Last Updated : 01 Jan, 2016 10:01 AM

 

Published : 01 Jan 2016 10:01 AM
Last Updated : 01 Jan 2016 10:01 AM

2015-ன் நட்சத்திரம்: மர்ம வசீகர ‘மாயா’ ஜால நாயகி!

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் வெற்றியாளர்களில் முதல் இடம் சந்தேகமில்லாமல் நயன்தாராவுக்குத்தான்.

‘தனி ஒருவன், ‘மாயா’, ‘நானும் ரவுடி தான்’ என்று மூன்று வெற்றிப் படங்கள்! முதல் வரிசைக் கதாநாயகர்களோ (ஜெயம் ரவியைத் தவிர) இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ அடைந்திராத வெற்றி இது.

நயன்தாராவின் வெற்றி இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்கு வெளியிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. சமீபத்தில் சேலத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு நயன்தாரா சென்றபோது அவரைக் காண்பதற்குத் திரண்ட கூட்டத்தின் அளவுக்கு வேறு எந்தக் கதாநாயகிக்கும் திரண்டிருக்குமா என்பது சந்தேகமே. இவ்வளவு ஏன், முன்னணிக் கதாநாயகர்கள்கூட நயன்தாராவின் கால்ஷீட்டுக்காகத் தவம் கிடக்கிறார்கள். ஆண்களை மையமாகக் கொண்டு இயங்கிவரும் திரைப்பட உலகுக்கு இது கொஞ்சம் புதிதே.

நீடிக்கும் செல்வாக்கு

தமிழில் ‘ஐயா’ திரைப்படத்தில் அறிமுகமாகி பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு வேறு எந்தக் கதாநாயகிக்கும் கிடைக்காத இடம் நயன்தாராவுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த 11 ஆண்டு காலகட்டத்தில் எத்தனையோ கதாநாயகர்கள் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துவிட்டு முன்னணிக் கதாநாயகர்கள் வரிசையில் இரண்டு மூன்று ஆண்டுகள் இருந்துவிட்டுக் காணாமல் போய்விட்டனர். ஆண் நடிகர்களின் கதையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். பெரும்பாலான நடிகைகள் இரண்டு மூன்று படங்கள் தாங்கினால் அதிகம். இத்தனைக்கும் மத்தியில் நயன்தாரா இன்று முதல் இடத்தில் இருக்கிறார்.

இதற்கு இதுதான் காரணம் என்று ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே சுட்டிக்காட்டிவிட முடியாது. நயன்தாராவின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு நடிகை எந்தக் காரணங்களாலெல்லாம் பிரபலமாவாரோ அதில் பெரும்பாலான விஷயங்கள் நயன்தாராவிடம் இல்லை. ஹன்சிகா அளவுக்கு வெளிர் நிறம் கிடையாது; சிம்ரனைப் போல அசாதாரணமாக ஆடத் தெரியாது; சிம்ரன், குஷ்பு போன்ற நயன்தாராவுக்கு முந்தைய காலத்தின் நடிகைகளைப் போல நயன்தாரா கவர்ச்சி காட்டி நடித்ததும் எடுபடவில்லை (‘வில்லு’, ‘சத்யம்’ போன்ற படங்கள் உதாரணம்).

இளகிய மனம்

வழக்கமாக இந்த மூன்று விஷயங்களையும் ஒரு ‘முதன்மை’ நாயகியிடம் தேவியின் காலத்திலிருந்தே நம் தமிழ் சமூகம் எதிர்பார்த்து, அதைப் பூர்த்திசெய்பவர்களை அந்த ‘முதல்’ இடத்தில் வைத்திருக்கிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தற்காலத் தமிழ் சினிமா உலகில் நயன்தாரா ஓர் அதிசயம்தான். இதையெல்லாம் தாண்டி யும் ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் விளக்கிச் சொல்ல முடியாத ஒரு காரணமும் இருக்கும். அந்தக் காரணத்தை நயன்தாரா முழுமையாகப் பூர்த்தி செய்கிறார்.

ஒரு நடிகர் சமூகத்தின் மனதில் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் முதலில் திரையுலகத்தினரின் மனதில் இடம்பிடிக்க வேண்டும். திரையுலகினர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது நயன் தாராவின் நல்ல மனதைப் பற்றித்தான். திரைத் தொழிலாளர்களுக்கு அவர் செய்யும் உதவிகள், பத்திரிகையாளர்களுடன் நட்பு பாராட்டுவது என்று அவருடைய நல்ல உள்ளத்தைப் பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன.

இதுபோன்ற விஷயங்களால்தான் திரைத்துறையில் உள்ள பலருக்கும் ‘நம்ம படத்துல நயன்தாரா இருக்கணும்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. திரைத் தொழிலாளர்களும் இதுபோன்ற கலைஞர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறார்கள். நயன்தாரா போன்ற கலைஞர்களை ஒரு தொன்மமாக ஆக்குவது அவருடன் பணிபுரியும் கலைஞர்கள், தொழிலாளர்கள் எல்லோரும்தான். இதுபோன்ற கதைகள் சமகாலத்தில் திரையுலகத்தில் அஜித் குமாரைப் பற்றி மட்டுமே சொல்லப் படுவதுண்டு. திரையுலகத்துக்குள் முதலிடம் பிடிக்காமல் ஒருவர் மக்கள் மனதில் முதலிடம் பிடிக்க முடியாது என்பதற்கு நயன்தாரா ஒரு எடுத்துக்காட்டு.

வசீகரத்தின் மர்மம்

அடுத்தது, தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் மக்கள் மத்தியில் நயன்தாரா உலவிக்கொண்டிருக்கிறார். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கிசுகிசுக்கள் இந்த 11 ஆண்டுகளில் ஏராளம். இதெல்லாம் சேர்ந்து ஒரு விரக்தி பிம்பம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவரது சிரிப்பு, வசீகரம் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சோகம் இருப்பதுபோன்ற தோற்றம், அவரது வசீகரத்துக்கு ஒரு மர்மத்தையும், மேலும் அழகையும் கொடுக்கிறது.

அந்த மர்ம வசீகரம் ‘மாயா’ திரைப்படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. வெவ்வேறு ஹீரோக்களுடன் இரண்டு ஹிட்டுகளை இந்த ஆண்டில் கொடுத்திருக்கும் நயன்தாரா தனி ஒருவராய்க் கொடுத்திருக்கும் ஹிட்தான் ‘மாயா’. ‘அப்ஸரா’ பாத்திரத்திலும் திரையில் காட்டப்படாத ‘மாயா’ பாத்திரத்திலும் நடித்திருக்கும் நயன்தாராவின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்தப் படத்தில்தான். அவருடைய ஒட்டுமொத்தத் திரை வாழ்க்கையிலேயே மிகவும் அழகான நயன்தாராவும் ‘மாயா’ நயன்தாராதான். மர்ம வசீகரத்தின் முழு வடிவம்தான் இந்த ‘மாயா’.

குறுகிய திரை ஆயுட்காலத்தைக் கொண்ட நடிகைகள் மத்தியில் தனது திரை வாழ்க்கையின் 11-வது ஆண்டில் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகிறார் நயன்தாரா. அவரது திறமை, அர்ப்பணிப்பு, எல்லோராலும் போற்றப்படும் அவரது நல்ல உள்ளம், அந்த ‘மர்ம வசீகரம்’ இவையெல்லாம் மற்றவர்களால் எட்டிப்பிடிக்க முடியாத உச்சத்தை நோக்கி அவரைக் கொண்டுபோகின்றன. இரண்டாம் இடத்தில் யாருமில்லாத ‘தனி ஒரு’ உச்சம்! அந்த உச்சத்துக்கு நயன்தாராவுக்கு மிக முக்கியமான ஆண்டு 2015.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x