Last Updated : 29 Nov, 2013 12:15 PM

 

Published : 29 Nov 2013 12:15 PM
Last Updated : 29 Nov 2013 12:15 PM

டி.ஏ.மதுரம் : எல்லாம் உன் தயவால்தான்

ஏழு வயதுக் குழந்தை தன் அண்டை வீட்டில், உறவினர்கள் வீட்டில் நடக்கும் திருமணங்களுக்குச் சென்று நலுங்குப் பாட்டுப் பாடி அதற்குச் சன்மானமாகக் கிடைக்கும் உணவையும் பணத்தையும் கொண்டு தன் சகோதர, சகோதரிகளின் பசியாற்றியிருக்கிறாள். அவ்வளவு பொறுப்பும் திறமையுள்ள உள்ள அந்தச் சிறிய பெண்தான் பின்னாட்களில் தமிழின் மிக முக்கியமான நகைச்சுவை நடிகையாக வலம் வந்தார். அவர்தான் திருச்சி அங்கமுத்து மதுரம்.

டி.ஏ. மதுரம் 1918ஆம் ஆண்டு ரங்கத்தில் சுப்பையா-அங்கமுத்து தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். சிறு வயதிலேயே இனிமையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர். பல நாடகங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களைப் பொறுத்தவரை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த ரத்னவாளி படத்தில் மதுரம் முதன்முதலாக நடித்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அவர் டி.ஆர்.ஏ.மதுரம் என அழைக்கப்பட்டதாகத் திரைப்பட வரலாற்றாய்வாளர் வாமனன் குறிப்பிடுகிறார்.

ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும் அதன் பிறகு பூனேயில் எடுக்கப்படவிருந்த ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கான தேர்வுக்கு அழைப்பு வருகிறது. அந்தத் தேர்வில் ஒரு இளைஞன் மதுரத்தின் நடிப்புத் திறனைச் சோதிக்கிறார். அவர் டி.பி. ராஜலட்சுமியின் பாடல்களைப் பாடிக் காண்பிக்கிறார். அந்த இளைஞனுக்கு மதுரத்தின் மீது பெரிய நம்பிக்கை வருகிறது. அந்தப் படத்தில் நடிக்க மதுரம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த இளைஞன்தான் என்.எஸ். கிருஷ்ணன்.

பூனேயில் எடுக்கப்பட்ட அந்தப் படம் ராஜா சாண்டோவின் வசந்தசேனா. அதன் பிறகு என்.எஸ். கிருஷ்ணனுக்கும் மதுரத்திற்கும் இடையிலான உறவு காதலாகி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் கிருஷ்ணனுக்கு ஏற்கனவே நாகர்கோவிலில் ஒரு மனைவி இருக்கும் விஷயம் மதுரத்திற்குப் பின்னால்தான் தெரியவருகிறது. அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் காலப்போக்கில் அதை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைந்தார். பின்னாட்களில் மதுரத்தின் தங்கையையும் கிருஷ்ணன் திருமணம் செய்திருந்தார். இவரும் இணைந்து கிட்டதட்ட 120 படங்களுக்கு மேல் நடித்தனர். அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட எல்லாப் படங்களிலுமே நடித்தனர் எனலாம். அந்த அளவுக்கு அவர்களின் நடிப்பு கோலோச்சிய காலம் அது. இந்த நகைச்சுவை இணையின் பங்களிப்பு ஓர் உலக சாதனை.

படங்களில் தங்களுக்குத் தனியான காமெடி-ட்ராக் வேண்டுமென இவர்கள் வலியுறுத்தினர். இன்று பிரபலமாகப் பின்பற்றப்படும் காமெடி-ட்ராக்கைத் தொடங்கிவைத்தது இந்தக் கூட்டணிதான். அந்தக் காலத்தின் பிரபலமான நாயகர்கள் பி.யூ. சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோர்களின் படங்களிலும் முன்னணி பட நிறுவனங்களின் படங்களிலும் தொடர்ந்து நடித்தனர். புகழின் உச்சத்தில் இருந்தபோது பத்திரிகையாளர் லஷ்மிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தியாகராஜ பாகவதருடன் என்.எஸ். கிருஷ்ணனும் கைதுசெய்யப்பட்டார். மதுரம் தன் கணவனுக்காகப் பணம் திரட்டி நீதிப் போராட்டத்தில் ஈடுபட்டார். நடிகர் சகஸ்ரநாமம் உதவியால் மதுரம் என்.எஸ்.கே. நாடகக் குழுவையும் நடத்திவந்தார்.

1947இல் பைத்தியக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாக மதுரம் நடித்துக்கொண்டிருந்தபோது என்.எஸ்.கே. விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்காக அந்தப் படத்தில் ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டது. மதுரம் இரண்டு வேடங்களில் நடித்தார். ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு இணையாகவும் மற்றொன்றில் என்.எஸ்.கேவுக்கு இணையாகவும் நடித்தார். அந்தப் படத்தில் என்.எஸ்.கே. அறிமுகமாகும் காட்சியில் மதுரம் அவரை நோக்கி, “நீயா? இனி நீ வரமாட்டேன் என நினைத்தேன். எப்படி வந்தாய்?” என்பார். அதற்கு என்.எஸ்.கே, “எல்லாம் உன் தயவில்தான்” எனப் பதிலளிப்பார்.

1957இல் என்.எஸ். கிருஷ்ணன் இறந்த பிறகு மதுரம்தான் முழுக் குடும்பத்தின் சுமையையும் ஏற்றார். அவரின் முதல் மனைவியின் குழந்தைகள், மதுரத்தின் தங்கையின் மூலம் பிறந்த குழந்தைகள் எல்லோரையும் மதுரம்தான் கவனித்துக்கொண்டார். மதுரத்திற்குப் பிறந்த ஒரே குழந்தை பிஞ்சுப் பருவத்திலே இறந்துவிட்டது. டி.ஏ.மதுரம் 1974ஆம் ஆண்டு மரணமடைந்தார். நடிப்பாற்றலால் சிரிக்கவைத்தவரின் தனிப்பட்ட வாழ்க்கை துயரமும் போராட்டமும் நிரம்பியதாகவே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x