Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM
அப்பா, மகன், பேரன் மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை சர்வதேச அளவில் எந்தத் திரைக் குடும்பத்துக்கும் கிடைத் திருக்குமா என்று தெரியவில்லை. அந்தச் சாதனையை நாகேஸ்வர ராவும் அவரது மகன் நாகார்ஜூனாவும் பேரன் நாகச் சைதன்யாவும் சேர்ந்து ‘மனம்’ தெலுங்குத் திரைப்படம் வழியாகச் செய்துள்ளனர். தெலுங்குப் புத்தாண்டுக்கு வெளியாகும் மனம் திரைப்படத்தை உச்சி முகர்ந்து கொண்டாடக் காத்திருக்கிறார்கள் தெலுங்கு சினிமா ரசிகர்கள்.
தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடத்தில் தனி இடம் பெற்றுள்ள சமந்தா இப்படத்தின் நாயகி. இன்னும் வண்ணம் சேர்க்க ஸ்ரேயா இன்னொரு நாயகி.
தேவதாஸ் படம் மூலம் இந்திய சினிமாவில் நிலையாப் புகழ் பெற்றவரும், முன்னாள் சூப்பர் ஸ்டாருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் கடைசியாக நடித்த படம் இது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சமீபத்தில் காலமான நாகேஸ்வர ராவ், தனது மரணத்தை முன் உணர்ந்து தான் நடிக்க வேண்டிய பகுதிகளை வேகவேகமாக நடித்துக் கொடுத்துவிட்டுத்தான் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்படியும் டப்பிங் பேச வேண்டிய வேலை பாக்கி இருக்க இவரது அன்பு மகனும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனா, மருத்துவமனை அறையிலேயே தந்தைக்கு டப்பிங் கூடத்தை அமைத்துக் கொடுத்தார். அந்தப் பிறவி நடிகன், தனது மரணப் படுக்கையிலும் தன் குரலுக்கு மாற்றுக் குரல் பயன்படுத்தப்படுவதை விரும்பவில்லை.
1920இலிருந்து 2013 வரை உள்ள காலகட்டத்தைச் சுற்றி நடக்கும் நகைச்சுவைப் படம் இது. நாகார்ஜுனா இதில் 90 வயதுக் கிழவராக வருகிறார். படத்தை இயக்குபவர் விக்ரம் குமார்.குடும்பமே கொண்டாடும் திரைப்படங்கள் இல்லை என்ற குறையைத் தீர்த்துவைக்க யுகாதியில் வெளியாக இருக்கிறது மூன்று தலைமுறையினர் நடித்த மனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT