Published : 10 Oct 2014 12:08 PM
Last Updated : 10 Oct 2014 12:08 PM
பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் சென்னை வந்தால் ஒன்று அது விருது விழாவாக இருக்கும் அல்லது அவர் நடித்த படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படும் புரமோசன் நிகழ்ச்சியாக இருக்கும். இம்முறை வருகை தந்தது அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தை விளம்பரப்படுத்த.
கூடவே படத்தின் நாயகி தீபிகா படுகோனையும் அழைத்து வந்திருந்ததால் மொத்த மீடியாவும் ஆஜர். நிகழ்ச்சியின் முடிவில் ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து...
உங்களுடைய மற்ற படங்களில் இருந்து ‘ஹேப்பி நியூ இயர்’ எந்த விதத்தில் மாறுபடுகிறது?
ஆறு கதாநாயகர்கள் இப்படத்தில் இருக்கிறார்கள். படத்தில் முக்கியமான மாஸ்டர் மைண்ட் கதாபாத்திரத்தில் நான் நடிச்சிருக்கேன். வாழ்க்கையில் நாம எதிர்பார்க்காதப்போ எல்லோருக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும்.
அதை நோக்கி மற்ற கதாபாத்திரங்கள் நகர்வதற்கு ஒரு காரணமா நான் இருப்பேன். நண்பர்கள் ஒரு குழுவாக மாறி எப்படித் தங்களுடைய இலக்கை அடையறாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.
இந்தப் படத்திற்காக 8 பேக்ஸ். வைச்சிருக்கீங்க?
‘சக் தே இந்தியா’ படத்துல பார்த்த மாதிரியே நான் இருக்கேன். என்கிட்ட அதிகம் மாற்றமில்லை. என் ஜீன்ஸ் அளவு 28, என்னோட மகனோடது 27. என் வாழ்க்கையில 70 கிலோ எடைக்கு மேல் இதுவரை கூடியதில்லை. அனைவரது முன்னிலையில் என்னோட 6 பேக் தசைகளைக் காட்டுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் நான் எப்பவுமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிக ஆர்வமாக இருப்பேன். கதாபாத்திரங்களுக்குத் தேவையான உடலமைப்பை அடைய 2 முதல் 3 மாதம் வரை ஆகும். சரியான அளவில் சத்தான உணவும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும்.
பல நடிகர்களுடன் இனைந்து நடிக்க எப்படிச் சம்மதம் தெரிவித்தீர்கள்?
இந்தியாவில் நிறைய நடிகர்கள் ஒரே படத்தில் நடித்திருப்பது சில படங்களில்தான். சில நடிகர்கள் மட்டுமே இதுபோன்ற கதைகளை ஏற்று நடிக்கிறார்கள். இந்தப் படம் மற்றொரு கோணத்தில்கூட வித்தியாசமானது, கொள்ளைக் கூட்டத்தையும், ஒரு நடனப் போட்டியையும் அடித்தளமாகக் கொண்ட படம் இது. ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக அதிகப் பாராட்டுகள் கிடைத்தன. எந்தப் படமாக இருந்தாலும் ஒரு கதாநாயகன், கதாநாயகி அப்படின்னு ஏன் எடுக்கணும்?.
சுலபமாக நான் மட்டும் ஹீரோவாக நடித்து, அதிக லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக வித்தியாசமான, வழக்கத்திற்கு மாறான இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறோம்.
‘மை நேம் இஸ் கான்’ படத்திற்குப் பிறகு கமர்ஷியல் படங்கள் பக்கம் கவனம் திருப்ப காரணம் என்ன?
எனக்குக் கிடைக்கும் வாய்ப்பைத்தானே பண்ண முடியும். ‘மை நேம் இஸ் கான்’ படத்திற்குப் பிறகு என் குழந்தைகளுக்காக ‘ரா-ஒன்’ படத்துல நடிச்சேன். விஷுவல் எஃபெக்ட்ஸ் என் படத்தில் பயன்படுத்துவதற்கான ஆசையில நடிச்ச படம் தான் ‘ரா-ஒன்’. அந்தப் படம் அதிக லாபம் கொடுக்கவில்லை என்றாலும், அதுதான் இதுவரை எங்கள் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அடுத்து தொடர்ச்சியாக ‘டான்’ படத்தில் நடித்தேன். எனக்காகக் கதை பண்ணும் இயக்குநர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்தால், ஜார்ஜ் க்ளூனியால் உங்கள் வேடத்தில் நடிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக முடியும் என்றே நினைக்கிறேன். இந்தப் படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால், அவர் என்னைவிட நன்றாகவே நடனம் ஆடுவார். எனக்கு நடனமாடத் தெரியாது. இந்தப் படத்தில் நல்லா ஆடறவங்க அபிஷேக்கும், தீபிகாவும்தான். ஆடத் தெரியாததால் என்னை கிண்டல்கூடப் பண்ணியிருக்கிறார்கள். எல்லார் முன்னாடியும் ஆடத் தெரிஞ்ச மாதிரி காண்பிக்கத் தெரியும். ஆனால் நிஜத்தில் எனக்கு நடனமாடத் தெரியாது.
உங்களது படத்தில் தென்னிந்தியாவில் இருந்து ஒருவராவது பணியாற்றி விடுகிறார்களே?
இந்தியாவில் திரைப்படங்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. தென்னிந்தியாவில் திறமை வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஷங்கர் படங்களும், மணிரத்னம் படங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
தவறாமல் அவர்களுடைய எல்லாப் படங்களையும் பார்க்க விரும்புவேன். கொல்கத்தா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற ஊர்களில் இருந்து வந்த படங்கள் நம்மை மகிழ்விக்கும்போது ஏன் பாலிவுட் படங்களையும் இங்கு இருப்பவர்களிடம் கொண்டுசேர்க்கக் கூடாது? என் படங்களை இங்கே வெளியிடுவதை நான் என் கடமையாக நினைக்கிறேன். தென்னிந்தியத் திரைப்படங்கள் பல என்னை ஊக்குவித்துள்ளன. அதேமாதிரி என் அலுவலகத்தில் வேலை பார்க்கிறவங்க 90 சதவீதம் தென்னிந்தியர்களே.
அவர்களோடு வேலை பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கே நான் எப்போது வந்தாலும் நடிகர்களும், இயக்குநர்களும் எனக்குப் பெரும் வரவேற்பு தந்து உபசரிக்கிறார்கள். இதுவும் என்னுடைய சொந்த ஊராகவே எனக்குத் தோன்றுகிறது. இந்தியத் திரையுலகம் பிரம்மாண்டமானது, நாம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் சர்வதேசத் திரையுலகத்தையும் ஆளலாம் என்பது என் கருத்து.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT