Published : 05 May 2017 11:02 AM
Last Updated : 05 May 2017 11:02 AM
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பெருமளவு அதை நிறைவேற்றியும்விட்ட பாகுபலி 2 படம் பெரும் வசூலையும் கண்டிருக்கிறது. பரவலான பாராட்டுக்களோடு கடுமையான சில விமர்சனங்களையும் அது எதிர்கொண்டுள்ளது. விமர்சனங்கள் பலவும் படத்தின் தர்க்கப் பிழைகள், நம்ப முடியாத காட்சிகள், மானுட சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட தனிமனித சாகசங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன. பாத்திர வார்ப்பிலும் திரைக்கதைப் போக்கிலும் உள்ள சில பிழைகளும் சுட்டிக்காட்டுடப்படுகின்றன.
முதலீடு, இரண்டு பாகங்களில் ஒரு கதையைச் சொல்வது, பிரமிக்கவைக்கும் காட்சி அமைப்புகள், அதிகபட்சமான திரையரங்குகளில் வெளியீடு, பெருமளவிலான வசூல் எனப் பல விதங்களில் இந்தியத் திரைபப்டங்களின் எல்லைகளை பாகுபலி விரிவுபடுத்தியிருக்கிறது. திரையரங்கள் கொண்டாட்டக் களமாக மாறியிருக்கின்றன.
இவ்வளவு பெருமைகளைப் பெறும் இந்தப் படம் குறைகளுக்கு அப்பாற்பட்டதா என்றால் இல்லை. மக்கள் ரசிக்கிறார்கள் என்பதற்காகக் குறைகளைப் பற்றிப் பேசக் கூடாதா என்றால் அதுவும் இல்லை.
வெளிப்படையான பல குறைகளைக் கொண்ட படம்தான் இது. முதல் பாகத்தில் பாகுபலி மலைகளையும் அருவியையும் தாண்டிச் செல்லும் காட்சிகள் அம்புலிமாமா கதைகளைப் படிக்கும் மனநிலையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளத் தக்கவை. பாகுபலியும் பல்வாள்தேவனும் சண்டையிடும் காட்சி சூப்பர் ஹீரோ படங்களை வெட்கமுறச் செய்யக்கூடியவை. நீண்ட நெடிய சண்டைக் காட்சி அலுப்பையும் ஏற்படுத்துகிறது. நூற்றுக்கணக்கனவர்கள் இழுத்துச் செல்லும் மாபெரும் சிலையை ஒண்டு ஆளாகத் தூக்கி நிறுத்துவது மிகை என்னும் சொல்லையே சிறுமைப்படுத்துகிறது. காளகேயர்களுடனான சண்டையின்போது பயன்படுத்தப்பட்ட யுத்த வியூகங்கள் ஒப்பீட்டளவில் வலுவானவை. இரண்டாம் பாகத்தில் அப்படிப்பட்ட காட்சி எதையும் காணவில்லை. ராஜமாதாவைக் கொன்றுவிடலாம் என பிங்களத்தேவன் சொல்வதை அறியும் ராஜ விசுவாசி கட்டப்பா அதை ராஜமாதாவிடம் சொல்வதே இல்லை.
நம்ப முடியாத மிகைப்படுத்தல்கள், அதீதமான சாகசங்கள், திரைக்கதை ஓட்டைகள், வலுவற்ற காட்சிகள் ஆகியவற்றைக் காட்டிலும் முக்கியமான குறைகள் சில பாகுபலியில் உள்ளன. அது பாத்திர வார்ப்பு தொடர்பானது. பல்வாள்தேவனின் தோற்றமும் நடிப்பும் பொருத்தமாக இருந்தாலும் அவனுடைய குணம் தட்டையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. முதலில் மதியூகியாகவும் சமநிலை கொண்ட ஆட்சியாளராகவும் இருந்த ராஜமாதா சிவகாமி அதன் பிறகு உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கிறார். எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவுகளை எடுக்கிறார். இந்தக் குறைகளை மீறிப் படம் எப்படி இத்தனை வரவேற்பைப் பெறுகிறது?
மிகைப்படுத்தல்: வணிக சினிமாவின் இயல்பு
மிகைப்படுத்தல் ஒரு குறை என்றால் கிட்டத்தட்ட எந்த வணிகப் படமும் இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. நாயகன் ரயிலைப் பின்னால் தள்ளும் சாகசங்களை எல்லாம் பார்த்து வளர்ந்த ரசிகர்களுக்கு, வயிற்றில் கத்திக்குத்து வாங்கிய பிறகு 50 பேரைப் புரட்டி எடுக்கும் நாயகர்களைப் பார்த்தவர்களுக்கு, இதெல்லாம் பெரிதாகத் தெரியாது. இயக்குநர் ஷங்கரின் ‘அன்னியன்’ படத்தில் அன்னியனாக மாறும் அம்பி வீர சாகசங்கள் புரிவான். உள்ளார்ந்த உத்வேகத்தினால் சாதாரண மனிதனின் பலம் கூடுவது சாத்தியம்தான். எனவே நான்கைந்து பேரை அடித்துப்போடுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், முறையாகத் தற்காப்புக் கலையைக் கற்ற நூற்றுக்கணக்கான நபர்களை ஒண்டி ஆளாக அடிப்பது சாத்தியமே இல்லை. அம்பி அன்னியனாக மாறுவதற்கு பதில் அங்கே அனுமானாக மாறிவிடுகிறான். யாருமே இதுபற்றிப் பெரிதாகக் கேள்வி எழுப்பவில்லை.
இந்தியாவே கொண்டாடிய ‘லகான்’ படத்தில் நாயகன் ஆங்கிலேய கிரிக்கெட் அணியைத் தோற்கடிப்பதற்காக ஓர் அணியைத் தயார்செய்வான். அந்த விதத்தில் ஒரு அணியைத் தயார் செய்யவே முடியாது என்பதையும் அப்படிப்பட்ட ஓர் அணியால் தொழில்முறை அணியைத் தோற்கடிக்கவே இயலாது என்பதையும் ஆட்டத்தின் அரிச்சுவடி தெரிந்தவர்களும் அறிவார்கள். ஆனால், எளியவர்களுக்கும் வலியவர்களுக்கும் நடக்கும் மோதலில் எளியவர்கள் வெல்வதை விரும்பும் பொதுப்புத்தியின் எதிர்பார்ப்புக்கு அந்தப் படம் வடிவம் கொடுத்தது. சிங்கத்தை எதிர்த்து நிற்கும் முயலின் வெற்றியை விரும்புவதுபோல இந்தியர்களின் அணி வெல்வதை ரசிகர்கள் விரும்புவார்கள். அதில் இந்திய – பிரிட்டிஷ் மோதல் என்னும் பேரரசியலும் நன்கு பயன்படுத்தப்பட்டிருந்தது. எனவே குறைகள் பொருட்படுத்தப்படவில்லை. இப்படிப் பல படங்களை உதாரணம் காட்டலாம்.
குறைகளை மீறி ஒரு படம் ரசிகர்களுக்குப் பிடிக்க என்ன காரணம்? படத்தின் பலவீனங்களை அவர்களால் உணர இயலாது என்று சொல்லிவிட முடியாது. பொதுவாகவே, திரையரங்குகளில் ரசிகர்கள் எழுப்பும் சில கேள்விகள் பல விமர்சகர்களாலும் எழுப்பப்படுவதில்லை. நுட்பமான சில குறைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். பாத்திர வார்ப்பின் சறுக்கல்களை உணராமல் இருக்கலாம். ஆனால், சாதாரண ரசிகர் எனப் பொதுவாகக் கருதப்படுபவரும் பல குறைகளை உணர்ந்தே இருக்கிறார். ஆனால், நட்சத்திரங்களின் மீது இருக்கும் ஈர்ப்பு, படமாக்கப்பட்ட விதம், நகைச்சுவை, இசை, விறுவிறுப்பு, காட்சி இன்பம், உள்ளிட்ட காரணங்களில் ஒரு சில காரணங்கள் வலுவாக இருந்தால் குறைகள் பொருட்படுத்தப்படுவதில்லை. லகான் ஒரு உதாரணம்.
குறைகளைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பாகுபலியில் இதுபோன்ற சில காரணங்கள் வலுவாக உள்ளன. படம் பார்க்கும் ரசிகர்களை மிகைப்படுத்தப்பட்ட பாத்திரங்களும் காட்சிகளும் கொண்ட படத்தைப் பார்ப்பதற்கான மனநிலையை இயக்குநர் தயார்ப்படுத்திவிடுகிறார். முதல் காட்சியில் நீரில் மூழ்கும் ராஜமாதாவின் கையில் படுத்திருக்கும் குழந்தையைக் காட்டும்போதே மனம் மிகையான காட்சிகளுக்குத் தயாராகிவிடுகிறது. சிவலிங்கத்தைத் தூக்கும் காட்சியும் அத்தகையதே. திரைக்கதை முடிச்சுகள், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள், விறுவிறுப்பான கதையோட்டம், பிரமிக்கவைக்கும் காட்சிகள், மனதை மயக்கும் அழகிய காட்சிகள் ஆகியவை பாகுபலிக்குச் சாதகமாக இருக்கின்றன.
காவியத்தின் சாயல்
இவற்றைத் தாண்டிய இன்னொரு காரணமும் இருக்கிறது. அது படத்தின் காவியத் தன்மை. சாதாரண ராஜா ராணிக் கதையான ‘மன்னாதி மன்னன்’ படத்தில் வரும் ‘நீயோ நானோ யார் நிலவே’ என்னும் பாடலில் சிலப்பதிகாரத்தின் சில வரிகளை எடுத்தாண்டிருப்பார் கண்ணதாசன். அந்தப் பாடலும் அதற்கான தருணமும் அது படமாக்கப்பட்ட விதமும் அந்தக் காட்சிக்கு ஒரு காவியத்தன்மையை அளித்துவிடும். அதுபோலவே பாகுபலியில் காவியத்தன்மையை அழகாகச் சேர்த்திருக்கிறார் ராஜமவுலி. குறிப்பாக, மகாபாரதத்தின் சாயலைப் படமெங்கும் படரவிட்டிருக்கிறார்.
உடல் வலிமையை முன்னிறுத்தும் பாகுபலி பாத்திரத்திற்கான முன்மாதிரியை பீமசேனனிடம் துல்லியமாகக் காணலாம். பெரிய சிலையைத் தூக்குவது. தேரைத் தூக்கி வீசுவது, மரத்தைப் பிடுங்கி அடிப்பது ஆகிய எல்லாமே பீமனின் புஜ பலத்தை (பாகு என்றால் தோள் என்று பொருள்) பிரதிபலிப்பவை. கடைசிக் காட்சியில் பாகுபலியும் பல்வாள்தேவனும் மோதுவது பீமனும் துரியோதனனும் அல்லது பீமனும் ஜராசந்தனும் மோதுவதை நினைவுபடுத்தலாம். பாகுபலி வில்லை எடுக்கும்போது அவன் அர்ஜுனனாகிவிடுகிறான். பல்வாள்தேவன் கர்ணனாகிவிடுகிறான்.
வரலாற்றில் இடம்பெற்ற எந்த மன்னனின் கதையையும் இந்தப் படம் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. கதையின் ஆதார முடிச்சும் மகாபாரதத்தை அடியொற்றியே அமைந்துள்ளது. உடலில் குறை இருப்பதால் அரச பதவியை இழந்த திருதராஷ்டிரன், அவனுக்குப் பதில் அரசனான அவன் தம்பி பாண்டு, பாண்டுவுக்குப் பின் பாண்டுவின் மைந்தன் தருமனுக்கு இளவரசுப் பட்டம் என்ற கதைப் போக்கை, பிங்கலத் தேவன் இழந்த ராஜ்ஜியம் அவன் தம்பியின் மகனுக்குச் செல்வதில் காணலாம். சித்தப்பாவின் மகனுக்குப் பட்டம் சூட்டுவதை எண்ணி பல்வாள்தேவனுக்கு எழும் நியாயமான பொறுமலை துரியோதனின் ஆற்றாமையோடு ஒப்பிடலாம். பிங்கலத்தேவனின் பாத்திரத்தில் திருதராஷ்டிரனின் அடையாளத்தை மட்டுமின்றி, சகுனியின் நிழலையும் காணலாம். விதுரன், பீஷ்மர் ஆகியோரின் கலவையாகக் கட்டப்பாவை அடையாளம் காணலாம்.
