Published : 22 Jul 2016 11:07 AM
Last Updated : 22 Jul 2016 11:07 AM

கபாலி உருவான கதை

லிங்கா'வுக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டிருக்கின்றன. அதில் இயக்குநர் ரஞ்சித்தும் ஒருவர். “ரஞ்சித் எனக்கு நல்ல நண்பர். நானே பேசுறேன்” என்று செளந்தர்யா ரஜினிகாந்த் ரஞ்சித்திடம் பேசியிருக்கிறார். “நானே 'அட்டக்கத்தி', ‘மெட்ராஸ்' என 2 படங்கள் ரொம்ப யதார்த்தமாக பண்ணியிருக்கிறேன். ரஜினி சார் படமா!?” என்று பதிலளித்திருக்கிறார் ரஞ்சித். “எங்கள் குடும்பத்துக்கே 'மெட்ராஸ்' படம் ரொம்பப் பிடிக்கும். நீங்கள் அப்பாவுக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கிறார். அப்போது மலேசிய கேங்ஸ்டர் கதை மற்றும் சயின்ஸ் பிக் ஷன்

கதை என இரண்டு கதைகளை செளந்தர்யாவிடம் சொல்லியிருக்கிறார் ரஞ்சித்.

மலேசிய கேங்ஸ்டர் கதை செளந்தர்யாவுக்கு ரொம்பவும் பிடித்துவிடவே, “அப்பாவிடம் சொல்லிவிட்டு போன் பண்ணுகிறேன்’’ என்று அவர் கிளம்பிவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் “அப்பாவிடம் கதையைச் சொல்லிவிட்டேன். ரொம்பவும் பிடித்துவிட்டது. முழுமையாகத் தயார் செய்யுங்கள்” என்று கூற, ரஞ்சித்துக்கு பயங்கர ஷாக். அதனைத் தொடர்ந்து மலேசிய கேங்ஸ்டர் கதைக்குத் திரைக்கதை வடிவம் கொடுக்கத் தயாரானார். சில நாட்கள் கழித்து “அப்பா… கதை கேட்கணும்னு சொல்றார். எப்போ கேட்கலாம்” என்று கேட்டிருக்கிறார் செளந்தர்யா.

கதைக்கு முழு வடிவம் கொடுத்துவிட்டு, முதன்முறையாக ரஜினியை சந்தித்துக் கதையைச் சொல்லச் சென்றிருக்கிறார் ரஞ்சித். அப்போது 'மெட்ராஸ்' படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிலாகித்துப் பேசியிருக்கிறார் ரஜினி. அப்படியே 'கபாலி' கதையையும் சுமார் ஒன்றரை மணி நேரம் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். “சூப்பர். சான்சே இல்ல” என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி. வயதான கதாபாத்திரம், காட்சியமைப்பு, காட்சியமைப்பின் பின்புலம், குமுதவள்ளி கதாபாத்திரம் எனக் கதையில் பிடித்த விஷயங்களை எல்லாம் பேசினாலும், ‘‘இந்தப் படம் பண்றோம்’’ என்று ரஜினி சொல்லவே இல்லை.

சில மாதங்களுக்குப் பிறகு “அப்பாவின் படம் என்றாலே கொஞ்சம் காமெடி எல்லாம் இருந்தால் நல்லாயிருக்கும். உங்கள் கதையில் அதைச் சேர்க்க முடியுமா” என்று செளந்தர்யா கேட்க, “அதெல்லாம் எனக்கு வரவே வராது. அதை நான் சேர்த்தால் மொத்தமாகக் கதையின் தன்மை மாறிவிடும்” என்று ரஞ்சித் மறுத்திருக்கிறார். அன்று மாலை மறுபடியும் போன் செய்து ‘‘அப்பா உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்’’ என்றவுடன் பாண்டிச்சேரியில் இருந்ததால் அடுத்த நாள் ரஜினியை சந்தித்திருக்கிறார் ரஞ்சித். “வாங்க இயக்குநர் சார்.

நீங்கதான் அடுத்த படத்தின் இயக்குநர். தாணு சார்தான் தயாரிப்பாளர். போய்ப் பாருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார் ரஜினி. அதற்குப் பிறகு தாணுவை சந்தித்து அடுத்த கட்ட வேலைகளைத் தொடங்கி, தற்போது படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ரஞ்சித்.

முதலில் ரஜினியிடம் '‘கபாலி' படத்தின் முழுமையான திரைக்கதை, வசனம் அடங்கிய பெரிய தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். ‘ப்ளட் ஸ்டோன்' படத்துக்குப் பிறகு இப்போதுதான் இப்படி முழுமையாகப் படிக்கிறேன் என்று ஒரே நாளில் மொத்தத்தையும் படித்து முடித்திருக்கிறார் ரஜினி. அடுத்த நாள் ரஞ்சித்தை அழைத்து, இந்தக் காட்சிகளையெல்லாம் இப்படி நடித்தால் எப்படியிருக்கும் என்று நடித்துக்காட்ட, ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார் ரஞ்சித்.

இந்தப் படத்தில் ரஜினியைத் தவிர மற்ற நடிகர்கள் பயிற்சி கொடுத்திருக்கிறார் ரஞ்சித். அனைவரையும் மலேசியாவில் உள்ள தமிழர்கள் எப்படிப் பேசுவார்கள், எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை மலாய் மொழிப் படங்களைத் திரையிட்டுக் காட்டித் தெரிந்துகொள்ளச் செய்திருக்கிறார். இந்தப் பயிற்சி சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றிருக்கிறது. மொத்தம் சுமார் 110 நாட்கள் கால்ஷீட் தேதிகள் கொடுத்து நடித்து முடித்திருக்கிறார் ரஜினி.

இதுதான் கபாலி உருவான கதை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x