Published : 03 Jun 2016 10:40 AM
Last Updated : 03 Jun 2016 10:40 AM
தமிழ்த் திரைப்படத் துறை தொழில்நுட்பரீதியில் பெரும் வளர்ச்சி கண்டிருக்கிறது. அந்தத் தொழில்நுட்பத்தை அவசியப்பட்ட தருணத்தில் அவசியப்படும் காரணத்துக்காக மட்டும் பயன்படுத்துகிறார்களா? பல தருணங்களில் சம்பந்தமே இல்லாத காட்சிகளில் எல்லாம் தொழில்நுட்பத்தின் குறுக்கீடு தென்படும். கற்பனை வளத்தைக் காட்சியாக மாற்றத் தொழில்நுட்பம் பயன்பட வேண்டும், அதை விடுத்து எல்லாத் தவறுகளையும் தொழில்நுட்பத்தால் சரிப்படுத்திவிடலாம் என்னும் மூடநம்பிக்கை வளர்ந்துவிட்டது.
உள்ளடக்கம் சார்ந்து பெரிய அளவிலான மெனக்கெடுதல் இல்லாததால் அவர்களது ஆற்றல் தொழில்நுட்பத்தின் பக்கம் சாய்ந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இளைஞர்களிடம் அளப்பரிய ஆற்றல் குவிந்து கிடக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் அதிலொரு பகுதியை உள்ளடக்கம் சார்ந்தும் செலவிட வேண்டியது அவசியமாகிறது. அப்படிச் செயல்படுத்தும் வேளையில் தொழில்நுட்ப ரீதியில் அவர்களைப் பிரமிப்போடு பார்க்கும் நம்மால் உள்ளடக்கம் சார்ந்தும் பிரமிப்போடு பார்க்க முடியும்.
சமகால வாழ்வின் ஆழமின்மை, அடர்த்தியின்மை சினிமாவிலும் ஊடுருவியிருக்கக்கூடும். ஆனால் தமிழ் சினிமா அவ்வளவு சிறப்பாக இல்லை என்னும் குற்றச்சாட்டு சினிமா தொடங்கிய நாள் முதலாகவே இருந்துவருகிறது. முன்னர் வந்த படங்கள் இப்போதைய படங்களைவிடப் பரவாயில்லை என்னும் வகையிலேயே இளைஞர்கள் தங்களின் முந்தைய தலைமுறைக்குப் பெயர்வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இந்த வகையில் அடங்காமல் ஆண்டுக்கு ஓரிரு நல்ல படங்கள் வெளியாகி சினிமாத் துறையின் பெயரைக் காப்பாற்றிவருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதே நிலைதான் தொடர வேண்டுமா என்பதே ஆதங்கம். வெகுவாகச் சிரமப்பட்டு எடுக்கப்படும் திரைப்படத்தை அதே அளவு சிரமப்பட்டா பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்?
அகிரா குரோசோவா, ஸ்டான்லி குப்ரிக், பொலான்ஸ்கி என்று உலகளவிலான இயக்குநர்களின் படத்தை எல்லாம் பார்த்த பின்னர் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களின் தரம் எப்படி இருக்கிறது? திரைப்பட அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் படங்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு எந்தப் படத்தின் காட்சி நமக்குப் பயன்படும் என்ற பயன்பாட்டு நோக்கத்துக்காகப் படங்கள் பார்க்கப்படுகின்றனவோ? கலைப்படங்கள் காலைவாரும் என்று வணிகப்படம் எடுக்கிறார்களா? வணிகப் படங்களாவது ஒழுங்கான படங்களாக உள்ளனவா?
சமீபத்தில் ஆர். சுந்தர்ராஜனின் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. ஒரு குவளை நீர் கிடைக்காததால் காதலியை இழந்தவனும், குளம் நிறைய நீர் இருந்ததால் கணவனை இழந்தவளும் இணைந்து ஒரு காதல் ஜோடியைச் சேர்த்துவைக்கிறார்கள்.
இந்த ஒரு வாக்கியம்தான் படத்தின் கதை. அந்தக் கதையிலேயே ரசிகர்களை ஈர்த்துவிடும் மாயம் இருக்கிறது. ஒரு குவளை நீரால் காதலியை இழந்த வெள்ளைச்சாமி ஊருக்கெல்லாம் தண்ணீர் எடுத்து ஊற்றிக் காலத்தைக் கழிக்கிறான். திருமண நாளன்றே அதுவும் ஒருமுறைகூடக் கணவன் முகத்தைப் பார்க்காமலே அவனை இழக்கிறாள் நாயகி வைதேகி.
ஆகவே அந்தக் கணவனின் முகம் பார்வையாளருக்கும் காட்டப்படுவதில்லை. படத்தின் ஒரு காட்சியில் ராமகிருஷ்ணரும், சாரதா அம்மையாரும் இணைந்திருக்கும் ஒளிப்படம் ஒன்று இடம்பெற்றிருக்கும். வெள்ளைச்சாமியையும் அவனுடைய வைதேகியையும் குறிக்கும் வகையில் அந்த ஒளிப்படம் மவுனச் சான்றாக இருக்கும்.
கைம்பெண்கள் மீதான பரிவுடன் மூடநம்பிக்கையைச் சாடும் காட்சியும் படத்தில் உண்டு. இவ்வளவுக்கும் இது ஒரு பொழுதுபோக்குப் படமே. ஒரு கலைப் படம் என்ற மகுடம் தரிப்பதற்கு ஏற்றதன்று. ஆனால் தேர்ந்தெடுத்த கதைக்கு இயக்குநர் நியாயம் செய்திருக்கிறார். தொழில்நுட்பம் வளர்ந்து கிடக்கும் இன்றைய நாட்களில் இப்படியான படங்களாவது பெருகியிருக்க வேண்டும்; ஆனால் குறைந்துகொண்டே வருகின்றன.
இந்தப் படத்தை நமக்கு நினைவுபடுத்துவது, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’ என்னும் வசனம். எனில் எங்கே பிழை? பார்வையாளரிடமா, படைத்தவரிடமா? பார்வையாளர்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் தேவைப்படும்போது நிலவுக்கு எதற்குப் பயணம் செல்ல வேண்டும் எனப் படைப்பாளிகள் எண்ணிவிடுகிறார்களோ?
தமிழின் தற்கால இயக்குநர்களில் பெயர்வாங்கிய இயக்குநர்கள் எல்லாம் உலக அளவிலான தரத்தில் படத்தைப் படைத்தவர்களா? இல்லை. ஆனால் தாங்கள் உருவாக்கும் படத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திவிட வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர்கள். அவ்வளவுதான். ரசிகர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.
அந்த முனைப்பு அவர்களுக்கும் தெரிகிறது, எனவே படம் சற்றேறக்குறைய இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்கிறார்கள். விமர்சகர்கள் கறார் தன்மையுடன் அணுகும் ஒரு படத்தை ரசிகர்கள் கரிசனத்துடன் அணுகுவதற்கு இதுதான் காரணம். இவர்களுக்கு ரசிக்கத் தெரியாது என்று நினைப்பது சரிதானா? படைப்பைத் தாண்டி, படைப்பாளி மீதும் பரிவு காட்டுபவனுக்கு நியாயம் செய்ய வேண்டாமா?
சினிமாவுக்குக் கதை எதற்கு? சுவாரசியமான திரைக்கதை இருந்தால் போதாதா? திரைக்கதைக்கு அடிப்படையே கதைதான். ஒரு வாக்கியமோ ஒரு பத்தியோ ஒரு பக்கமோ எப்படியும் ஒரு திரைக்கதையை ஒரு கதையாக மாற்றிவிடலாம். அழுத்தமான கதை அமைந்துவிட்டால் போதும் உருப்படியான படத்துக்கு உத்தரவாதம் உண்டு. படமாக்கத்தில் அடிப்படையான சில தவறுகள் இருந்தால்கூட ரசிகர்கள் அவற்றைப் பெரிதுபடுத்துவதில்லை.
உதாரணம்: கடலோரக் கவிதைகள். அந்தப் படத்தின் கதைக் களம் கன்னியாகுமரி மாவட்டத்தின் முட்டம். ஆனால் படத்தின் பாஷையோ குமரித் தமிழல்ல, பொதுத் தமிழ். அடிப்படையிலேயே சிக்கல். ஆனால் படத்தைத் தூக்கிப்பிடிக்கும் வலுவான கதை படத்தை உயிர்ப்பு மிக்கதாக மாற்றியது. இவ்வளவுக்கும் அது ஒரு ரொமாண்டிக் வகைப் படம்தான். ஆனால் இன்றுவரை பேசப்படும் படமாகவும் அது உள்ளது. கதை எழுதிய கே.ராஜேஷ்வர் இயக்கிய படங்களைவிட அவருக்குப் பெயர்வாங்கித் தந்தது இந்தக் கதை.
இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா போன்றோரிடமிருந்து இளம் இயக்குநர்கள் கற்க வேண்டிய பிரதான பாடம் இது. இந்த இயக்குநர்கள் கதையை எழுதுவதில் தங்கள் ஆற்றலை வீணாக்கவில்லை. தங்களைக் கவர்ந்த ஒரு கதைக்குப் பொருத்தமான திரைக்கதையை அமைத்து, அதை ரசனைமிகு, அழகியல்கூடிய திரைப்படமாகத் திரையில் மலரவிட்டார்கள். இதனால் அவர்களால் வீரியத்துடன் திரைப்படங்களை உருவாக்க முடிந்தது.
கதையைச் சொற்களால் விளக்க வேண்டும், திரைப்படமோ காட்சிகளால் நகர வேண்டும். சிறந்த கதையாசிரியர் சொற்களை வீணாக்க மாட்டார். சிறந்த இயக்குநர் தேவையற்ற ஒரு ஃபிரேமைக் கூடத் திரைப்படத்தில் அனுமதிக்க மாட்டார்.
நீங்கள் ரசித்துப் பார்த்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் நினைவுபடுத்திப் பாருங்கள், அதன் கதை வலுவானதாக அமைந்திருக்கும். அதனால்தான் அது உங்கள் ஞாபகத்தில் நிலைத்திருக்கும். ஒரு படத்தைப் பார்த்த பின்னர் அதன் கதையை உங்களால் எளிதாக, உணர்வுபூர்வமாகச் சொல்ல முடிந்தால் அது உங்களைப் பாதித்திருக்கிறது, உங்கள் உணர்வுடன் கலந்திருக்கிறது, அது சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது பொருள். அப்படியான தமிழ்ப் படங்கள் நாளையாவது வெளிவர வேண்டும்.
அகிரா குரோசோவா, ஸ்டான்லி குப்ரிக், பொலான்ஸ்கி என்று உலகளவிலான இயக்குநர்களின் படத்தை எல்லாம் பார்த்த பின்னர் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களின் தரம் எப்படி இருக்கிறது?
-தொடரும்
தொடர்புக்கு:chellappa.n@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT