Published : 24 Feb 2017 10:10 AM
Last Updated : 24 Feb 2017 10:10 AM
த்ரிஷாவுக்கு ரீமேக் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அனுஷ்கா சர்மா நடிப்பில் பாலிவுட்டின் லிங்குசாமி என்று நெட்டிசன்களால் வர்ணிக்கப்படும் நவ்தீப் சிங் இயக்கத்தில் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘என்.எச்-10’. கண் முன் நிகழும் ஆணவக்கொலைக்குக் காரணமான குடும்பத்துக்கு எதிராக ஒரு சாமானியப் பெண்ணான அனுஷ்கா சர்மா ஆயுதமேந்தும் விறுவிறுப்பான த்ரில்லர் கதை. அதைத் தமிழில் ‘கர்ஜனை’ என்ற தலைப்பில் மறுஆக்கம் செய்து வருகிறார் அறிமுக இயக்குநர் சுந்தர்பாலு. அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் த்ரிஷாவுக்குச் சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் பயிற்சி அளித்துவருகிறார். இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் டூப் கிடையாது என்பதால்தான் இந்தப் பயிற்சியாம்.
ஆவிக்கும் உண்டு காதல்
‘டிஷ்யூம்’ படத்தில் தொடங்கி ‘பழைய வண்ணாரப்பேட்டை’ வரை நல்ல கதை, கதாபாத்திரங்களில் தோன்றி நம்பகமான நடிப்பைத் தந்துவருபவர் பிரஜின். இவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘எங்கேயும் நான் இருப்பேன்.’ இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கலா கல்யாணி. பேய்ப் படங்களின் ஆதிக்கம் கோடம்பாக்கத்தில் குறையாத நிலையில் “ ‘ஒரு ஆவியின் காதல் கதை’யாக கவித்துவமான ஒரு பேய்ப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பயம், பரிதவிப்பு, காதல் உணர்ச்சி மூன்றையும் கலந்து ரசனையான பேய்ப் படமாக இதை உருவாக்கியிருக்கிறேன்” என்று உத்திரவாதத்துடன் கூறுகிறார் படத்தை இயக்கியிருக்கும் பென்னி தாமஸ்.
பூஜைக்கான கெட்-அப்
‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளுத்து வாங்கினார்கள் வலைதள விமர்சகர்கள். ஆனால், அமைதியாக வசூலில் படம் நின்றுவிட, தற்போது நான்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். அப்பாவிக் காதல் பையன் வேடமெல்லாம் இனி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்ட ஜி.வி.பிக்கு அதிரடியான முழுநீள ஆக்ஷன் த்ரில்லர் கதையைக் கொண்டுவந்திருக்கிறார் ரவி அரசு. படத்தின் தலைப்பு ‘ஐங்கரன்’. ஐந்து விதமான பரிமாணங்களில் ஆக்ஷன் செய்ய இருக்கிறாராம். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தபோது “கதை பற்றி யாருக்கும் கூறிவிடாதீர்கள்; பக்திப்பழமாக பூஜைக்கு வந்தால், பத்திரிகை நண்பர்கள் கதை கேட்க மாட்டார்கள்” என்றாராம் இயக்குநர். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு பூஜைக்கு வந்திருக்கிறார் ஜி.வி.பி.
தப்ஸி இடத்துக்கு ஒருவர்!
‘வை ராஜா வை’ படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் பிஸியாகிவிட்டார் தப்ஸி பன்னு. தற்போது அவரைப் போலவே புதிதாக பஞ்சாபிப் பெண் ஒருவர் வந்திருக்கிறார். அவர் ருகானி சர்மா. பஞ்சாபி பாப் மியூசிக் வீடியோக்கள், இந்தி விளம்பரங்கள் வழியே பிரபலமாகிவிட்ட ருகானியை ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ படத்துக்காக அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் ரவி பார்கவன். பரத் நாயகனாக நடித்து முடித்திருக்கும் இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. அறிமுகமாகும் முதல் படமே ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருக்கிறதே என்றால் “அதற்கு நான் கூட ஒரு காரணமாக இருக்கலாம்” என்று குறும்பாகச் சிரிக்கிறார் ருகானி. பொடி வைத்துப் பேசவும் தெரிகிறது இந்தக் கோதுமை தேசத்துப் பெண்ணுக்கு!
குத்துச்சண்டை தெரியும்!
கோலிவுட்டில் அறிமுகமாகும் மலையாள, வடமாநிலக் கதாநாயகிகள் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிடுவார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் இன்ஜினீயரிங், எம்.பி.ஏ என இரண்டு பட்டங்களை வாங்கிக்கொண்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். ‘கககபோ’, ‘திருட்டு விசிடி’, ‘யூகன்’ என அரை டஜன் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துவிட்ட இவர், தற்போது ஜீவன் ஜோடியாக ‘ஜெயிக்கிற குதிரை’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன் அமெரிக்கா சென்று புகழ்பெற்ற லீ ஸ்ட்ராஸ்பெர்க் நடிப்புப் பள்ளியில் மெத்தட் ஆக்டிங் பயிற்சியை முடித்துத் திரும்பியிருப்பதை ஊடகங்களை அழைத்து உரக்கக் கூறியிருக்கிறார். “மெத்தட் ஆக்டிங் உடன் பூட்டி பேர் (Booty Barre) என்ற நடனம், பிலாட்டீஸ், கிக் பாக்சிங் ஆகியவற்றையும் கற்று வந்திருக்கிறேன்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT