Published : 19 Aug 2016 10:55 AM
Last Updated : 19 Aug 2016 10:55 AM

வேடிக்கை பார்ப்பவர்கள் மீதான கோபம்தான் ‘கடுகு’: விஜய் மில்டன் நேர்காணல்

பைபிளில் ஒரு வசனம் வரும், `ஒதுக்கப்பட்ட கல்லே தலைக் கல்லானது' என்று. வேண்டாம் என்று நாம் தூக்கிப் போட்ட ஒரு கல், ஒரு வீட்டுக்கு முதல் கல்லானது என்பதுதான் அர்த்தம். அந்த வாக்கியத்தை வைத்து ஒரு கதை பண்ண வேண்டும் என்று தோன்றியது. அதுதான் `கடுகு' உருவாகக் காரணம் என்று பேசத் தொடங்கினார் இயக்குநர் விஜய் மில்டன்.

அனைவருமே காமெடியனாகப் பார்க்கும் ராஜகுமாரனை எப்படி நாயகனாகத் தேர்வு செய்தீர்கள்?

ராஜகுமாரனுக்கு எந்த இமேஜும் கிடையாது. அதுதான் படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ். இந்தக் கதைக்கு அப்படி இமேஜ் உள்ள ஒருவரைத்தான் நாயகனாகத் தேடிவந்தேன். இந்தக் கதையில் யாருமே மதிக்காத ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்கள் பண்ணி மக்கள் மனதில் இடம்பிடிப்பான். அதற்கு ராஜகுமாரன் சரியாக இருந்தார். பார்ப்பதற்குச் சாதாரணமாக இருந்தாலும், மிகுந்த தன்னம்பிக்கை உடைய மனிதர் அவர்.

ராஜகுமாரனா என்று தயங்கிய நண்பர்களிடம், அவரை வைத்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அனைவருக்கும் போட்டுக் காண்பித்தேன். அனைவருமே இந்தக் காட்சியை இப்படிப் பண்ணியிருக்கலாம் அப்படிப் பண்ணியிருக்கலாம் என்றுதான் சொன்னார்களே தவிர யாருக்கும் ராஜகுமாரன் உறுத்தலாகத் தெரியவில்லை.

`கடுகு' என்ற தலைப்பு எந்த அளவுக்குப் பொருத்தமானது?

முதலில் நான் வைத்திருந்த தலைப்பு `புலிநகம்'. புலியின் நகம் 2 இஞ்ச்தான் இருக்கும், மிகவும் வலிமையானது. ஒடும்போதும், யாரையாவது தாக்கும்போதும் அதே நகம் நீண்டுவிடும். காலின் உள்ளே அந்த நகம் இருக்கும். அந்த மாதிரியான ஒரு விஷயம் நாயகனுக்குள்ளும் இந்தப் படத்தில் இருக்கிறது. நிறைய பேர் அந்தத் தலைப்பு வேண்டாம் என்று தெரிவித்தார்கள். அதை முன்வைத்து நிறைய காட்சிகள், வசனங்களெல்லாம் வைத்திருந்தேன். தலைப்பு வைக்காமல் படப்பிடிப்பு தொடங்கினோம். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குநர் வெங்கடேஷ்தான் 'கடுகு' நல்லாயிருக்கும் என்றார். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்று சொல்வார்கள் அல்லவா என்று என் நண்பர்களும், உதவி இயக்குநர்களும் சொன்னார்கள். அப்போதுதான் ‘இதற்குப் பின்னால் இப்படி ஒரு அர்த்தம் இருக்குல்ல!’ என்று தோன்றியது. அப்போதே 'கடுகு'தான் சரியான தலைப்பு என்று முடிவு செய்துவிட்டேன்.

சுவாதி கொலை நடந்து ஒரு வாரம் கழித்து இந்தப் படத்தின் டீஸரை வெளியிட்டீர்கள். அதில் “கெட்டவங்களை விட மோசமானவங்க, ஒரு தப்பு நடக்கும்போது ஏன் என்று தட்டிக்கேட்காத நல்லவங்க” என்ற வசனம் இருந்தது. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

சுவாதி கொலைக்கும் என் படத்தின் கதைக்கும் சம்பந்தம் கிடையாது. படத்தில் கொலை, ரத்தம் என்று எதுவுமே கிடையாது. ஒரு குற்றம் நடக்கும்போது, அதைப் பார்த்துவிட்டுத் திரும்பிப் போகிறார்கள் இல்லையா, அவர்கள் மீது எனக்குக் கோபம் இருக்கிறது. நான் மட்டும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்திருந்தால் துரத்திக்கொண்டாவது ஓடியிருப்பேன், அல்லது என்னுடைய போனில் அவனுடைய முகத்தையாவது படமாக எடுத்திருப்பேன். கண்டிப்பாக எதுவுமே பண்ணாமல் அந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்.

என் படத்தின் டீஸர் தயாராகி 20 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. எந்தவொரு படத்தின் டீஸரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகாத தினத்தில் வெளியிட வேண்டும் என்று மட்டுமே காத்திருந்தேன். சுவாதி கொலை நடந்து 2 நாட்கள் கழித்துதான், ‘சுற்றி இருந்தவர்கள் ஏன் சும்மா இருந்தார்கள்?’ என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றைக்குத்தான் டீஸர் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஒரு கொலை நடந்திருக்கிறது, அதில் நாம் ஆதாயம் அடையக் கூடாது என்பதால்தான் சில நாட்கள் கழித்து வெளியிட்டேன்.

உங்களது முந்தைய படமான `10 எண்றதுக்குள்ள' போதிய வரவேற்பு பெறாததற்குக் காரணம் என்ன?

விமர்சனம் எழுதிய என் நண்பர்கள் அனைவருக்குமே போன் பண்ணி பேசினேன். ‘படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள், ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் மட்டும் சொல்லுங்கள்?’ என்று கேட்டேன். யாருமே ஒரே மாதிரியான காரணத்தைச் சொல்லவில்லை. அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே படம் மிகவும் பிடித்திருக்கிறது. படம் மக்களிடையே சரியாகப் போய்ச் சேரவில்லை. அந்த விஷயம் என்ன என்பதைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு குழந்தை இறந்துவிட்டால், எப்போதுமே ஒரு வலி இருந்துகொண்டே இருக்கும். அப்படித்தான் `10 எண்றதுக்குள்ள' படத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் இருக்கிறது.

அப்படியென்றால் விமர்சகர்கள்தான் பிரச்சினை என்கிறீர்களா?

பத்திரிகை, தொலைக்காட்சி தற்போது இணையம் என விமர்சனம் பண்ணும் இடம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஒரு படத்தை விமர்சிக்கும் தகுதி அனைவருக்கும் கிடையாது. உங்களுடைய கருத்தை வீட்டில் சொல்வது தப்பே கிடையாது, ஆனால் அதே கருத்தைப் பொது வெளியில் சொல்வது தப்புதான். தற்போது ஒரு படத்துக்கு வரிந்துகட்டிக்கொண்டு எழுதுபவர்கள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளைப் பற்றியும் எழுத வேண்டியதுதானே! அப்படி எழுதினால் எவ்வளவு நல்லது நடக்கும். அதைப் பற்றி யாருமே கவலைப்படுவதில்லையே. பொழுதுபோக்கு விஷயங்களைப் பற்றி மட்டும் கருத்து சொல்பவர்கள், நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் கருத்து சொல்லத் தொடங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்!

ஒரு படத்தைத் திட்டுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேபோல அந்தப் படத்தில் இருக்கும் நல்ல விஷயத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. கெட்ட விஷயங்களை எல்லாம் சொல்லி, பிறகு நல்ல விஷயங்களையும் சொல்லி இந்த நல்ல விஷயங்களெல்லாம் இந்தப் படத்துக்குக் கைகொடுக்கவில்லை என்று சொல்லலாமே. நல்ல விஷயத்தையெல்லாம் சொல்லாமல் விட்டீர்கள் என்றால் எனக்கு கோபம்தானே வரும்.

சிறிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த நீங்கள், ஏன் பெரும் பொருட்செலவில் உருவாகும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை?

எனக்கு வாய்ப்பு வரவில்லை. அதுதான் உண்மை. நான் பெரிய படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கேட்டு போனதே இல்லை. பெரிய நடிகர்கள் நடித்து, பெரிய பொருட்செலவில் தயாரித்தால்தான் பெரிய படமா என்று கேட்டால், இல்லை என்று சொல்வேன். எனக்குக் கதைக்குத்தான் ஷாட் வைக்க வேண்டும். கதாநாயகர்களுக்கு ஷாட் வைப்பது எப்போதுமே எனக்கு ஒத்துவராது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x