பாஞ்சாலியை மணக்க விரும்பி சுயம்வரம் சென்ற துரியோதனனுக்குப் பாஞ்சாலி கிடைக்கவில்லை. அவள் அர்ஜுனனைக் கரம் பிடிக்கிறாள். திருமணத்துக்குப் பிறகு அவள் சபைக்கு இழுத்துவரப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். இவை அனைத்தின் சாயலையும் தேவசேனாவின் பாத்திரத்தில், அவள் பெறும் அனுபவங்களில் காணலாம். ராஜமாதாவை எதிர்த்து தேவசேனா கேட்கும் கேள்வி கௌரவர் சபையில் பெரியவர்களைப் பார்த்து திரௌபதி கேட்கும் கேள்வியைப் போன்றது. மகாபாரதத்தில் திரௌபதியின் அவமானம் அரங்கேறுகிறது. இங்கு ராஜமவுலி கதையை மாற்றுகிறார். பாண்டவர்கள் செய்யத் தவறியதை அவர் பாகுபலியின் மூலம் செய்துகாட்டுகிறார். பாண்டவர்கள் வனவாசம் போவதுபோலவே பாகுபலியும் தேவசேனாவும் கோட்டையை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.
மகாபாரதத்தின் நிழல் பிற இடங்களிலும் படர்கிறது. இந்திரப் பிரஸ்தத்தில் பாண்டவர் ஆட்சி நடக்கும் சமயத்தில் அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செல்கிறான். அந்தப் பயணத்தில் சுபத்திரையை மணக்கிறான். குந்தள நாட்டின் யுவராணியிடம் பாகுபலி மனதைப் பறிகொடுக்கிறான். குந்தள நாட்டில் பாகுபலி அசடனாக, வீரமோ வலிமையோ அற்ற சாமானியனாக நடிக்கிறான். அஞ்ஞாத வாசத்தின்போது பீமன் சமையல்காரனாகவும் அர்ஜுனன் நடனம் சொல்லித்தரும் பெண்ணாகவும் நடிக்கிறார்கள். சமயம் வரும்போது அவர்கள் வீரம் வெளிப்படும். கீசகனால் பாஞ்சாலிக்கு ஆபத்து வரும்போது பீமன் சீறி எழுவான். கௌரவர் படை விராட நகரை முற்றுகை இடும்போது பெண்ணுருவிலிக்கும் அர்ஜுனனின் வீரம் வெளிப்படும். பாகுபலியின் வீரமும் தக்க தருணத்தில் வெளிப்படும். அர்ஜுனன் விராட மன்னனின் மகன் உத்தரனை வீரனாக்குகிறான். பாகுபலி குமாரவர்மனுக்கு வீரமூட்டுகிறான்.
மகாபாரதத்தின் நேரடிப் பிரதிபலிப்புகள் பல இருக்க, சற்றே மாறுபட்ட பிரதிபலிப்புகளும் பாகுபலியில் காணக் கிடைக்கின்றன. கட்டப்பாவால் முதுகில் குத்தப்பட்டு வீழ்ந்து கிடக்கும் பாகுபலியைப் பார்த்து கட்டப்பா கண்ணீர் விடுவார். பாகுபலி அவர் மீது துளியும் கோபம் இன்றிச் சிரிப்பான். சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்தும் அர்ஜுனன் உடல் முழுவதும் அம்புகள் தைத்துப் படுத்திருக்கும் பீஷ்மரைப் பார்த்துக் கண்ணீர் விடுவான். பீஷ்மர் புன்சிரிப்புடன் அவனை ஆசீர்வதிப்பார்.
இந்திய மனங்களில் இதிகாசங்கள்
மகாபாரதமும் ராமாயணமும் இந்தியர்களின் மனங்களில் ஆழப் பதிந்தவை. இவ்விரு கதைகளையும் சரிவர அறியாதவர்களுக்கும் அவற்றின் அடிப்படையான கதைப் போக்கும் பாத்திர அடையாளங்களும் தெரியும். அண்மைக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகப் பரவலான மக்கள் இந்த இதிகாசங்களை ஓரளவு விரிவாகவே அறிந்துகொண்டிருக்கிறார்கள். ஏகபத்தினி விரதத்துக்கு ராமன், நெருப்பைப் போன்ற தூய்மைக்கு சீதை, வில்லுக்கு விஜயன், வலிமைக்கு பீமன், வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கோபத்துக்குப் பாஞ்சாலி, பொறுமைக்கு தருமன், அடையாள மறுப்பின் வேதனைக்குக் கர்ணன், முதுமையின் கம்பீரத்துக்கு பீஷ்மர், தந்திரத்துக்கு சகுனி, சகலமும் அறிந்த ஞானிக்கு கிருஷ்ணன் முதலான படிமங்கள் இந்திய மனங்களில் ஊறியவை. இந்தப் படிமங்களை வலுவான முறையில் நினைவுபடுத்தும்போது அவை இந்தியப் பார்வையாளர்களைக் கவர்ந்துவிடுவது இயல்பானதே (உதாரணம் மணி ரத்னத்தின் தளபதி). வலுவற்ற முறையில் பயன்படுத்தப்படும்போது இதே படிமங்கள் பார்வையாளர்களைக் கவரத் தவறுகின்றன (உதாரணம் மணி ரத்னத்தின் ராவணன்).
பாகுபலி ராஜா ராணிக் கதையாக இருந்தாலும் அதன் வேர்களும் கிளைகளும் இதிகாச உணர்வில் ஊறியவை. வணிகப் படங்களில் சகல விதமான மிகைப்படுத்தல்களுக்கும் பழக்கப்பட்டுவிட்ட இந்திய ரசிகர்கள், இதிகாசத் தன்மை கொண்ட வணிகப் படத்துக்கு மேலும் பல மடங்கு சலுகை தந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு தனி மனிதனால் இது முடியுமா என்னும் கேள்வியை எம்.ஜி.ஆர்., ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், அஜித், மகேஷ் பாபு, ஆமீர் கான், சல்மான் கான் எனப் பலரை முன்னிட்டும் கேட்கலாம். “ஒண்டி ஆளாக இத்தனை பேரை அடிக்கிறீர்களே, இது நம்பக்கூடியதுதானா?” என்று எம்ஜிஆரிடம் ஒரு முறை நிருபர் ஒருவர் கேட்டார். “அபிமன்யு ஒற்றை ஆளாகப் பகைவர்களை எதிர்த்து நின்றதை நம்புகிறீர்கள் அல்லவா?” என்று எம்ஜிஆர் திருப்பிக் கேட்டார். என்னை அபிமன்யுவாகவோ அர்ஜுனனாகவோ பார்த்துடுவிட்டுப் போங்களேன் என்பதே எம்ஜிஆர் சொன்ன சேதி. ரசிகர்கள் அவரை அப்படித்தான் பார்த்தார்கள்.
எம்.ஜி.ஆர். காலத்துடன் ஒப்பிட்டால் திரையில் நாயகனின் சாகச பிம்பம் இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது. பாகுபலி அதை மேலும் கூட்டியிருக்கிறது. ரஜினி முதலான நாயகர்களின் திரை சாகசங்களை ஏற்றுக்கொண்ட ரசிகர்களின் மனத் தயார்நிலையை ராஜமவுலி மேலும் விஸ்தரிக்கிறார். தன் கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் இதிகாசச் சாயலைத் தந்து அந்த ஏற்பை முழுமைப்படுத்திவிடுகிறார். திரையில் வரும் ஒருவன் பீமனைப் பொருத்தமான முறையில் நினைவுபடுத்திவிட்டான் என்றால் பிறகு அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாமே.
உணர்வு ரீதியாக ரசிகர்களை இப்படிக் கட்டிப்போடும் ராஜமவுலி, அடுக்கடுக்கான திருப்பங்கள் மூலம் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி, அவர்களுடைய கவனத்தைத் தக்கவைத்துக்கொள்கிறார். வியக்கவைக்கும் காட்சிப் படிமங்கள், அழகும் ரசனையும் ததும்பும் காதல் காட்சிகள் ஆகியவற்றின் மூலம் அவர்கள் கண்களைத் திரையிலிருந்து விலகாமல் பார்த்துக்கொள்கிறார். இவை அனைத்தும் சேர்ந்து சாத்தியப்படுத்தும் அனுபவம் அலாதியானதாகப் பார்வையாளர்கள் மனங்களில் தங்கிவிடுகிறது. இதுவே ராஜமவுலி என்னும் படைப்பாளியின் வெற்றியின் ரகசியம்.
பாகுபலி குறைகள் அற்ற படைப்பு அல்ல. ஆனால், வெகுமக்கள் ரசனையையும் அவர்கள் ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் காவிய நினைவுகளையும் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டதாலேயே வெற்றிபெற்ற படம்.
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT