Published : 17 Mar 2017 10:13 AM
Last Updated : 17 Mar 2017 10:13 AM
இந்தியத் திரையுலகில் மாபெரும் வசூல் சாதனை செய்த படம் 'பாகுபலி'. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஓவியம் உயிர்பெற்றதுபோல் இருக்கும். உண்மையில் இந்தப் படத்தின் காட்சி உருவாக்கத்தில் ஓவியத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அந்தப் பணியைச் செய்தவர் விஸ்வநாத் சுந்தரம். இவர் வரைந்து கொடுத்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு பல காட்சிகளைக் காட்சிப்படுத்தியுள்ளார் ராஜமெளலி. விஸ்வநாத் சுந்தரத்திடம் பேசியதிலிருந்து...
ஓவியத்தின்மீது எப்படி ஆர்வம் வந்தது?
சிறுவயதிலிருந்தே ஓவியங்களில் ஆர்வம் அதிகம். விளையாடச் செல்வதை விட வரைவதிலேயே ஆர்வத்துடன் இருக்கும்போது வீட்டிலும் தொந்தரவு செய்யாமல் ஊக்குவித்தார்கள். பள்ளியில் ஓவிய ஆசிரியர் கவுதம், அறிவியல் ஆசிரியை சரோஜினி ஆகியோர் என்னை ரொம்பவும் ஊக்குவித்தார்கள்.
திரைத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
ஓவியக் கல்லூரியில் படிக்கும்போது, தொழில்நுட்பம் சார்ந்த துறைக்குள் சென்றுவிட வேண்டும் என்பதுதான் எண்ணம். ஓவியக் கல்லூரியில் என்னுடைய சீனியர் சுரேஷ் செல்வராஜன். இந்தியத் திரையுலகில் ‘இருமுகன்', ‘பிரதர்ஸ்', ‘கிக்', ‘ரா.ஒன்' உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களில் பணிபுரிந்துள்ளார். கல்லூரி முடித்தவுடன், திரையுலகில் கலை இயக்குநர் துறைக்குள் சென்றுவிட்டார் சுரேஷ் செல்வராஜன்.
‘கான்செப்ட் ஆர்ட்’டில் எனக்கு ஆர்வம் இருப்பதாக அவரிடம் நான் தெரிவித்திருந்தேன். அந்தப் பணியின் தேவை இங்கு குறைவுதான், முக்கியமான பெரிய படங்களுக்கு மட்டும்தான் தேவைப்படும். என்னிடம் யாராவது கேட்டால் சொல்கிறேன் என்றார். கல்லூரி நண்பர் பாலாஜி மூலமாக ‘விடியும் முன்' இயக்குநர் பாலாஜி குமார் அறிமுகமானார். அவருடைய திரையுலகப் பார்வை மிகவும் அழகாக இருந்ததால், அப்படத்தில் விரும்பிப் பணியாற்றினேன். அதுதான் எனது முதல் படம்.
'பாகுபலி' வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
தயாரிப்பு வடிவமைப்பாளர் சாபு சிரிலிடம் என்னுடைய ஓவியங்களை சுரேஷ் செல்வராஜன் காட்டியுள்ளார்.. ‘பாகுபலி' வேலைகள் தொடங்கப்பட்டவுடன் சுரேஷிடம் என்னைப் பற்றி அவர் கேட்டிருக்கிறார். உடனே என்னை சாபு சிரிலிடம் சுரேஷ் அறிமுகம் செய்துவைத்தார்.
‘மகாபாரதம்' மாதிரியான கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், ‘பாகுபலி' வேறொரு படமாக இருந்தது. முதல் ஒரு மாதம் எதுவுமே புரியாமல், கிளம்பிவிடலாமா என்று இருந்தேன். நீச்சல் அடிக்க ஆசைப்பட்ட என்னைக் கடலில் தூக்கிப் போட்டதுபோல இருந்தது. 2 மாதங்கள் கழித்து, எல்லாம் புரிபட ஆரம்பித்தன, ஆர்வத்துடன் பணிபுரியத் தொடங்கினேன்.
‘பாகுபலி'யில் நீங்கள் செய்திருக்கும் வேலையின் தன்மை பற்றி சொல்லுங்கள்...
இயக்குநர் ஒரு கரு மட்டும் வைத்திருப்பார். அதைக் காட்சிகளாக எப்படிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து வரைந்து கொடுக்க வேண்டும். நிறைய வரைந்து ஒரு காட்சிக்கு எதையெல்லாம் செய்ய முடியும், முடியாது என்பதைப் பார்த்துவிடலாம். ஒரு காட்சி திருப்தியாகவில்லை என்றால், உடனே அழைப்பார். அந்தக் காட்சியை மெருகேற்றிக் கொடுப்போம். கிராபிக்ஸ் பணிகளிலும் பங்கேற்றிருக்கிறேன். அதேபோல் அந்தப் படத்தின் கலை இயக்கத்தில் அம்பு, வில், கத்தி உள்ளிட்டவற்றை வடிவமைத்தேன்.
கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முடிவடையும் முன்பு, ‘போஸ்ட் விஷுவல்’ என்று ஒரு விஷயம் உண்டு. முழுமையாக முடிக்கும் முன்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை வரைந்து கொடுக்க வேண்டும். ராஜமெளலி திடீரென்று ஒரு காட்சியைக் காட்டி, இதனை இன்னும் மெருகேற்ற வேண்டும் என்பார். அவர் கொடுத்த ஒரு படத்தை, இப்படியெல்லாம் இருக்கலாம் என வரைந்து மெருகேற்றுவோம். அது அவருக்குப் பிடித்துவிட்டால், கிராபிக்ஸ் காட்சிக்குக் கொடுத்துச் செய்துவிடுங்கள் எனக் கூறிவிடுவார்.
‘பாகுபலி' படத்தில் மறக்க முடியாத சம்பவங்கள்?
‘கட்டப்பா பாகுபலியைக் குத்துவதுதான் காட்சி. அதற்கு வரையுங்கள்’ என்றார் ராஜமௌலி. ‘எதற்காக? என்று கேட்டதற்கு, ‘முக்கியமான காட்சி. இரண்டாம் பாகத்துக்கான பெரிய வழி இது’ என்றார். முதலில் கொடுத்த 2 ஓவியங்களையும் வேண்டாம் என்று கூறியவுடன், மூன்றாவதாக ஒன்று கொடுத்தேன். அதைப் பார்த்தவுடன் எடுத்துச் சென்று ஒளிப்பதிவாளருடன் காட்டினார். நான் என்ன வரைந்து கொடுத்தேனோ, அதுதான் படத்தில் இருக்கிறது. நான் கொடுத்த ஓவியத்தில் எங்கெல்லாம் அம்பு குத்தியிருக்குமோ அதையெல்லாம் அப்படியே படமாக்கியிருந்ததைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்படிப் பல ஓவியங்களைக் காட்சிகளாக மாற்றிக்கொண்டார் இயக்குநர்.
மற்றொரு சம்பவம்; ஸ்ரீனிவாஸ் மோகன், ராஜமெளலி இருவரும் சீனாவுக்குச் சென்றிருந்தார்கள். அங்கிருந்து காட்சிகளைச் சொல்லச் சொல்ல நிறைய வரைந்து அனுப்பினேன். அங்கிருந்த சீனர்களுக்குப் புரிய வைப்பதற்கு என்னுடைய ஓவியங்களைப் பயன்படுத்திச் சில காட்சிகளை முடித்துவிட்டார்கள். அப்போது அங்குள்ள சீனர்கள் “யார் இதை வரைந்து கொடுத்தார்களோ அவரை நாங்கள் இந்தியாவுக்கு வரும்போது வேலைக்கு எடுத்துக்கொள்வோம். அற்புதமான பணி” என்று கூறியுள்ளார்கள்.
‘2.0'விலும் உங்களுடைய பணி உள்ளதாகத் தெரிவித்தார்களே...?
ஸ்ரீனிவாஸ் மோகன் என்னை அழைத்து '2.0' கதாபாத்திரங்கள் வடிவமைக்க வேண்டும் என்றார். அது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. ‘நாளைக்கு உங்களுக்கு 10 மணிக்கு ஷங்கர் சாருடன் சந்திப்பு உள்ளது வந்துவிடுங்கள்’ என்றவுடன் ஆச்சரியமாக இருந்தது. ‘பாகுபலி 'க்கு வரைந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு, அதான் ஒவ்வொரு விஷயமும் இவ்வளவு நுட்பத்துடன் உள்ளது என்று பாராட்டினார். அதற்குப் பிறகு கதாபாத்திரங்களை வரைந்து அனுப்பினேன். ஒரு கட்டத்தில் அர்னால்டிடம் பேசலாம் என இருக்கிறோம். வில்லன் பாத்திரத்துக்கு ஓவியங்கள் வரைந்து கொடுங்கள் என்றவுடன், வரைந்து கொடுத்தேன்.
அர்னால்டு எனது ஓவியங்களைப் பார்த்துவிட்டு, இவை அனைத்தும் எனக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், இவர்கள் கொடுக்கவில்லை. அப்போது ஸ்ரீனிவாஸ் மோகனிடம் ஷங்கர் சார் “விஸ்வநாத்துக்கு ரொம்ப நன்றி சொன்னேன் எனச் சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார். அது மிகப் பெரிய பெயர். அந்தப் படத்தின் தொடக்கத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நான் வரைந்து கொடுத்தேன். இப்போது எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்பது தெரியாது.
உங்களுடைய பணிக்குத் தகுந்தாற் போன்று ஊதியம் கிடைக்கிறதா?
இந்தியாவில் இந்த மாதிரியான பணிக்கு முக்கியத்துவம் அளிப்பதே சந்தோஷம்தான். சமீபத்தில் சில படங்களில் ‘ஸ்டோரி போர்டு’ கலைஞர்களின் பெயர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். இது நல்ல வளர்ச்சி. ராஜமெளலி மாதிரியான கலைஞர்களோடு பணிபுரிவதால், அவருடன் இருக்கும் உதவி இயக்குநர்களும் அவரைப் பின்தொடர்ந்து பணிபுரிவார்கள். ‘பாகுபலி'க்கு நல்ல பெயர், ஊதியம் இரண்டுமே கொடுத்தார்கள். உங்களுடைய பணி பிடித்துவிட்டால், உங்களுக்கு தேவையானது வந்தே சேரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT