Published : 17 Jun 2016 11:56 AM
Last Updated : 17 Jun 2016 11:56 AM
விஜய் பிறந்தநாள் ஜூன் 22
தமிழ்த் திரையுலகின் அனைத்துத் தரப்பிலும் முதன்மையான நாயகனாக வலம் வருபவர்களில் ஒருவர் விஜய். சமீபத்தில் வெளியான ‘தெறி’ அவரது படங்களில் ஆகப்பெரிய வசூல் சாதனை செய்திருப்பதாகத் தெரிவிக்கின்றன பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள். ஆனால் தாமொரு வசூல் நாயகன் என்ற பரபரப்பைக் காட்டிக்கொள்ளாமல் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திவருகிறார் விஜய்.
வளர்ச்சியின் பாதையும் வீக்கமும்
விஜய்யின் ஆரம்ப காலப் படங்கள் வெளியானபோது, அவற்றின் உள்ளடக்கத் தரம் பற்றிப் பலரும் விமர்சித்தார்கள். ஆனால் விஜய் போராடியே தனக்கான இடத்தை எட்டவேண்டியிருந்தது என்கிறார்கள் அவர் சினிமாவில் நுழைந்தது முதல் அருகிலிருந்து கண்டுவரும் பலர்.
‘திருமலை’ என்ற படம் அவருக்கு வணிக சினிமா பாதையைக் காட்ட, அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க அதே பாதையே தனது பாதை என்று அதன் வழியில் செல்ல ஆரம்பித்தார். இப்போதும் தனது படங்களைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றி விஜய் கவலைப்படுவதில்லை. போட்ட முதலீடு வந்துவிட்டதா, ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்களா, அது போதும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் வணிகப் பட நாயகனாகவே நீடித்திருக்க விரும்பும் விஜய் மீது விமர்சனங்களும் இருக்கவே செய்கின்றன.
“தமிழ் சினிமா ரசிகர்கள் தரமான படங்களை விரும்பாதவர்கள் என்று நினைக்கும் நடிகர்களில் ஒருவராகவே விஜய் இருக்கிறார் என்பதையே அவரது பெரும்பாலான படங்களின் கதைத் தேர்வு எடுத்துக்காட்டுகிறது. விஜய்க்குக் கேரளத்திலும் ரசிகர்கள் அநேகர் இருக்கிறார்கள். ஆனால் கேரளத்தில் விஜய்யைப் போன்ற முன்னணி நடிகர்கள் தரமான படங்களில் நடிக்கிறார்கள்.
இதற்கு மலையாளத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கம்மாட்டி பாடம்’ திரைப்படம் நல்ல உதாரணம். தற்போது மிக அதிக வசூல் செய்யும் நாயகனாக இருக்கும் துல்கர் சல்மான், இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
இதுவொரு வணிகப்படமல்ல; வளர்ச்சியால் தங்கள் வாழ்விடத்தை இழந்து நிற்கும் சாமான்ய மக்களின் கதையைப் பேசும் படம். விஜய் வணிகப் படங்களில் நடிக்கும் அதேநேரம் ஆண்டுக்கு ஒரு தரமான, மாறுபட்ட படத்தில் நடித்தால்தான் ஒரு நடிகராக நாளைய சினிமா வரலாற்றில் அவருக்கு இடமிருக்கும்” என்கிறார் விஜய் படங்களைத் தொடர்ந்து பார்த்துவரும் சென்னையைச் சேர்ந்த ரசிகர் ஒருவர்.
நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துபவர் களுக்குத் திரையுலகில் தனியிடம் உள்ளது. அதுபோலவே நடனம், நகைச்சுவை, ஆவேசம், ஆரவாரம் மூலமாக மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது. அப்படிப்பட்ட கலைஞர்களின் வரிசையில் விஜய்க்குத் தற்போது முக்கியமான இடமிருக்கிறது. தரமான முயற்சிகளில் நடிக்க விஜயும் முன்வரும்போது அவரது இந்த இடம் மரியாதைக்குரியதாக மாறும்.
விநியோகஸ்தர்களின் நாயகன்!
“இன்று பெரிய நடிகர்களின் படங்களே பெரும்பாலும் 10 நாட்கள்தான் பரபரப்பாக ஓடுகின்றன. அதற்குப் பிறகு கூட்டம் குறைய ஆரம்பித்துவிடுகிறது. விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் பலவேளைகளில் தப்பு பண்ணினாலும் பெரும்பாலான வேளைகளில் பி, சி சென்டர்களில் 40 நாட்கள்வரை எங்களுக்கு வசூல் தருகின்றன” என்கிறார் முன்னணி விநியோகஸ்தர் ஒருவர். “இந்த 40 நாட்கள் வரும் கூட்டத்தால் திரையரங்கு உணவக வியாபாரம், விநியோகஸ்தருக்குக் கிடைக்கும் வருமானம், தயாரிப்பாளருக்கு வரும் பணம் எனக் கணக்கிட்டால் எங்களின் ‘நம்பிக்கை நாயகர்’களில் விஜய்க்கு முக்கிய இடமிருக்கிறது” என்கிறார் அந்த விநியோகஸ்தர்.
மாதம் ஒரு நாள்!
தன் மீது அடங்காத அன்பு செலுத்தும் ரசிகர்கள்தான் தனது வெற்றிக் கோட்டையின் அஸ்திவாரம் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் விஜய், மாதத்தில் ஒரு நாள் ரசிகர்களுக்கு என்று ஒதுக்கிவிடுகிறார். அந்த நாளில் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்றங்களிலிருந்து ஒரு ரசிகர் மன்றத்துக்குத் தலா 100 ரசிகர்கள் வீதம் 1000 பேரை அழைத்து வரச் சொல்லுவார் விஜய். அனைவருடனும் முகம் சுளிக்காமல் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.
“இது உங்களது வாழ்க்கை அல்ல. கண்டிப்பாக உங்களது குடும்பத்தினர் பெருமைப்படும் அளவுக்கு வளர வேண்டும். உங்களுடைய வளர்ச்சிதான் எப்போதுமே எனக்குச் சந்தோஷம் தரும்” என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைப்பார். அன்றைய தினம் ரசிகர்கள் தங்க ஏற்பாடு, உணவு ஏற்பாடு, போக்குவரத்துச் செலவு என அனைத்துமே விஜய்யின் செலவுதானாம்.
இணையத்தின் பின்னால்...
“சமூக வலைத்தளம் வழியே தன் ரசிகர்களும் அஜித்தின் ரசிகர்களும் மோதிக்கொள்வதை விஜய் அறவே விரும்பவில்லை” என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தினர். ஆனால் ‘இணையத்தின் வழியே விஜய், அஜித் ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொள்ளும்போது, அதைச் சம்பந்தப்பட்டவர்கள் அதைக் கண்டும் காணாதது போல் இருப்பது ஒருவித வியாபார உத்தியாகவே தோன்றுகிறது’ என்றும் ஒரு கருத்து உள்ளது.
தொடர்ச்சியாக ட்வீட் செய்வதற்கு நேரம் இல்லாததால், ட்விட்டர் தளத்தில் இணையவில்லை எனினும், அவ்வப்போது தனது அலுவலகம் சார்பாக இயங்கும் ட்விட்டர் தளத்தைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்.
“என்னைக் கிண்டல் செய்பவர்களால் மட்டுமே நான் இன்னும் வளர முடிகிறது” என்று ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்திருக்கிறார் விஜய். தன்னைப் பற்றி யார் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் அவர் மவுனம் சாதிக்கிறார். ஒருவேளை இதுவே அவருடைய வெற்றியின் ரகசியமாக இருக்கலாம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான பலரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT