Published : 20 Jan 2017 11:42 AM
Last Updated : 20 Jan 2017 11:42 AM
எத்தனையோ சாதனையாளர்களைத் தமிழ் சினிமா சந்தித்துவிட்டது. ஆனால் இவர் விட்டுச் சென்றிருக்கும் சாதனைத் தடங்களை ‘பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று’ என அத்தனை சுலபமாகக் கடந்து சென்றுவிட முடியாது. இவர் சாதனைகள் அனைத்தும் அசாதாரணமானவை. ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி, திரைப் படைப்பாளியாக மாறியவர்.
காந்தியவாதி, தீவிர தேசபக்தர். சமூக மாற்றத்துக்கான போராட்ட ஆயுதமாகத் திரைப்படக் கலையைக் கையாண்டு ‘புரட்சி இயக்குநர்’ என்று போற்றப்பட்டவர். தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையைத் தோற்றுவித்த தள கர்த்தர்களில் முதன்மையானவர் எனப் பல விதங்களிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கிய முன்னோடியாக விளங்கினார். அவர்தான் ‘தமிழ் சினிமாவின் தந்தை’ எனப் புகழப்படும் கே.சுப்ரமணியம் (1904-1971). இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட கே.சுப்பிர மணியம் தஞ்சையின் மைந்தர்.
நிர்வாகப் பொறுப்பு
காவிரியின் கிளையாறுகள் பாய்ந்து வளங்கொழிக்கும் கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் சி.எஸ்.கிருஷ்ணசாமி - வெங்கலட்சுமி என்ற தம்பதிக்கு 1904-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மகனாகப் பிறந்தவர். சுப்பிரமணியத்தின் தந்தை கிருஷ்ணசாமி புகழ்பெற்ற வழக்கறிஞர். அப்பா வழியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மற்றொரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ‘ராவ்பகதூர்’ கே.பி.வெங்கடராம அய்யரின் பேத்தி மீனாட்சியை மணந்துகொண்டார்.
மவுனப் படங்களின் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ‘அசோசியேட்டட் பிலிம்ஸ்’ படநிறுவனம் நஷ்டத்தில் தள்ளாடிக்கொண்டிருந்தபோது அதை வாங்கி நடத்திவந்தார் வெங்கடராம ஐயர். திரைப்படத் துறையின் மீது ஈர்ப்பும் ஆர்வமும் கொண்டிருந்த சுப்பிரமணியத்திடம் அதன் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார். நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்ற நினைத்த சுப்பிரமணியம், அன்று இந்தி மவுனப்பட உலகைக் கலக்கிக்கொண்டிருந்த புதுக்கோட்டை தமிழரான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து அழைத்து வந்து அசோசியேட்டட் ஃபிலிம்ஸின் கம்பெனி இயக்குநராக அவரை ஒப்பந்தம் செய்து அவரைச் சென்னையில் பிடித்து வைத்தார்.
உதவி இயக்குநர்
அசோசியேட்டெட் பிலிம்ஸுக்காக ‘அநாதைப் பெண்', 'பேயும் பெண்ணும்', ‘உஷா சுந்தரி' ஆகிய மவுனப் படங்களை ராஜா சாண்டோ இயக்கியபோது படத் தயாரிப்பு நிர்வாகம் மட்டுமல்லாது அவரிடம் உதவி இயக்குநராகவும் இருந்து திரைப்படக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ச்சிபெற்றார். அதுமட்டுமல்ல; ராஜா சாண்டோ இயக்கிய ‘சக்தி கவுசல்யா’(1931), ‘தரண்ஹர்’(Pride of Hindustan-1931) ஆகிய இந்தி மவுனப் படங்களுக்கு சினேரியோ எழுதித் திரைக்கதைக் கலையிலும் திறன் பெற்றவராகத் தன்னை நிரூபித்தார்.
சாதனை படைத்த ‘பவளக்கொடி’
1930-களில் மேடையில் புகழ்பெற்ற பாடக நட்சத்திரமாக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘பவளக்கொடி’ நாடகத்தைச் செட்டிநாட்டின் இருபெரும் தனவந்தர்களான அழகப்பா செட்டியார், லட்சுமண செட்டியார் ஆகிய இருவரும் இணைந்து நடத்திவந்தனர். அந்த நாடகத்தைத் திரைப்படமாக்க விரும்பிய அவர்கள், அதைப் பார்க்க வரும்படி கே. சுப்பிரமணியத்தை அழைத்தனர். பல மாதங்கள் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்துவந்த ‘பவளக்கொடி’ நாடகத்தைப் பார்த்து வியந்த சுப்பிரமணியம், நாடகக் குழுவை முழுமையாகப் பயன்படுத்தி மதராஸில் ‘பவளக்கொடி’யை உருவாக்கினார். அர்ஜுனனாக நடித்த பாகவதருக்கு ஜோடியாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்திருந்த ‘பவளக்கொடி’யில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார். 1934-ல் வெளியான பவளக்கொடி மதராஸ் மாகாணம் முழுவதும் பல திரையரங்குகளில் சுமார் ஒன்பது மாதங்கள் ஓடி சாதனை படைத்தது.
நட்சத்திர கொலம்பஸ்
முதல் படமே சுப்பிரமணியத்தை மாபெரும் வெற்றி இயக்குநராக மாற்றியது. அதன் பிறகு ‘பக்த குசேலா’, ‘நவீன சாரங்கதா’ ஆகிய படங்களை கல்கத்தா சென்று படமாக்கித் திரும்பினார். 1936-ல் வெளியாகி வெற்றிபெற்ற அந்த இரு படங்களில் ‘பக்த குசேலா’வில் ஆளுமை கூடிய இயக்குநராக அதிரடியான புதுமை ஒன்றைப் புகுத்தினார். குசேலரின் மனைவி சுசீலாவாக 27 பிள்ளைகளின் தாயாக எஸ்.டி.சுப்புலட்சுமியை நடிக்க வைத்த சுப்பிரமணியம், கிருஷ்ண பெருமான் வேடத்திலும் அவரையே நடிக்க வைத்து ஒரு பெண் கலைஞர், முதன்முறையாக ஆண் கதாபாத்திரத்தில் நடித்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார். அவரது நம்பிக்கைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் தொடங்கிய சுப்பிரமணியத்தின் புரட்சிகரமான புதுமைகளும் சிந்தனைகளும் அவரது கடைச நாட்கள் வரை கம்பீரமாகத் தொடர்ந்தன.
எம்.கே.டி., எஸ்.டி.சுப்புலட்சுமி, பாபநாசம் சிவன், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, வி.என்.ஜானகி எனப் பல சூப்பர் நட்சத்திரங்களைத் திரைக்கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல தேடிக் கண்டறிந்து மக்களுக்குத் தந்துசென்ற நட்சத்திர கொலம்பஸ் என்று கே.சுப்பிரமணியத்தைப் பாராட்டினால் அது மிகையன்று.
புரட்சி இயக்குநர்
பின்னாளில் எஸ்.டி.சுப்புலட்சுமியைத் திருமணம் செய்துகொண்ட சுப்பிரமணியம், சென்னையில் ‘மெட்ராஸ் மோஷன் பிக்ஸர்ஸ் காம்பைன்ஸ்’ (MPPC) ஸ்டூடியோவை சகல வசதிகளுடன் சென்னையில் நிறுவினார். அதில் தனது தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷனின் தயாரிப்பாக ‘பாலயோகினி’(1937) என்ற மிக முக்கியமான சமூகப் படத்தைத் தயாரித்து இயக்கினார். குழந்தை கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு சமூகத்தில் நிலவிவந்த சாதிய வேறுபாடுகளைத் துணிச்சலாகச் சாடினார்.
அடுத்த ஆண்டே அவர் இயக்கி வெளியிட்ட ‘சேவாசதனம்’ படத்தில் இந்தியாவின் இசைக்குயில் எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பெண்ணடிமைத்தனத்திலிருந்து மீண்டெழும் புரட்சிகரமான கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்காகத் தனது சொந்த சமுதாய மக்களான பிராமணர்களிடமிருந்து கடும் வசவுகளையும் விமர்சனங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டார்.
அதன் பிறகு 1938-ல் அவரது இயக்கத்தில் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படம் வெளியான சில வாரங்களில் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டது. பெண்களை அடிமைகளாக நடத்திவந்த ஆணாதிக்கச் சமூகத்துக்குச் சவுக்கடி தரும் விதமாகவும் தேசிய விடுதலை இயக்கத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவும் இந்தப் படத்தின் கதாநாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி ஏற்று நடித்திருந்த சாவித்திரி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரம் அமைத்திருந்தது.
கதாநாயகி விடுதலை இயக்கத்தில் சேருவதுபோன்ற புரட்சிகரமான பாத்திரப் படைப்பே தடைக்குக் காரணமாக அமைந்தது. தடையை மீறி இலவசமாகத் திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் படத்தைக் காண மக்கள் குவிந்தனர். கே.சுப்பிரமணியத்தை ‘புரட்சி இயக்குநர்’ என கொண்டாடத் தொடங்கினர். சென்னை, கெயிட்டி திரையரங்கில் தடையை மீறி இந்தப் படத்தைப் பார்க்கத் துணிந்த ரசிகர்களை பிரிட்டிஷ் போலீஸ் தடியடி நடத்தித் துரத்தியடித்தது. அச்சம்பவம் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளில் ஒன்று எனக் குறிப்பிடுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள். கே.சுப்பிரமணியத்தின் வருகைக்குப் பின் தமிழ் சினிமாவின் முகமும் மெல்ல மாறத் தொடங்கியது.
திரைப்படத்துடன் நின்றுவிடாமல் பல ஆவணப்படங்களைத் தமிழ்த் திரைக்குத் தந்து சென்ற கே.சுப்பிரமணியம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அமையக் காரணமாக இருந்த தூண்களில் ஒருவர். அதற்கு நான்குமுறை தலைவராகவும் இருந்து வழிநடத்திய அவரது நூற்றாண்டு வந்தபோது அதை வர்த்தக சபையே கொண்டாட மறந்துபோன துயரமும் அரங்கேறியதைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT