Published : 09 Jun 2017 09:03 AM
Last Updated : 09 Jun 2017 09:03 AM
ஒரே தேசம் ஒரே வரி என்ற முழக்கத்தோடு அறிமுகமாகவுள்ளது மத்திய அரசு கொண்டுவரும் சரக்கு மற்றும் சேவை வரி (Goods and service Tax). இந்த வரியின் மூலம் ‘கறுப்புப் பணப் புழக்கம் கட்டுப்படுத்தப்படும்’, ‘வரி ஏய்ப்பைத் தாறுமாறாகக் குறைக்கும்’, ‘இதைச் செலுத்துவதும் எளிதானது’ என்றெல்லாம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் 28% ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு ஆளாகியிருக்கும் திரையுலகம் பேய் அறைந்ததுபோல் கிலி பிடித்துக் கிடக்கிறது. என்றாலும் ஜி.எஸ்.டி. வரி தமிழ் சினிமாவுக்கு வில்லனா, ஹீரோவா என்ற விவாதம் கோலிவுட்டில் அனல் பறக்கிகிறது.
கமலின் துணிவு
இதுவரை தமிழ்த் திரையுலகம் அனுபவித்துவந்த வரிவிலக்கு இனி கிடைக்காது என்ற நிலை ஒரு பக்கமும், ஜி.எஸ்.டி. வரியால் உயரவிருக்கும் டிக்கெட் கட்டணம் காரணமாக ஜூலை முதல் திரையரங்குக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடும் என்ற புலம்பலும் திரையுலகின் எல்லா மட்டங்களிலிருந்தும் கேட்கத் தொடங்கிவிட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் என்று திரைப்பட சங்கங்கள் 28 சதவிகித வரி சினிமாவையே அழித்துவிடும் என்று அபாய அறிக்கைவிட்டாலும் சினிமாவிலிருந்து ஜி.எஸ்.டி. சதவிகிதத்துக்கு எதிராகத் துணிவான முதல் குரலைக் கொடுத்திருக்கிறார் கமல்.
பொது நிகழ்வொன்றில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது “ஹாலிவுட் படவுலகுக்கு நிகராக இந்திய சினிமாவை ஒப்பிட்டு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி அரசு விதிப்பது தவறு. திரைத்துறையை நம்பி ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதனால் வரி விதிப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தித் திரையுலகம் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம். மீறி 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை”என்று அதிரடியாகக் கூறினார் கமல். இந்தச் செய்தி கோலிவுட்டையும் தாண்டி இந்தியா முழுவதும் வைரலானது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி “எல்லாத் தரப்புக் கருத்துகளுக்கும் செவிமடுத்து அவற்றை அலசி ஆராய்ந்து வருகிறோம். ஆனால் ஊடகங்களில் பிரச்சாரம் செய்து ஜி.எஸ்.டி. விவகாரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்துவிடலாம் என்று நினைப்பவர்களின் முயற்சி பலிக்காது” எனப் பேசியிருந்தார். இத்தனை காரசாரமாக மாறிவரும் ஜி.எஸ்.டி.யால் தமிழ் சினிமாவுக்கு உண்மையில் நல்லது நடக்கும் என்று கூறுகிறவர்களும் திரையுலகில் அதிகமாகவே இருக்கிறார்கள்.
லாபம் கூடும்
“திரைப்படத்துக்கு வரிவிலக்கு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. மத்திய அரசாங்கம் 28 சதவிகிதம் வரி போட்டுவிட்டது. இதை மாநில நிர்வாகம் திரைப்படங்களுக்கு நீக்க விரும்பினால், மாநில அரசுக்குத்தான் பெரிய இழப்பு ஏற்பாடும். தற்போது 100 ரூபாய் டிக்கெட் என்றால் அதில் 30 சதவிகிதம் கேளிக்கை வரியாக இருந்தது. எனவே 100 ரூபாய் கட்டணத்தில் 70 ரூபாய்தான் தயாரிப்பாளருக்குக் கிடைத்துவந்தது. 30 ரூபாய் கேளிக்கை வரியாகச் செலுத்தப்பட்டது.
இனிமேல் அதற்கு வாய்ப்பில்லை ஏனென்றால் 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியால் 100 ரூபாய் டிக்கெட்டுக்கு 28 ரூபாய் சேர்த்து 128 ரூபாயாகக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்க வேண்டியிருக்கும். அந்த 28 ரூபாயிலிருந்து மாநில அரசுக்கான பங்கை மத்திய அரசு வழங்கும். முன்பு 70 ரூபாய் கிடைத்துவந்த தயாரிப்பாளருக்கு ஜி.எஸ்.டி.க்குப் பிறகு 100 ரூபாய் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.” என்கிறார் தேசிய தணிக்கைக் குழு உறுப்பினரும், நடிகரும், இயக்குநருமான எஸ்.வி.சேகர்.
கறையைக் கழுவுமா?
இன்னொரு பக்கம் சினிமாவின் கறுப்பான பக்கமாகக் கறுப்புப் பணம் விளங்குகிறது. “சினிமா தொழிலில் சுமார் 70 சதவிகிதம் வரை கறுப்புப் பணம் புழங்குவதை இங்கு அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். திரைப்படத்துறையை இன்னும் அமைப்பு சார்ந்த தொழிலாக அரசும் வங்கிகளும் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதற்குக் காரணம் சினிமாவின் கழுவமுடியாத கறையாக நீடித்துவரும் இந்தக் கறுப்புப் பணம் இருப்பதுதான். இங்கே நடிகர்களுக்கான ஊதியம், தயாரிப்புச் செலவின் ஒருபகுதி ஆகியவை, கணக்கில் வராத கறுப்புப் பணத்தைக் கொண்டே செய்யப்படுவதால் அரசுக்கு முறையாகச் செலுத்தப்பட வேண்டிய வரி சரிவர செலுத்தப்படாமல் வரி மறைவுப் பிரதேசமாகவே திரையுலகம் இருட்டுக்குள் இருந்து இருக்கிறது.
மேலும் 36 சதவிகிதம் வரை கண் மூடித்தனமாக வட்டிக்குப் பணம் வாங்கும் துறையாகவும் சினிமா இருப்பது தயாரிப்புச் செலவை பன்மடங்கு உயர்த்தக்கூடிய காரணங்களில் முதன்மையானது. இப்படி வட்டிக்குக் கடன்கொடுப்பவர்கள் வங்கிகள் அல்ல; கொழுத்த கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள். ஜி.எஸ்.டி.க்குப் பிறகு இப்படி வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்து சினிமா மீளும். திரைப்படத் தொழிலை ஓரு சூதாட்டமாக நினைத்து விளையாடுபவர்கள் சினிமாவிலிருந்து மெல்ல மெல்ல விலகி, நேர்மையாகத் தொழில் செய்பவர்கள் அதிகரிக்கும் காலத்துக்கான தொடக்கத்தை ஜி.எஸ்.டி. சாத்தியமாக்கும்” என்பது பெயர் குறிப்பிட விரும்பாத திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.
இது கலையுலகம்
ஜி.எஸ்.டி. வரியில் திரையுலகம் எப்படி அணுகப்பட வேண்டும் என்பதில் தனது கோணத்தை முன்வைக்கிறார், தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவரான அபிராமி ராமநாதன். “ஜி.எஸ்.டி. வரியை வரவேற்கிறேன். ஆனால் இத்தனை சதவிகிதத்தை இந்தக் கலையுலகம் தாங்காது. சூதாட்டமான குதிரைப் பந்தயம் மீதும், கிளப்புகளில் நடத்தப்படும் சூதாட்டம் மீது 28 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை விதித்த அரசு அந்தப் பட்டியலில் திரையுகலத்தையும் சேர்த்தது எப்படிச் சரியாகும் மக்களைத் தூய்மையான வழியில் மகிழ்ச்சிப்படுத்தும் சினிமா, ஒரு கலை சார்ந்த ஊடகம். பண்பாட்டு, வாழ்க்கை ஆகிவற்றின் பிரதிபலிப்பு.
அது உயிர்ப்புடன் இருக்கும்வரைதான் சமூகத்தில் மன அழுத்தம் இருக்காது. சினிமா பார்க்க வரிகட்டப்போகிறவர்கள் மக்கள்தான். அவர்களுக்கு எட்டாத பொருளாக சினிமாவை ஆக்கும் வரிதான் இது. சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி என்பது அதை அழித்துவிடும். இத்தாலியிலும் இப்படிப்பட்ட வரி கொண்டுவந்தபோது, அங்கிருந்த வெகுஜன சினிமா அழிந்துபோனது. அதை மத்திய அரசு நினைவில் வைத்துக்கொண்டு சதவிகிதத்தைச் சரிபாதிக்கும் கீழாகக் குறைக்கவேண்டும்” என்கிறார். இப்படியாக இருதரப்பு கருத்துகளும் இப்போதைக்கு அனல் பறக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT