்கள் இணைந்து தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் பு. சாரோன் தனது முதல் ஆவணப்படத்துக்காகக் கவனிக்கப்பட்டுவருபவர். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றை ‘பாட்டாளி படைப்பாளியான வரலாறு’ என்ற தலைப்பில் பல ஆண்டுகள் உழைத்து ஆவணப்படமாக உருவாக்கியிருந்தார். எனவே நடைபெற இருக்கும் ஆவணப்பட ஆய்வரங்கம் குறித்து அவரிடம் உரையாடினோம்…

இந்த ஆய்வரங்கத்துக்கான களம் எப்படி உருவானது?

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப்படம் எனக்கும் எனது சகாக்களுக்கும் மிகப்பெரிய பாடமாக அமைந்துவிட்டது. 2005-ல் தொடங்கி 8 ஆண்டுகள் கடும் தேடலுக்கும் உழைப்புக்கும் பிறகு அந்த ஆவணப்படத்தை உருவாக்கி 2014-ல் வெளியிட்டோம். இப்போது திரும்பிப் பார்த்தால் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. நான் குறிப்பிடுவது பொருள் சார்ந்த இழப்பை அல்ல; அது ஆவணப்பட இயக்குநர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதுதான்.

ஆனால், உண்மையான இழப்பு என்பது அந்த ஆவணப்படத்தில் பேசிய 22-க்கும் அதிகமான பட்டுக்கோட்டையாரின் சமகாலத்தவர்களான நேரடி சாட்சியங்கள், குறிப்பாகப் பட்டுக்கோட்டையாரின் ஆயுட்காலம் வரை அவருடன் நிழலாய்த் திரிந்த அவரது ஆருயிர் அறை நண்பர் ஓவியர் கே.என். ராமச்சந்திரன் உட்பட யாரும் உயிருடன் இல்லை. உண்மையில் இயற்கையாக நிகழ்ந்த இந்த இழப்புகளைக் கண்டு பதைபதைத்துப்போனோம்.

அடுத்து பட்டுக்கோட்டையார் தொடர்பான இடங்களில், அவர் சென்னையில் மாதம் பத்து ரூபாய் வாடகைக்கு வசித்துவந்த வீடு, மதுரை சங்கம் திரையரங்கம் உட்படப் பலவும் இடிக்கப்பட்டு அவை இன்று வேறு ஒன்றாக மாறிவிட்டன. ஆனால், ஆவணப்படத்தில் அவை அவையாகவே இருக்கின்றன. இந்தக் காலமாற்றத்தையும் இழப்புகளையும் பார்த்துத்தான் ஆவணப்படங்களை காலத்தே உருவாக்க வேண்டும், அப்படிச் செய்யாவிட்டால் உண்மையான பதிவுகளையும் சாட்சியங்களையும் கொண்ட ஆவணப்படங்களை உருவாக்க முடியாது என்பதை அனுபவப் பாடமாகப் படித்துக்கொண்டோம். அதை வலியுறுத்த ஆய்வரங்கம் அவசியம் என்று முடிவுசெய்தோம்.

தமிழ் சினிமாவுக்கு இது நூற்றாண்டு. ஆனால் தமிழ் சினிமாவுக்கென்று இங்கு ஆவணப்பட முயற்சிகள் எதுவும் இல்லையே?

பல ஆட்சியாளர்களைத் தந்த தமிழ் சினிமாவுக்கே இந்த நிலை. தமிழ் சினிமாவின் பொற்காலமாகப் பார்க்கப்படும் 60களின் நடிகர்களில் இன்று வெகுசிலர் மட்டும் உயிருடன் இருக்கிறார்கள். எம்.ஆர். ராதா ஆவணப்படத்துக்காக எழுத்தாளர் கி.ராவைச் சந்தித்தபோது ‘நாடகத்தின் உரையாடல் மொழியாக அடித்தட்டு மக்களின் பாமரமொழியைக் கொண்டுவந்தது ராதாதான்’ என்பதை அவரது நாடகங்களை இளைஞாரக இருந்து பார்த்த சாட்சியமாக ஆதாரத்துடன் பேசினார்.

இந்தப் பார்வை எத்தனை முக்கியம். தமிழ் சினிமாவின் நடமாடும் ஆவணக்காப்பகம் என்று வருணிக்கப்பட்டவரும், தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளருமான பிலிம் நீயூஸ் ஆனந்தன் மறைந்துவிட்டார். அவர் வழியே ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய கடைசி வாய்ப்பும் அவரது கல்லறையோடு அடக்கமாகிவிட்டது. உயிருடன் இருக்கும் சமகாலத்தவர்களை இப்போது ஆவணப்படுத்தாவிட்டால் வேறு எப்போது முடியும் என்ற கேள்வி ஆவணப்பட அவசியத்தையும் அவசரத்தையும் எங்களுக்குச் சொல்லாமல் சொல்லியது.

இந்த அவசரமும் அவசியமும் தமிழ் சினிமா வரலாறு, தமிழ் சினிமா ஆளுமைகளை ஆவணப்படுத்துவதற்கு மட்டும்தானா?

நிச்சயமாக இல்லை; மரபு சார்ந்த விவசாயம் நம்மிடம் இல்லை; நமது விதைகளோ, உரங்களோ நம்மிடம் இல்லை, நமது பறவைகள் இல்லை, நமது கலைகள் இல்லை, நமது வளங்கள் இல்லை. இப்படிப் பல துறைகள் கடைசி நிலையில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. இதை நாம் இன்று காட்சி வழியாக ஆவணப்படுத்தாவிட்டால் அடுத்த தலைமுறைக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துச்செல்ல முடியாது. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பம் காட்சியாக்கும் வசதியை நமக்கு எளிதாக வழங்குகிறது. எனவே தேர்ந்துகொள்ளும் உள்ளடக்கத் துக்கான சமகால சாட்சிகளின் இருப்பும், இடங்களும் மிக விரைவாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வரங்கத் துக்கான களத்தைக் காலத்தின் தேவையோடு உருவாக்கியது.

ஆய்வரங்கில் விவாதமும் அமர்வுகளும் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன?

காலகட்டத்தின் அவசரம் கருதி, ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இருக்கும் போராட்டங்கள்; அதில் முதலீடு செய்பவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை எப்படிக் களைவது என்பதை ஆய்வரங்கில் முதன்மைப்படுத்த இருக்கிறோம். இதை தேசிய, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆவணப்படப் படைப்பாளிகளின் நேரடிப் பங்கேற்புடன் அவர்களது அனுபவங்களைப் பகிர்வதன் வழியாகத் தீர்வுகளைக் கண்டடைய இந்த ஆய்வரங்கம் வழியே முனைகிறோம்.

முழுநாள் நடைபெறும் ஆய்வரங் கில் மூன்று முக்கிய அமர்வுகளை உருவாக்கியிருக்கிறோம். ‘முதலீடும் பரவலாக்கமும்’ என்ற அமர்வின் கீழ் உலக அளவில் ஆவணப்படங்களுக்கான லாபம் தரும் களங்கள் பற்றியும், முதலீட்டை எப்படி திரட்டுவது என்பது பற்றியும் முன்மாதிரிகளைக்கொண்டு விவாதிக்க இருக்கிறோம். ‘ஆவணப்படங்களும் ஆவணங்களும்’ என்ற இரண்டாவது அமர்வில் ஆவணப்பட இயக்குநர்கள் தங்கள் படைப்புக்கான ஆதாரங்களைத் தேடிச்சென்று கண்டறிந்தாலும் அதைப் படமாக்கவும் தரவுகளைப் பிரதி எடுக்கவும் பெரும் சவாலைச் சந்திக்கிறார்கள்.

மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அவர்களுக்குப் பிரச்சினை இருப்பதில்லை. தமிழகம் இதற்கு நேர் எதிர். எனவே பத்திரிகையாளர்களுக்கும் ஊடகத்தினருக்கும் இருப்பதுபோன்று, ஆவணப்பட இயக்குநர்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடையாளச் சான்றைப் பெறுவதும் தரவுகளை ஆதாரங்களை அரசு, தனியார் அமைப்புகளிடமிருந்து எளிதாகத் திரட்டவும் வழிவகைகளை ஏற்படுத்துவதுபற்றியும் விவாதித்துத் தீர்வு காண இருக்கிறோம்.

‘உள்ளடக்கங்களும் வரையறைகளும்’ என்ற தலைப்பில் மூன்றாவது அமர்வு நடக்க இருக்கிறது. இதில் ஆவணப்படங்களின் வகைகள், ஆவணப்படத்தின் அதிகபட்ச நீளம், அதன் வீடியோ, ஆடியோ போன்ற தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றையும் எதையெல்லாம் ஆவணப்படங்களுக்கான உள்ளடக்கங்களாக நாம் உடனடியாகத் தேர்ந்தெடுக்கலாம் என்பது உட்படச் சர்வதேச வரையறைகளோடு ஒப்பிட்டும், விலகியும் இந்த அமர்வில் விவாதிக்க இருக்கிறோம்.

வேறு யாரெல்லாம் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்?

ஆவணப்படத்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்ட பல தேசிய, சர்வதேசிய படைப்பாளிகள் முக்கியப் பங்கேற்பாளர்களாக ஆய்வரங்கில் அங்கம் வகிக்கிறார்கள். தவிர ஆவணப்படம் மீது மதிப்பும் பிடிப்பும் கொண்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், ஆவணப்படத்தைக் கற்பித்துவரும் பேராசிரியர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களோடு

தமிழக அளவில் ஊடகக் கல்வி, காட்சித் தகவலியல், தமிழ் இலக்கியம் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் ஆவணப்பட ஆர்வலர்களும் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விழாவின் இறுதியில் தலைசிறந்த ஆவணக் காப்பாளருக்கான விருது ‘ஒலிவியம்’ விருதாக திருநின்றவூர் சந்தானகிருஷ்ணனுக்கு வழங்கப்பட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x