Published : 15 Jul 2016 11:11 AM
Last Updated : 15 Jul 2016 11:11 AM
திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிக்கரையில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான இறுதிப் பிரச்சாரக் காட்சியுடன் ‘ஒழிவுதிவசத்தே களி’ (விடுமுறைநாளின் விளையாட்டு) மலையாளப் படம் தொடங்குகிறது. இதே பெயரில் ஆயிரத்து சொச்சம் சொற்களுக்குள் உண்ணி.ஆர் எழுதிய கதையைத்தான் முழுநீளப் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சனல் குமார் சசிதரன்.
நான்கு நண்பர்களின் விடுமுறைக் களியாட்டம்தான் இந்தக் கதையின் மையம். குறிப்பிட்ட ஒரு ஹோட்டல் அறையில் கூடும் நண்பர்களின் களியாட்டம் மூலம் நமது சமூக அமைப்பை, மனத்தில் ஒளிந்துள்ள வக்கிரங்களை, வன்முறையை இந்தச் சிறுகதையில் சித்திரித்துள்ளார் உண்ணி.
சிறுகதை முதல் வார்த்தையிலேயே தொடங்கிவிடுகிறது. கதாபாத்திரங்கள் நான்கு மட்டுமே. ஆனால் திரைப்படத்தில் ஒரு பெண்ணுடன் சேர்த்து இன்னும் ஐந்து கதாபாத்திரங்கள். இந்த ஒன்பது பேரில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கோழியும் உண்டு. படம் தொடங்கிச் சில காட்சிகளில் கோழி தூக்கிலிட்டுக் கொல்லப்படுகிறது.
இடைத் தேர்தல் விடுமுறையைக் கொண்டாட நண்பர்கள் ஐவர் காட்டுக்குள் ஒற்றையாய் இருக்கும் விடுதிக்குச் செல்கிறார்கள். இந்த ஐந்து கதாபாத்திரங்களும் சமூக நிலையில் பேதம் கொண்டவை. வர்க்க நிலையிலும் பேதம் உண்டு. ஆனால் இந்தப் பாகுபாடுகளை மீறிக் களி அவர்களைச் சேர்த்துவைக்கிறது. ஐந்து கதாபாத்திரங்களும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் களிக்கு உள்ளே இருக்கிறார்கள். விடுதி வாட்ச்மேனும் அங்கு சமைத்துப் போட வரும் கீதாவும் களிக்கு வெளியே இருக்கிறார்கள்.
இந்தப் படத்துக்குத் திரைக்கதை திட்டமாக உருவாக்கப்படவில்லை எனச் சொல்கிறார் சனல். அவர் சொல்வதுபோல் கதாபாத்திரங்கள் தன் போக்கில் அலைகின்றன. ஐந்து நண்பர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல்தான் பேசுகின்றன.
இந்தப் படத்தை இயல்பானதாக சிருஷ்டிக்க ஷாட்களை நுட்பமாகப் பயன்படுத்தி யிருக்கிறார் சனல். பார்வை யாளர்களை நோக்கி நின்றுகொண்டு கதாபாத்திரங்கள் வசனம் பேசும் காட்சிகள் இதில் இல்லை. நமக்கு முன்னால் ஒரு நண்பர் கூட்டம் அரட்டை அடிப்பதைப் பார்க்கும் கோணத்தில்தான் பெரும்பாலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் இரண்டாவது பாதியில் இரு ஷாட்களுக்குப் பிறகு படத்தின் இறுதிவரை 52 நிமிடங்களை ஒரே ஷாட்டில் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஓரிரு இடங்கள் தவிர முழுக்க முழுக்கக் காட்சியில் பதிவான சப்தங்களே பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களால் மொத்தப் படமும் நமக்கு முன்னால் நிகழும் ஒரு சம்பவத்தைப் போல் உயிர்ப்புடன் இருக்கிறது.
வக்கிரங்களை வெளிப்படுத்தும் களிக்கு, குற்றங்களை உருவாக்கிவிடும் சாத்தியமும் உண்டு. இந்தக் கோணத்தையும் படம் சொல்கிறது. தேர்தல் விடுமுறை நாளின் களிகளில் ஒன்றாக நம் ஜனநாயகம் இருப்பதையும் படம் உணர்த்துகிறது.
மனிதர்கள் அரவமற்ற காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடம்போல் இருக்கும் விடுதிதான் கதைக் களம். சமைப்பதற்காகக் கொண்டுவரும் கோழி பிடியிலிருந்து தப்பி ஓட, அதை விரட்டிப் பிடிப்பது அங்கு நடக்கும் முதல் களி. அடுத்ததாகக் கோழியை யார் கொல்வது என்பது. கீதாவை மையமாக்கி நண்பர்கள் மூவருக்கு இடையில் வேறொரு களியும் நடக்கிறது.
கீதா காட்சியிலிருந்து விடைபெற்ற பிறகு பல்வேறு சமூகப் பின்புலங்கள் கொண்ட நண்பர்களுக்குள் தர்க்கமாகக் களி திசை மாறுகிறது. இந்தச் சமயத்தில் வெளியே தேர்தல் நாளின் மழையும் வலுக்கிறது. இதற்கிடையில் அரசியல் ஆர்வமுள்ள கறுப்பு நிறம்கொண்ட தாசன் தேர்தல் குறித்து அறியத் தொலைக்காட்சியை இயக்குகிறான். அவனது பெயரே அவனுடைய சமூக, வர்க்க நிலையை உணர்த்திவிடுகிறது. சிறு சிறு பணிகளுக்கும் இவன்தான் ஏவப்படுகிறான். மற்றவர்களுக்கு அரசியல் ரசமில்லாத காரியமாக இருக்கிறது. அதனால் தாசன் கிண்டலுக்குள்ளாகிறான். ஒரு தர்க்கம் சமாதானமாக, வேறொன்று தொடங்குகிறது.
அதனால் அவற்றை விட்டுவிட்டு திருடன் போலீஸ் விளையாடலாம் என முடிவெடுக்கிறார்கள். ஒளிந்து விளையாடும் திருடன் போலீஸ் அல்ல இது. மேலும் திருடன் என்றால் திருடுபவனும் அல்ல; தேசத் துரோகி. இந்த வினோத விளையாட்டு நம் நீதியமைப்பையும், அரசமைப்பையும் கிண்டலுக்கு உள்ளாக்குகிறது.
ஆனால் நண்பர்களுக்குள்ளிருக்கும் வர்க்க, ஜாதி பேதம் வெளியே குதிக்கும்போது நீதியமைப்பையும் அரசமைப்பையும் ஒருசாரார் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கிறார்கள். ஜனநாயகத்தையும் தூக்கிலிட்டுக் களியாட்டம் போடுகிறார்கள். தொடக்கக் காட்சியில் தூக்கிலிடப்பட்ட கோழியைப் போல ஜனநாயகமும் படபடத்து அடங்குகிறது.
சனல் குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT