Last Updated : 17 Mar, 2017 10:13 AM

 

Published : 17 Mar 2017 10:13 AM
Last Updated : 17 Mar 2017 10:13 AM

கவனம் ஈர்க்கும் குறும்படம்: ‘இதையும் வெளியிடு!

வெகுஜன தமிழ் சினிமாவில் காதல் என்பது எல்லா வகையிலும் வெறும் கச்சாப் பொருள்தான். அதே வேலையை ஒரு குறும்படம் செய்யும்போது அதை நாம் சீராட்டிவிட முடியாது. இப்படிக் காதல் என்பது சினிமாவுக்கான பண்டம் என்ற புரிதலைத் தாண்டாத நூற்றுக்கணக்கான குறும்படங்கள் யூடியூபில் நிரம்பி வழிவதைப் பார்க்கிறோம். ஆனால் ‘கிஸ்’ என்ற தலைப்பைச் சூட்டிக்கொண்டிருக்கும் குறும்படம் இந்த ரகத்திலிருந்து விலகி நிற்கிறது.

ஒன்றிரண்டு காதல் சந்திப்புகளைத் தாண்டி நேரடியாக சமகாலப் பிரச்சினை ஒன்றுக்கு வந்துவிடுகிறது. சமூகத்தை நேசிக்கும் நல்ல மனிதர்கள் சமூக ஊடகங்களுக்கு வரும்போது அதன் மூலம் மாற்றங்களுக்கு வித்திட முடியும். தவறான ஆட்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது அது தனிமனிதர்களின் வாழ்க்கையில் இருளைப் படரச்செய்துவிடும். சமூகத்தில் இன்று தீயாய் எரியும் பிரச்சினைகளில் ஒன்று இது. இதுபோன்றதொரு பிரச்சினையால்தான் சேலத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். முகநூல், வாட்ஸ்அப்களின் வழியே சிலரின் வாழ்வைச் சூறையாடும் தீயவர்களின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது இக்குறும்படம்.

“முழுநீளப் படத்துக்குப் பணியாற்றும் முழுமுயற்சியோடுதான் 20 நிமிடத்திற்குள்ளான இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் இராஜா கருணாகரன்.  ஜெயந்தி பிக்சர்ஸுக்காக தயாரிக்கப்பட்ட இக்குறும்படத்தில் விஜய் ஆம்ஸ்ட்ராங், அருண் விஜய் ஆகிய இரு தேர்ந்த ஒளிப்பதிவாளர்களின் கேமரா கண்களின் வழியே வெயிலும் நிழலும் இருளும் ஒளியுமான காட்சிகள் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. குறிப்பாக ரயில்வே மேம்பாலக் காட்சிகளில் கதையின் தீவிரத்துடன் இணைந்து பயணிக்கும் கோணங்களும் ஒளியமைப்பும் அபாரம்.

ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் நிதானமும் வேகமும் தேவையான இடங்களில் காட்சியின் கோர்வையை அழகுபடுத்தித் தருகின்றன. படத்தைப் பார்க்கவிடும்படியாக அளவான மெல்லிய இசை தந்த பிஜிபால் மானி, பரபரப்பான சாலையைக் காட்டும்போது அதற்கேயுண்டான போக்குவரத்து இரைச்சலை அர்த்தபூர்வமாக ஒலிக்கவிட்ட ‘ஒலி மேற்பார்வை', இணை இயக்குநர் பணிகளில் பங்களித்திருக்கும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, முக்கிய நடிகர்களில் சபரி, ஜமுனா சண்முகம், நண்பர்களாக நடித்த ரிச்சர்ட், விமல், வெற்றி போன்றவர்கள் இந்தக் குறும்படத்துக்குத் தங்களுடைய திறமையை மிக நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் கைபேசிக் கடைக்காரராக நடித்திருக்கும் டைகர் தங்கதுரை வியப்பூட்டுகிறார். குறும்படம் என்றாலும் அதன் வெற்றி சிறந்த குழு ஒன்றின் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதிலும் அடங்கியிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

முக்கியச் செய்தி ஒன்றைச் சொல்வதற்காக, வீடுகளுக்குத் தண்ணீர் போடும் பையனைக் கதைநாயகனாக வைத்து எஸ்.ஜெயந்தி எழுதியுள்ள கதைக்கு, சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். எளிய மனிதர்களை மையக் கதாபாத்திரங்களாக முன்னிறுத்தி இப்படியொரு பிரச்சினையை அணுகியிருக்கும் இயக்குநர் அதற்குப் போதிய காரணங்களை முன்வைப்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.

கடைவீதியின் கம்பத்தில் தொங்கியபடி காற்றில் ஆடும் கட்சிக்கொடி தோரணங்கள், சாதாரண நண்பர்களின் உரையாடலில் தொனிக்கும் சென்னை வட்டாரப் பேச்சு மொழி ஆகியவை கதையுடன் ஒன்றவைக்கின்றன. கைபேசிக் கடையில் வைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவைப் பயன்படுத்திக்கொண்ட விதம், நண்பன் சிக்கலில் தவிக்கும்போது மோதிரத்தை எடுத்துக் கொடுத்து, “இத கொடுத்து செல்போனை வாங்கு” என்று கூறும் நண்பனிடம், “வீட்ல கேட்ட என்னடா சொல்லுவ...?” என்று அவன் கேட்க, “அதை நான் சமாளிச்சிக்கிறேன் நீ செல்போன் வாங்கற வழியப் பாருடா” என இவன் பதில் சொல்கிறான்.

இப்படி யதார்த்தமான வசனங்கள், செல்போன் கடைக்காரர் வருகைக்காக ஒரு சுவரோவியம் அருகே தவிப்புமிக்க வலியோடு காத்திருக்கும்போது, கீழே படுத்திருக்கும் நாயைத் தடவிக்கொடுக்கும் பரிவு என மொத்தக் குறும்படமும் அன்றாட வாழ்வின் நம்பகத்தன்மையை அலட்டல் இல்லாத காட்சிகள் மூலம் மிகச் சரியான அளவில் முன்வைத்துள்ளது.

நண்பர்களை அழைத்துச் சென்று மிரட்டிப்பார்த்தும் தனியே சென்று கெஞ்சிப் பார்த்தும் மசிய மறுக்கிறார் கைபேசிக் கடைக்காரர். “மொதல்ல 200 ரூபாயிலிருந்து 500 வரை ஆகும்னுதான்னே சொன்னீங்க'' என்று கேட்டதற்கு “மொபைல் ரிப்பேருக்கு 420 ரூபாதான்... கிஸ்அடிச்சதுக்கு யார் துட்டு கொடுப்பா'' என்று கேட்கும் கைபேசிக் கடைக்காரரை மிக மோசமான சமூகச் சீரழிவின் புதிய அவதாரமாக விளங்கும் இணைய அத்துமீறலின் முகமாகக் காட்டியுள்ளார் இயக்குநர்.

- இராஜா கருணாகரன்

விளையாட்டான விஷயங்கள் விபரீதமாகிப்போனதை யோசித்தபடி தண்ணீர் கேன் போடும் பையன், தோழியைத் தேடிப் போகிறான். அவளிடம் பயந்து பயந்து எடுத்துச் சொல்கிறான். அவள் அவன் கையைப் பிடித்து, துணிச்சலாகக் கடையை நோக்கி வேகமாக நடந்து வருகிறாள். அவனைப் பார்த்து அவள் கேட்கும் கேள்விகளில் செல்போனைத் தந்துவிடுகிறார் கடைக்காரர். அதன் பிறகும் அவர்களின் முத்தப் படத்தை நெட்டில் ஏற்றப்போவதாக மிரட்டுகிறார்.

''இதுக்கெல்லாம் நான் பயந்துடுவேன்னு நெனைச்சியா.... இந்தா இந்தப் படத்தையும் வெளியிடு'' என்று கூறியவாறு... பலர் முன்னிலையில் அந்த உணர்வுபூர்வமான செயலைச் செய்கிறாள். அத்தகைய மோசக்காரர்களுக்கு விடுக்கும் அறைகூவலாகவே அமைந்துவிட்ட தோழியின் நடவடிக்கையை, தகுந்த நிதானத்தோடு முன்னிறுத்தியுள்ளார் இயக்குநர் இராஜா கருணாகரன். முழுநீளத் திரைப்படம் என்னும் களத்திலும் தரமான விறுவிறுப்பான படங்களைத் இவர் தருவார் என நம்பலாம்.

குறும்படத்தைக் காண:

https://www.youtube.com/watch?v=tD-sNZZz344

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x