Published : 09 Sep 2016 10:21 AM
Last Updated : 09 Sep 2016 10:21 AM

மலராக நடிக்கத் தயங்கவில்லை! - பூஜா தேவரியா பேட்டி

“எனக்கு ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்குச் செல்வதென்றால் ரொம்பவே பிடிக்கும். முக்கிய கதாபாத்திரம் நமக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு போக மாட்டேன். இந்த நடிப்புத் தேர்வில் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றுதான் ஒவ்வொரு முறையும் போவேன்” என்று சிரிக்கிறார் பூஜா தேவரியா. இளம் கைம்பெண்ணின் உடல் ரீதியான உணர்வுச் சிக்கலை மனத்தடை எதுமின்றி வெளிப்படையாகவும் துணிச்சலோடும் எதிர்கொள்ளும் மலர் என்ற கதாபாத்திரத்தில் ‘இறைவி’ படத்தில் தோன்றி வியக்கவைத்தவர். நவீன நாடக உலகின் பின்புலத்தில் இருந்து வந்த இவரிடமிருந்து பதில்கள் சரளமாக வந்து விழுகின்றன.

நாடகத்துக்குள் நுழைய வேண்டும் என்ற ஈர்ப்பு வரக் காரணம்?

நான் படகு ஓட்டும் விளையாட்டில்தான் இருந்தேன். அதனைத்தான் எனது தொழிலாக எடுக்க வேண்டும் என விரும்பினேன். சினிமாவில் வர வேண்டும் என்று ரொம்ப ஆசை. முட்டியில் அடிபட்டது, ஆபரேஷன் என என் வாழ்க்கை அப்படியே திசை மாறியது. அப்போது ஓவியங்கள் மற்றும் நாடகங்கள் என என்னை ஊக்குவிப்பதற்காக ஆரம்பித்தேன்.

முதல் நாடகத்தில் நடிக்கும் போது அரங்கின் பளீர் விளக்குகள், நடிப்புக்கு ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டல்கள் என அந்த எண்ண ஓட்டத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. சுமார் 2 வருடங்கள் பல நாடகங்களில் பங்குபெற்றேன். நாடகத்தில் நடிப்பது, தயாரிப்பில் உதவுவது என எந்த வேலை வந்தாலும் செய்துகொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நாடகத்தை மட்டுமே என்னுடைய வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டேன். அங்கு வந்தவர்கள் என்னுடைய திறமையைப் பார்த்து சினிமாவுக்கு அழைத்து வந்தார்கள்.

பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி என்னுடைய நாடகத்துக்கு வந்திருந்தார். அப்போது ஒரு படம் பண்ணவிருக்கிறோம், உங்களுக்கு நடிக்க ஆர்வமா எனக் கேட்டார். எனக்கு சினிமாவில் யாருமே தெரியாது, ஒரு வாய்ப்பு வருகிறது, அதன் மூலமாக அடுத்த அடுத்த வாய்ப்புகள் வரலாம் என்று நம்பி ஏற்றுக்கொண்டேன். எனக்குச் சொந்தமாக 'ஸ்டே பேக்ட்ரி' நாடக கம்பெனி இருக்கிறது. அதில் 'கற்பூரம்' என்ற நாடகம் நடத்தினோம். அதற்கு ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டன் வந்திருந்தார். என் நடிப்பைப் பார்த்துத்தான் 'குற்றமே தண்டனை' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். 'இறைவி' வாய்ப்பு அதற்குப் பிறகுதான் கிடைத்தது.

நடிப்பு என்பதை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?

யாருமே சொல்லிக் கொடுக்கவில்லை. மக்களிடம் பேசுவது நிறையப் பிடிக்கும். நாடகங்கள் மூலமாக உலகம் முழுக்கப் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும், நாடக பணிகள் முடிந்தவுடன் கூடுதலாகச் சில நாட்கள் தங்கி அங்குள்ள மக்களைப் பற்றிப் படிப்பேன். இந்தியா திரும்பியவுடன் அந்த மக்களிடம் கற்ற விஷயங்களைச் செய்து பார்ப்பேன். அதுதான் அப்படியே நடிப்புக்கு மாற்றியது என்று சொல்வேன்.

கமர்ஷியல் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தால்?

எந்தவொரு வரைமுறையும் வைத்துக்கொள்ளவில்லை. எந்த இயக்குநர் எந்தக் கதையோடு வருவார் என்று தெரியாது. எந்தக் கதை வந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தால் அடுத்த கேள்வி எப்போது படப்பிடிப்பு என்பதாகத்தான் இருக்கும். பலர் ‘இறைவி', ‘குற்றமே தண்டனை' நடித்துவிட்டாள், இனிமேல் அவளுக்கு என்னப்பா என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்த வாழ்க்கைக்குப் பின்னால் என்னுடைய மிகப் பெரிய உழைப்பு இருக்கிறது. 6 வருடங்கள் எந்தவொரு சம்பள எதிர்பார்ப்புமின்றி கஷ்டப்பட்டிருக்கிறேன்.

'இறைவி'யில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கத் தயக்கம் இருந்ததா?

'இறைவி'யில் 3 கதாபாத்திரங்களின் தேர்வுக்குமே சென்றேன். நாயகர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதா, பேச்சு மொழி என அனைத்துமே பார்த்து எனக்கு மலர் கதாபாத்திரத்தைக் கொடுத்தார்கள். அந்தக் கதாபாத்திரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். சமூகத்தில் அதே போன்று நிறையப் பெண்கள் இருக்கிறார்கள்.

அந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சாரும் நல்ல விதமாக எடுத்துக் காட்டியிருந்தார். பெரும்பாலானவர்கள் அந்தக் கதாபாத்திரத்தை கெட்டதாகத்தான் பார்ப்பார்கள். ஆனால் அது தன்னளவில் நேர்மையானதுதான். அதைச் சரியாகத் திரையில் கொண்டுவருவது எனக்குச் சவாலாக இருந்தது. நான் மலர் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துப் பண்ணினேன்.

நாடகம் மற்றும் சினிமா, இரண்டுக்கும் நடிப்பில் வித்தியாசம் இருக்கிறதா?

நிறைய உண்டு. நாடகங்கள் சினிமாவுக்கு செல்வதற்கு ஒரு வழி என்று யோசிக்கிறார்கள். இங்கு நன்றாகப் பண்ணிவிட்டால், உடனே வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அப்படி கிடையவே கிடையாது. இரண்டிலும் நடிப்பதற்குத் திறமை வேண்டும். எங்களது நாடகங்களில் வசனங்கள் குறைவாகவும், நடிப்பு அதிகமாகவும்தான் இருக்கும். தமிழ்நாட்டின் கலாச்சாரங்களைப் பல நாடகங்களில் புகுத்திவருகிறோம். சினிமாவில் நடிப்பதற்கு நிறைய சவால்கள் இருக்கின்றன.

படகு ஓட்டுதல், நாடகம், சினிமா நடிப்பு என உங்களது வளர்ச்சியைப் பார்த்து குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

என் குடும்பத்தில் பொறியாளர்களும் மருத்துவர்களும் அதிகம். என் குடும்பம் ரொம்பப் பெரியது, அதிலும் பலர் படிப்பில் தங்க மெடல் வாங்கியவர்கள். உனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, அதை நீ செய்ய வேண்டும். அப்போது தான் நீ நன்றாக வருவாய் என்று சொல்லிவிட்டார்கள். அந்தச் சுதந்திரம் எனக்கு நிறைய ஊக்கமாக இருந்தது. நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவுடன் பணமும் அவ்வளவாக வராது. என் குடும்பத்திலிருந்துதான் வாங்குவேன். நான் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் என்னுடைய நாடக கம்பெனி, நண்பர்கள், அம்மா இவர்கள்தான் காரணம்.

சினிமாவில் கிடைக்கும் பெயரை வைத்து நாடகங்களில் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறீர்கள்?

இன்னும் பழைய நாடகங்களின் எண்ணத்திலேயே இப்போதும் நாடகங்களைப் பார்க்கிறார்கள். அதை முதலில் மாற்ற வேண்டும். எனக்கு இப்போதுள்ள பெயரை வைத்து நாடகங்களில் உள்ள நல்ல விஷயங்களை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்வேன். சினிமாவில் உள்ள பெயரை நாடகத்துக்காகத் தப்பாக உபயோகப்படுத்த மாட்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x