Published : 07 Apr 2017 09:36 AM
Last Updated : 07 Apr 2017 09:36 AM
சமூக வலைத்தளத்தில் திகில், காதல் என படத்தின் ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு போஸ்டர்களை வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது 'பலூன்' படக்குழு. அந்தப் படத்தின் இயக்குநர் சினிஷை சந்தித்தபோது “முதல்ல டீஸர் பாருங்க. அப்புறம் பேசலாம்” என்று காட்டினார். அதனைத் தொடர்ந்து உரையாடியதிலிருந்து…
‘பலூன்' தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே...
முழுமையான கமர்ஷியல் படம். 15 நிமிடங்கள் ப்ளாஷ்பேக் காட்சியைத் தவிர, படம் முழுவதும் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். பழைய காலத்துக் கதையில் பலூன் விற்கும் வியாபாரியாக ஜெய் நடித்துள்ளார். முழுப் படத்திலும் பலூன் ஒரு முக்கியமான பொருளாக இருக்கும். பலூனை ஒரு குறியீடாகப் பயன்படுத்தியுள்ளோம். தற்போது நடைபெறும் கதையில் ஜெய் - அஞ்சலி ஜோடி, பழைய காலத்துக் கதையில் ஜெய் - ஜனனி ஐயர் ஜோடி. இதற்கு மேல் கதாபாத்திரங்களைப் பற்றிக் கூற முடியாது.
புதிய கதைக்களங்களில் படம் வரும் காலம் இது. உங்கள் படத்தில் புதுமை என்றால்?
புதிதாகச் செய்கிறோம் என்று படம் இயக்கியவர்களின் பல படங்கள் தெரியாமலேயே போய்விட்டன. `பலூன்' கதை மிகவும் புதிது என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்த்து மகிழ்ந்தால் போதும். கதை புதியது, பழையது என்பதெல்லாம் முக்கியமில்லை. சமீபத்தில் வெற்றியடைந்த படங்களின் கதையைப் பார்த்தால் பழசுதான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருந்திருக்கும்.
சில காலங்களுக்கு முன்பு, சிறு முதலீட்டில் வித்தியாசமான கதையைக் கூறினால் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். எப்போதுமே கமர்ஷியல் படத்தைத்தான் மக்கள் சந்தோஷமாக பார்ப்பார்கள். வாரத்துக்கு இரண்டு காமெடி, பேய்ப் படங்கள் வெளியாகித் தற்போது அந்தப் படங்களும் மக்களுக்கு போரடித்துவிட்டன. `பலூன்' படத்தில் காமெடி மிகவும் கம்மிதான். திகில்தான் அதிகம்.
‘பலூன்' வியாபாரியை முன்வைத்து ஒரு கதை எழுதலாம் என்று தோன்றிய விஷயம் எது?
எனக்குத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜன் நண்பர். ஒரு நாள் “சினிஷ்… ஒரு பேய்க் கதையை சின்ன பட்ஜெட்டில் எழுது” என்றார். “திகில் கதை ஒன்று உள்ளது” என்றேன். “சரி எழுதிட்டுச் சொல்லு” என்று வைத்துவிட்டார். உடனே 200 ஹாலிவுட் பேய்ப் படங்கள் பார்த்தேன். அதிலிருந்து தமிழ் மக்களுக்கு ஏற்றாற்போன்று ஒரு கதையை 20 நாட்களில் முழுமையாக எழுதிவிட்டேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திலீப் சுப்புராயன் மாஸ்டர் என்னுடைய நண்பர். அவர் மூலமாக ஜெய் சாரிடம் போய்க் கதையைச் சொன்னேன். கதையைச் சொல்லி முடித்தவுடன், “வேறு யாரிடமும் செல்லாதீர்கள். நானே இந்தப் படத்தை பண்றேன்” என்று தெரிவித்தார்.
`வேட்டை மன்னன்' படத்தில் பணிபுரிந்துள்ளீர்கள். இது மட்டுமே ஒரு படம் இயக்கப் போதும் என நினைக்கிறீர்களா?
படம் உருவாக்கும் விதம் பற்றிய அறிவும், காட்சி உணர்வும் இருந்தால் போதும், படம் இயக்கலாம். கமர்ஷியல் படம் இயக்க வேண்டும் என்றால் கொஞ்சம் தமிழ் சினிமாவை பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
`வேட்டை மன்னன்' படத்தில் பணிபுரிந்து திட்டு வாங்கியதுதான் அதிகம். அதற்கே எனக்கு ஒன்றரை ஆண்டுகள் ஆனது. அதற்குப் பிறகு ஒரு குறும்படம் இயக்கிக் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு ஒரு இரண்டரை ஆண்டுகள் ஆனது. நிறைய படங்கள் பார்க்கத் தொடங்கினேன். முக்கியமாக சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டது என்றால் பொறுமைதான். ஏனென்றால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, என்னிடம் அப்படியொரு குணமே கிடையாது.
- சினிஷ்
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தேன். அங்கு பணிபுரியும்போது எனக்கு சினிமா என்றால் என்னவென்று தெரியாது. படித்தது விஸ்காம். படிப்பு முடிந்தவுடன் 3 ஆண்டுகள் வரை ஊர்சுற்றிக்கொண்டுதான் இருந்தேன். பிறகு தொலைக்காட்சியில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன். எதுவும் கிடைக்காமல், வேலையின்றி வீட்டிலேயே இருந்தேன். எம்.பி.ஏ. படித்து முடித்து, வேலைக்குப் போக ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் எந்தவொரு லட்சியமுமின்றி வாழ்க்கை போரடிக்கத் தொடங்கியது.
அப்போது என்னுடன் விஸ்காம் படித்த நெல்சன் படம் தொடங்கினார். அவருடன் பணிபுரிவதற்காக என் வேலையை உதறிவிட்டு வந்துவிட்டேன். சினிமா மீதிருந்த ஆர்வத்தில் உள்ளே வந்து, எப்போது முழுமையாகத் தெரிய ஆரம்பித்ததோ அப்போது சினிமா மீது காதல் வர ஆரம்பித்தது. திரையுலகுக்கு வந்ததிலிருந்து இன்று வரைக்கும் என் மனைவி சம்பாதித்துக் கொடுக்கிறார். அவர் மட்டும் இல்லையென்றால் சினிமாவில் இவ்வளவு காலம் தாக்குப்பிடித்திருக்க மாட்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT