Published : 14 Jun 2015 09:34 AM
Last Updated : 14 Jun 2015 09:34 AM

திரை விமர்சனம்: இனிமே இப்படித்தான்

முழுக் கதாநாயகனாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்துக்கு பிறகு நடிகர் சந்தானம் நடித்திருக்கும் அடுத்த படம் ‘இனிமே இப்படித்தான்’. காமெடியன் முகமூடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு, நாயகனாகத் தொடர்ந்து அரிதாரம் பூச இந்தப் படம் உதவுமா?

பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணம் வேண்டாம், காதல் திருமணமே நல்லது என்பது நாயகன் சந்தானத்தின் நம்பிக்கை. ஆனால் காதல் அமைய வேண்டுமே? ஏகப்பட்ட ‘பல்புகள்’ வாங்கிய பிறகு மஹா என்னும் பெண்ணை (ஆஷ்னா சவேரி) நெருங்கினால் அவளும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்கிறாள். கஜினி முகம்மது தோற்கும் அளவுக்கு முயற்சியில் ஈடுபட்டும் வெற்றி காணாத சந்தானம், பெற்றோர் கைகாட் டும் பெண்ணை (அகிலா கிஷோர்) மணக்கச் சம்மதிக்கிறார். அந்த நேரம் பார்த்துத் தானா ஆஷ்னாவுக்குத் தன் மீது காதல் இருப்பது தெரிய வேண்டும்?

காதலிக்கும், நிச்சயம் செய் யப்பட்ட பெண்ணுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் சந்தானம் அதிலிருந்து மீண்டாரா என் பதே ‘இனிமே இப்படித்தான்’ கதை.

சந்தானம் படத்தில் என்னென்ன இருக்குமோ அவையெல்லாம் படத்தில் இருக்கிறது. சந்தா னத்துக்கு ஏற்ற முழு நீள காமெடி கதைதான். சந்தானத்தின் பலமே காமெடிதான். அதற்கு சேதாரம் ஏற்படாமல் அவரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள் முருகானந்த் (முருகன் + ஆனந்த்).

நாயகனாக இருந்தாலும் நக்கலையும் நையாண்டியையும் கைவிடாமல் கலகலப்பாக்கு கிறார் சந்தானம். அவருடைய வழக்கமான டைமிங் காமெடி அவருக்குப் பெரிதும் உதவி இருக்கிறது.

காதலுக்காக ஒரு பெண்ணைத் துரத்துவதெல்லாம் பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள். சந்தானம் அதைத் தன் ஸ்டைலில் செய்கிறார். சந்தானம் தன் காதலைப் பற்றிப் பெண் வீட்டில் சொல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் வேடிக்கையாக இருக்குமளவுக்கு வலுவாக இல்லை. விடிவி கணேஷ் போன்ற ‘நண்பர்கள்’ குடித்தபடியும் குடிக்காமலும் பேசும் எந்தப் பேச்சும் கவரவில்லை. மாமாவாக வரும் தம்பி ராமையாவின் சொதப்பல்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பூட்டுகின்றன. ஆனால் கோயிலில் அவர் திட்டம் பலிக்காமல் போகும் காட்சி எடுபடுகிறது.

குட்டு உடைபட்ட பிறகு படம் சூடு பிடிக்கிறது. நாயகன் சந்தானம் என்பதாலோ என் னமோ இயக்குநர் முருகானந்த் இதிலும் வேடிக்கையைப் புகுத்து கிறார். கிளைமாக்ஸ் திருப்பமும் சந்தானத்தின் இமேஜை மனதில் வைத்துக்கொண்டு உரு வாக்கப்பட்டதாகவே தெரிகிறது. நாயகனாகிவிட்ட பிறகும் ஏன் இப்படி என்பதுதான் புரிய வில்லை. எந்தக் காட்சியிலும் போதிய அழுத்தமோ மனதைக் கவர்ந்திழுக்கும் அம்சமோ இல்லாதது படத்தின் பெரிய குறை.

சந்தானத்தின் நடிப்பில் நல்ல முன்னேற்றம். நடனம், ஸ்டைல் ஆகியவற்றில் மனி தர் அசத்துகிறார். காமெடி வாசனையோடு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சரி, ஆனால் காதல் காட்சிகளிலும் அது தொடரும்போது பொருந்தாமல் போகிறது.

ஆஷ்னா சவேரி அழகும் அனாயாசமான நடிப்புக்காகக் கவர்கிறார். அகிலா கிஷோருக்குச் சிறிய வேடம்தான். நிறைவாகச் செய்திருக்கிறார்.

ஆடை வடிவமைப்பாளரைப் பாராட்டியாக வேண்டும். சந் தானம், ஆஷ்னாவின் உடைகளின் தேர்வில் நல்ல ரசனை.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் பாடல்களைக் கேட் கும்போது பாடல்கள் போலவே இருக்கின்றன. பிறகு யோசித் துப் பார்த்தால் மெட்டுகள் நினைவுக்கு வர மறுக்கின்றன. ஒளிப்பதிவாளர் கோபி ஜகதீஸ் வரன் காட்சிகளில் புத்துணர்ச்சி ஏற்படுத்துகிறார். நாயகி களை அழகாகப் படம்பிடித்திருக் கிறார்.

காதலுக்கும் வீட்டில் செய்யும் திருமண ஏற்பாட்டுக்கும் இடையேயான முரண்பாட்டை வேடிக்கையான சம்பவங்கள் மூலம் சொல்லும் முயற்சியில் இயக்குநர் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x