Published : 29 Jul 2016 11:20 AM
Last Updated : 29 Jul 2016 11:20 AM
பொதுவாகவே திரைக்கதை என்பது முரண்களின் விளையாட்டு. எப்போதுமே முரணான விஷயங்களை எடுத்துக்கொண்டு அதில் பயணப்படும்போதுதான் திரைக்கதையின் சுவாரசியம் கூடும். நல்லவர் நல்லது செய்வார் என்பதில் பெரிய சுவாரசியமிருக்காது. ஆனால் ஒரு தீய செயலை அவர் செய்யும்போது, அதற்கான காரணத்தை அறிந்துகொள்வதில் ஆர்வம் ஏற்படும். அப்படியான ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான திரைக்கதையை அமைக்கும்போது ரசிகர்களை எளிதில் ஈர்க்கலாம். எனவேதான் பெரும்பாலான திரைக்கதைகள் முரண்களின்மீதே களம் அமைத்துக்கொள்ளும். ‘சின்னத் தம்பி’ திரைப்படத்தில் குடும்ப கவுரவத்தின் சின்னமான குஷ்பு, தாலியென்றால் என்னவென்றே அறியாத பிரபுவைக் காதலித்ததுபோல் நிஜத்தில் எங்காவது நடக்குமா? காலணியைக் கழற்றிவிட மாட்டாரா? அது சினிமா, அங்கே ஒரு முரண் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.
இப்படியும் எழுத்தாளர்கள் உண்டு!
முரண்களைக் கொண்டு அமைக்கப்படும் திரைக்கதையை ஒரு வகையில் குதிரைச் சவாரிக்கு ஒப்பிடலாம். சவாரி பிடிபட்டால் காற்றாகப் பறக்கலாம். இல்லையென்றால் காற்றில் பறக்க நேரிடும். இந்த உண்மை புரியாமல் பலர் இதில் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள். சினிமா பார்க்கும்போது திரைக்கதை என்பது மிகவும் சாதாரணமாகத் தோன்றும். இதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ற எண்ணத்தில் சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். சினிமாவுக்கு எழுதவும் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் பின்னர்தான் அதன் நடைமுறை சிரமத்தை உணர்வார்கள். ஒருவர் நன்றாகப் படித்திருப்பார், புலமைபெற்றவராக இருப்பார். ஆங்கிலம் அவருக்குத் தண்ணீர்பட்ட பாடாக இருக்கும். ஆனால் அவற்றை நம்பி அவர் ஒரு திரைக்கதையை எழுதத் துணிந்தால் விழி பிதுங்கிவிடும். அதே நேரத்தில் இன்னொருவர் எதுவுமே பெரிதாகப் படித்திருக்க மாட்டார். பள்ளிப் படிப்பையே பாதியில் விட்டுவிட்டு வந்திருப்பார். வெட்டியாகப் பொழுதைக் கழிப்பவராக இருப்பார், ஆனால் சுவாரசியமான திரைக்கதைகளாக எழுதிக் குவிப்பார். இதுவே முரண்தானே? இது எப்படிச் சாத்தியம்? இதை அறிவால் அறிந்துகொள்ள முயன்றால் தோல்வியே மிஞ்சும்.
வரம்பை மீறாத நெகிழ்ச்சி
இதை உணர்வுரீதியில் அணுகினால் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். அப்படியான உணர்வுகொண்டோரால்தான் திரைக்கதையை உருவாக்க முடியும். ஏனெனில் அது ஒரு குழந்தையைக் கையாள்வது போன்றது. அதற்கு அறிவு அடிப்படைத் தேவையல்ல. ஆனால் இங்கிதமான உணர்வும் கரிசனமும் இன்றியமையாதவை. திரைக் கதாபாத்திரங்கள் வெறும் நிழல்கள். ஆனால் அவற்றை ரசிப்பவர்கள் ரத்தமும் சதையுமான மனிதர்கள். இந்தப் புரிதலுடனும் நெகிழ்ச்சியான உணர்வுடனும் கதையைக் கட்டுக்கோப்பாகவும் அனைவரும் ரசிக்கும்படியாகவும் இயல்பான சம்பவங்களால் கட்டி நகர்த்திச் செல்லும் திறமை இருந்தால் போதும்; சின்னச் சின்ன சம்பவங்களில் ரசிகர்களை நெகிழ்த்திவிட முடியும்.
அப்படியான காட்சிகள்தான் ரசிகர்களை ஈர்க்கவும் செய்யும். கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நெகிழ்ச்சி என்பது அதன் வரம்பைக் கடந்துவிடாமலிருக்க வேண்டும். இல்லையென்றால் ரசக்கேடாய் அமைந்துவிடும். இந்த வரம்பைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘அம்மாவின் கைப்பேசி’, சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ போன்ற திரைப்படங்களைப் பாருங்கள். உங்களுக்கே புரிந்துவிடும்.
யதார்த்தமும் ஆவணப்படத் தன்மையும்
திரைக்கதையில் ஒரு காட்சி அதிகாலை புலர்வதுபோல் இயல்பாகத் தொடங்க வேண்டும்; மாலையில் கதிரவன் மறைவது போல் கச்சிதமாக நிறைவுபெற வேண்டும். இதற்கான பயிற்சியைக் காலமும் அனுபவமும்தான் கற்றுத்தரும், லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படத்தில் ஒரு காட்சியில் பின்னிரவில் நடிகை வித்யா வீட்டின் பாத்திரங்களை எடுத்துப் போட்டு விளக்கிக்கொண்டிருப்பார். பல குடும்பங்களில் இந்தக் காட்சியை அன்றாடம் நாம் பார்த்திருப்போம். அதைத் திரைப்படத்தில் பார்க்கும்போது நமக்கு உணர்வெழுச்சி ஏற்படுகிறது. இப்படியான சின்னச் சின்ன இயல்பான சம்பவங்கள் ஒரு படத்தில் இருந்தாலே அந்தப் படம் ரசிகர்களுக்கு நெருக்கமானதாக மாறிவிடும். இந்தக் காட்சியை அமைக்கப் பெரிய அறிவு அவசியமல்ல. ஆனால் வீடுகளில் நாம் காணும் அப்படிப்பட்ட வேலைகளைக் கண்களால் அல்லாமல் மனதால் கவனித்திருக்க வேண்டும். அப்படிக் கவனித்திருந்தால் பொருத்தமான ஒரு தருணத்தில் அதேவிதமான காட்சியை அமைக்கலாம்.
நடைமுறை வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சம்பவத்தைத் திரைக்கதையில் கொண்டுவரும்போது கற்பனை வளத்துடன் அந்தக் காட்சி அமைய வேண்டும். இல்லையென்றால் அதற்கு ஒரு ஆவணப் படத் தன்மை வந்துவிடும். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஆவணப் படத் தன்மையிலிருந்து விலகியிருக்க வேண்டும். அப்படியான விதிகளையொட்டி காட்சி அமையும்போது ரசிகர்களின் உணர்வோடும் அது கலந்துவிடும். இதைப் போல் ‘வெயில்’ திரைப்படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் பாண்டியம்மாளும் முருகேசனும் தீப்பெட்டிகள் இறைந்து கிடக்கும் வீதியில் பேசியபடி நடந்து செல்லும்போது சாக்குகளை உதறிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி வரும். இதைப் போன்ற அவர்கள் வாழ்வில் பார்த்த ஒரு விஷயத்தை ரசனையுடன் பதிவு செய்யும்போது ரசிகர்கள் உற்சாகம் பெறுவார்கள்.
உள்ளூர்ப் படங்களும் உலகப் படங்களும்
இப்படியான காட்சிகள் திரைக்கதையில் கைகூடுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்கான பொறுமை இன்றி திரைக்கதையில் கைவைத்தால் ‘வாகை சூட வா’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘மெரினா’, ‘நந்தலாலா’, ‘தாரை தப்பட்டை’, ‘இறைவி’ ஆகிய படங்களைப் போல் படம் அமைந்துவிடலாம். தரக் குறைவான படங்களை எடுக்கக் கூடாது என்ற விருப்பம் உள்ளவர்கள் தாராளமாகத் தமிழ்ப் படங்களைப் பார்க்கலாம், அதிலிருந்து பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். உன்னதமான உலகத் திரைப்படங்கள் உங்களை மெருகேற்றுவது போல் தமிழ்ப் படங்களும் உங்களை மேம்படுத்தும். தரமான படத்தில் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் தரமற்ற படங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே உலகப் படங்களுடன் இணைந்து உள்ளூர்ப் படங்களையும் பாருங்கள்; அப்போதுதான் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியும்.
சில முன்னோடிகள்
கே.பாக்யராஜ், ஸ்ரீ தர் போன்றவர்கள் திரைக்கதையை அமைத்துச் செல்லும் விதத்தைப் பாருங்கள். பெரிய மெனக்கெடுதல் இல்லாமல் மிகவும் இயல்பான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே சென்று திரைக்கதையை அமைப்பார்கள். அடிப்படையில் ஏதாவது ஒரு முரண் மட்டும் இருந்துகொண்டேயிருக்கும். உதாரணமாக, எந்தப் பெண்ணும் குழந்தையைக் கீழே போட்டுத் தாண்டிப் பொய் சொல்ல மாட்டாள் என்பது ஒரு நம்பிக்கை.
ஆனால் அப்படி ஒரு பெண்ணால் பொய் சத்தியம் பண்ண முடிகிறது என்பதை வைத்தே அவர் ‘முந்தானை முடிச்சு’ என்னும் படத்தை உருவாக்கினார். அந்தப் பொய் சத்தியத்தின் பின்னணியில் ஓர் உண்மை அன்பு மறைந்திருக்கும். அதுதான் திரைக்கதையின் மைய நரம்பு. அதன் பலம் ரசிகர்களை இறுதிவரை படத்துடன் பிணைத்திருக்கும். ஆகவே, பிரயத்தனத்துடன் காட்சிகளுக்காக மூளையைச் சூடாக்கிக்கொள்வதைவிட நமது வாழ்வில் நாம் கடந்த, கேள்விப்பட்ட சம்பவங்களை, நிகழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் பொருத்தமான வகையில் பொருத்திவிட்டால் போதும்; திரைக்கதை வலுப்பெறும்.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment