Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு சாண்ட்விச்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்ஸிகோ மிகப்பழமையான வரலாற்றைக் கொண்டது. இங்கே கலையும் நாகரிகமும் எந்த அளவுக்கு செழித்ததோ அதே அளவுக்கு அழிவையும் சந்தித்திருக்கின்றன. இதற்கு மாயன் நாகரிகம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இளமையான கலையான திரைப்படங்களும் இங்கே மிக இழிவான நிலையை எட்டியிருக்கின்றன.

மெக்ஸிகோ நாட்டின் வெகுஜனத் திரைப்படங்கள் கோடம்பாக்கத்தின் மசாலா குப்பைகளை விட கொடுமையானவை, வன்முறையும், வன்புணர்வும் மெக்ஸிகன் வெகுஜன சினிமாவின் முக்கிய குணமாக இருக்க, குப்பைகளுக்கு மத்தியில் இங்கேயும் நல்ல சினிமாவுக்கான கனவுகளுடன் சுற்றித்திரியும் சினிமா இயக்குநர்கள் இயங்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் பெர்நாடோ எம்ம்பாக்.இவர் இயக்கியிருக்கும் ‘கிளப் சாண்ட்விச்’ திரைப்படத்தை நீங்கள் ‘ஐநாக்ஸ்’ வளாகத்தில் உள்ள ஸ்கிரீன்- 3ல் இன்று காலை 11 மணிக்குக் காணலாம்.

மெக்ஸிகோ தேசத்தின் யுவதிகள் எத்தனை அழகானவர்களோ, அதே அளவுக்கு அங்குள்ள ஆண்களும் மைக்கேல் ஏஞ்சலோ சிலைகளைப் போல வடிவானவர்கள்தான். ஆனால் உலகமய வாழ்க்கை முறைக்குப் பிறகு உணவுமுறை மாறிப்போனதால் ஓபி மனிதர்கள் பெருகிப்போனார்கள். குண்டாக இருப்பதற்காகவே சமூகத்தால் உப்புக்குச் சப்பாணியாக இவர்கள் பின் தள்ளப்படும் அவலம் எல்லா சமூகங்களிலும் இருக்கவே செய்கிறது. ‘கிளப் சாண்ட்விச்’ இந்த குண்டு மனிதர்களின் வலிகளை சிரிப்பொலிக்கு நடுவே பேசும் படம்.

35 வயதே நிரம்பிய உயர்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த தாய் பலோமா. மணவிலக்கு பெற்ற அவள், தனது 15 வயது மகன் ஹெக்டருடன் வசிக்கிறாள். ஒரு விடுமுறையைக் கழிக்க, மகனுடன் கடற்கரை ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறாள்.

தன்னை தூக்கியெறிந்துபோன கணவனுக்குப் பிறகு அவளது உலகம், உயிருக்குயிரான ஒரே மகனை மையமாக வைத்தே சுழல்கிறது. அவன் குண்டாக இருப்பதால், அவனுக்கு பள்ளியில் கூட தோழிகள் இல்லை. ஆனால் விடுமுறைக்கு வந்த இடத்தில் எங்கே மகனையும் பிரிந்து விடுவோமோ என்று பதற்றப்படுகிறாள். அதற்குக் காரணம் அங்கே விடு முறைக்கு வந்த அவனையொத்த வயது கொண்ட பெண்ணுக்கு, ஹெக்டரைப் பிடித்து விடுகிறது. அவனுக்கும் அவளைப் பிடித்து விடுகிறது. இரண்டுபேருமே குண்டுக்குழந்தைகள் என்பதே இதற்குக் காரணம்.

இருவருமே ஒல்லியான மனிதர்களால் உதாசீனப்படுத்தப் பட்டவர்கள். விடுமுறையில் தோழர் களாகும் இவர்கள், பால்யம் முடிந்து பதின்பருவம் தொடங்கும் வைகறையில் அடிக்கும் நகைச்சுவை லூட்டிகள்தான் படம் முழுக்க. மகனின் தோழியை அம்மா ஏற்றுக் கொண்டாளா என்பதை வயிறு வலிக்கும் நகைச்சுவையில், சமூகத்தை நக்கலடித்தபடி காட்சிப்படுத்தியிருக்கிறார்

இந்தப் படத்துடன் பிரபல இஸ்ரேலிய இயக்குநர் ஜோனாதன் கர்பிங்கெல் இயக்கி யிருக்கும் ‘சிக்ஸ் ஆக்ட்’ படத்தை காலை 11 மணிக்கு உட்லாண்ட்ஸ் திரையரங்கில் கண்டுகளிக்கலாம். ஐநாக்ஸ் - 2வது திரையில் பிரபல ஈரானிய இயக்குநர் நாசீர் ரஃபாடல் இயக்கியிருக்கும் ‘கிரீன் அம்ரெல்லா’ படத்தை காலை 10.45 மணிக்கு பார்க்கலாம். இந்த காட்சிகளோடு, திரைப்பட விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சிகள் சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியின் கலையரங்கில் மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. இந்த விழாவில் இந்திப்பட உலகின் பிரபல படைப்பாளி ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியின் இறுதியில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி விருந்தாக அமைய இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x