Published : 30 Jun 2017 10:09 AM
Last Updated : 30 Jun 2017 10:09 AM

திரைக்கதை எழுத திரைப்படங்களே கருவூலம்! - இயக்குநர் அருண் வைத்யநாதன் நேர்காணல்

“அர்ஜுன் சாருடைய 150-வது படம் ‘நிபுணன்’. ஒரு நல்ல மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும். கதை பிடித்திருந்ததால் பிரசன்னா, வைபவ், வரலெட்சுமி எனப் பலரும் படத்துக்குள் வந்தார்கள். படம் பார்ப்பவர்களுக்கு வகுப்பு எடுப்பதுபோல எந்தக் காட்சியும் இருக்காது. போகிறபோக்கில் சில விஷயங்களைத் தொட்டிருக்கிறோம்” என்று வெள்ளைத் தாடியை வருடிச் சிரிக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன். ‘அச்சமுண்டு... அச்சமுண்டு’ மோகன்லால் நடித்த ‘பெருச்சாளி’ என்ற மலையாளப் படத்தையும் இயக்கியவர், தற்போது ‘நிபுணனுடன்’ மீண்டும் வந்திருக்கிறார்.

‘நிபுணன்’ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கே...

‘நிபுணன்’ என்றாலே ஒரு விஷயத்தில் திறமை வாய்ந்தவன் என்று அர்த்தம். இப்படத்தில் அர்ஜுன் சார் ஒரு துப்பறியும் நிபுணர். “இதனால் இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற குறளுக்குப் பொருத்தமான கதாபாத்திரம் அவருடையது.

கொலைக் குற்றங்களைத் துப்பறியும் படங்கள் தமிழுக்கு புதிதில்லையே... இதில் என்ன வித்தியாசம்?

இப்படத்தில் துப்பறியும் நிபுணருக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அர்ஜுன் சாருடைய அணியில் இருப்பவர்கள் நண்பர்கள். இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் வேலை ஒவ்வொருத்தருடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. க்ரைம் த்ரில்லராக மட்டுமே படம் இருக்காது. நிபுணன் என்பதால் அவருடைய வாழ்க்கையில் சறுக்கல்களே இருக்காது என்று சொல்ல முடியாது. குடும்பப் பிரச்சினைகள் இருக்கும், அதையெல்லாம் மீறி எப்படி ஜெயிக்கிறார் என்பதைக் காட்டியுள்ளேன்.

அர்ஜுனைக் கதையின் நாயகனாக முடிவு செய்ய என்ன காரணம்?

கதை மட்டுமே நடிகர்களைத் தேர்வுசெய்கிறது. நடிகர்களுக்காக நான் இதுவரை கதை செய்ததில்லை. அப்படிச் செய்வது தவறு என்று சொல்ல மாட்டேன், ஆனால் நான் செய்ததில்லை. படம் வெளியானவுடன் இதை அர்ஜுன் சார் மட்டுமே செய்திருக்க முடியும் என்று ரசிகர்கள் சொல்வார்கள். இந்தக் கதைக்கு அர்ஜுன் வேண்டும் என்று கதை மட்டுமே தேர்வு செய்தது. ஸ்டைலிஷான போலீஸ், உடல் தகுதி இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். காவல்துறைக்கான உடல்வாகோடு ரொம்ப யதார்த்தமாகச் செய்திருக்கிறார் அர்ஜுன் சார்.

இப்படத்தின் கதைக்களத்தை ஏதேனும் உண்மைச் சம்பவத்தின் பாதிப்பில் எழுதினீர்களா?

நிறையப் பேரைச் சந்தித்துப் பேசினேன். துப்பறியும் நிபுணர்கள் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன்; படங்கள் பார்த்தேன். இங்குள்ள துப்பறியும் நிபுணர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள பெங்களூருவில் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். நிஜவாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு படித்தது, பார்த்தது எல்லாவற்றையும் சேர்த்து எழுதும்போது ஒரு முழுமையான கதை கிடைத்தது. திரைப்படங்கள் எடுப்பதற்குத் திரைப்படங்களே ஒரு ஆராய்ச்சிக் கருவூலமாக இருக்கின்றன.

மலையாளத்தில் நீங்கள் இயக்கிய ‘பெருச்சாளி’ படத்தைத் கமலை வைத்து தமிழில் மறுஆக்கம் செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியானதே. உண்மையா?

கமல் சாருக்கும் அக்கதை தெரியும். ‘பெருச்சாளி’ கதையை எழுதும்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் கோமாளிக் கூத்துகளை வைத்துத்தான் யோசித்தேன். அக்கதை தமிழக மக்களுக்கு இன்னும் நெருக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. பெரிய விஷயங்களை நகைச்சுவையாகச் சொல்லும்போது இன்னும் மக்களிடையே போய்ச் சேரும். அக்கதையை அப்படியே தமிழில் செய்தால், எந்த மாதிரியான எதிர்வினைகள் இருக்கும் எனத் தெரியவில்லை. இப்போது அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருப்பதால், இன்னும் மக்களிடையே அப்படம் எடுபடும் என்று நம்புகிறேன்.

தயாரிப்பாளராகவும் இருக்கிறீர்கள். அதன் அனுபவம் எப்படியிருக்கிறது?

திரைப்படத் துறையிலே மிகவும் சபிக்கப்பட்டவர்கள் தயாரிப்பாளர்கள்தான். இங்குத் தயாரிப்பாளர்களுக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை. அப்பா - அம்மா என எடுத்துக்கொண்டால் அம்மா - இயக்குநர், அப்பா - தயாரிப்பாளர். அப்பா எப்போதுமே பணத்தைச் செலவழிப்பதில் கட்டுப்பாட்டுடன் அறிவுரை சொல்வார். ஆனால், அம்மா அன்புடன் இருப்பார். இந்த இருவருமே கலந்தால் மட்டுமே மகன் என்ற நல்லதொரு படம் உருவாகும். என்னுடைய தயாரிப்பாளர்களில் யாராவது ஒருவர் ஆலோசனை கூறினால், நியாயமாக இருக்கும் பட்சத்தில் உடனே ஏற்றுக்கொள்வேன். நான் இதுவரை தயாரித்த படங்கள் அனைத்திலுமே நல்ல தயாரிப்பாளராக இருந்து, இயக்குநரைப் பாதுகாத்தேன். அதுதான் தயாரிப்பாளராக என்னுடைய வேலை. வணிகரீதியாக அனைத்துத் தயாரிப்பாளர்களுமே போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். முதலீடு செய்த பணத்தைத் திரும்பி எடுக்கக்கூடிய தொழில்தான் சினிமா. லாபமோ நஷ்டமோ படத்துக்குப் படம் வேறுபடலாம். 100 ரூபாய் போட்டு அதில் 5 ரூபாய் மட்டுமே திரும்ப வரக்கூடிய அளவுக்கு மோசமான தொழில் கிடையாது. ஒரு படத்தை அது கோரும் முதலீட்டுக்குள் தயாரித்து முடித்துவிட்டால் கண்டிப்பாகப் போட்ட பணத்தைத் திரும்ப எடுக்கலாம். எங்கு பிரச்சினை என்றால் 50 நாட்கள் எனத் திட்டமிட்டு 100 நாட்கள் படப்பிடிப்பு செய்வது, ரூ.10 கோடி முதலீடு என்று திட்டமிட்டு ரூ.40 கோடிக்குப் படம் எடுப்பது உள்ளிட்ட விஷயங்களில்தான் சிக்கலே.

இயக்குநர் அருண் வைத்யநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x