Published : 17 Oct 2014 11:51 AM
Last Updated : 17 Oct 2014 11:51 AM
கன்னடத் திரையுலகிலும் வெற்றிகரமாகக் கால்பதித்திருக்கிறார் த்ரிஷா. கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க வேண்டியிருந்தாலும் தனக்கான முக்கியத்துவம் குறையாத படங்களுக்கு மட்டுமே கால்ஷீட் என்பதில் கறாராக இருக்கும் த்ரிஷாவின் டைரி 2015 ஜனவரி வரை ஃபுல். ‘தி இந்து’வுக்காக அவர் அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து...
கன்னடத்தில் நீங்கள் அறிமுகமாகியிருக்கும் ‘பவர்’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்?
அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ப்ரவீனுக்குத்தான் நன்றி சொல்லணும். நானும் சிம்புவும் நடிச்ச ‘அலை’ படத்தைத் தயாரிச்சவர் அவர்தான். அப்போதிருந்தே எனக்கு அவரைத் தெரியும். எனக்கு நெருங்கிய நண்பர். தெலுங்குல ஹிட்டான ‘தூக்கூடு’ படத்தோட கன்னட ரீமேக்கில் நீங்கதான் நடிக்கணும்னு கேட்டார். மறுக்க முடியல. புனித் ராஜ்குமார் ஹீரோ. நான் ஒத்துக்க அதுவும் ஒரு முக்கியக் காரணம்.
சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் முடிஞ்சாச்சு. இப்போ என்ன மாதிரியான வேடங்களை ஒத்துக்கிறீங்க?
ரொம்ப பக்குவப்பட்ட கதாபாத்திரங்கள் மட்டும்தான் பண்ணிட்டு இருக்கேன். கடைசியா வெளியான ‘என்றென்றும் புன்னகை’, சீக்கிரம் ரிலீஸாகப்போற ‘பூலோகம்’, அஜித் - கௌதம் காம்போல இப்போ நடிச்சிட்டு இருக்கிற ‘தல 55’, சுராஜ் இயக்குற படம்ன்னு இப்போ ஏத்துகிற எல்லாப் படங்களுமே வித்தியாசமான வேடங்கள்தான். அப்படி இருந்தா மட்டும்தான் ஒத்துக்கிறேன்.
‘ஜி’ படத்துல அஜித்கூட ஜோடி சேர்ந்தீங்க. இடையில மங்காத்தா. இப்போ ‘தல 55’. எப்படி மாறியிருக்கிறார் அஜித்?
அவரைப் பற்றிச் பேசச்சொன்னீங்கன்னா பேசிட்டே இருப்பேன். அவரை முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தாரோ அதே போலதான் இப்பவும் இருக்கார். ஸ்பாட்டுக்கு வந்துட்டார்ன்னா, அவரைச் சுத்தி இருக்கிறவங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பார். யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்படுதான்னு தெரிஞ்சுப்பார்.
என்ன உதவின்னாலும் தயங்காமல் செய்வார். பெண்களுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்ச மாஸ் நடிகர். படப்பிடிப்புத் தளத்தில டீ கொடுக்கிற பசங்கள்ல இருந்து எல்லோர்கிட்டயும் ஃபிரெண்ட்லியா ஒரே மாதிரி அவரால எப்படி இருக்க முடியுது! இப்பவும் வியந்து போறேன்.
பெண்களை மையப்படுத்திய படங்களில த்ரிஷாவைப் பார்க்க முடியுறதில்லையே?
சினிமா என்பதே ஆண்களின் பின்னால் சுத்துற உலகம். இங்கே பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் ரொம்ப குறைவு. எனக்கும் ஆசைதான். நான்கு கதைகள் வந்திருக்கு. படிச்சிட்டு இருக்கேன். செம கதை; உடனே நடிக்கணும்னு தோணுகிற கதையில் நடிப்பேன்.
முழுக்க காமெடி வேடத்தில் த்ரிஷாவை எப்போ பார்க்கலாம்?
நான் நடிச்ச தெலுங்கு படங்கள்ல இடைவேளை வரைக்கும் ஹீரோகூட சேர்ந்து காமெடி பன்ற வேலையைதான் பண்ணியிருக்கேன்.. சுராஜ் இயக்கத்துல இப்போ நான் நடிக்கிற படம் ஒரு முழுநீள காமெடிதான். மாஸ் மசாலா படம் எடுக்கிற இயக்குநர். இப்படி அவுட் அண்ட் அவுட் காமெடி ஸ்கிரிப்ட் பண்ணுவார்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. ஷூட்டிங் செம ரகளையா போயிட்டு இருக்கு.
ஒவ்வொரு முறையும் நான் எழுத உட்காரும்போதெல்லாம் என் கதையின் நாயகியாக த்ரிஷாவை மனசுல நினைச்சுத்தான் எழுதுவேன்னு கெளதம் மேனன் சொல்லி இருக்காரே?
கௌதம் டாப் லெவல் இயக்குநர்கள்ல ஒருத்தர். அவர் இப்படிச் சொல்லியிருக்கார்ன்னா நான் எவ்வளவு கொடுத்து வைச்சுருக்கணும். த்ரிஷாவா இருந்த என்னை எல்லாருக்கும் ஜெஸ்ஸியாகத் தெரிய வைச்சவர். இப்போகூட தல படத்துல எனக்கு நல்ல ஒரு வேடம் கொடுத்திருக்கார். தேங்ஸ் கெளதம் மேனன்!
‘லிங்கா’ படத்தில ரஜினிகூட ஒரு பாடலுக்கு ஆட அழைப்பு வந்ததாமே?
நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். ஆனால் என்னை யாருமே தொடர்புகொள்ளல. ரஜினி சாரோடு நடிக்கக் காத்திட்டிருக்கேன்.
இந்த முறை தீபாவளிக்கு என்ன ப்ளான்?
ஒரு உண்மையைச் சொல்லவா!? எனக்குத் தீபாவளிக்குப் பட்டாசு கொளுத்தப் பிடிக்காது. என் வீட்ல ரெண்டு செல்ல நாய்கள். நம்ம காதில கேட்கிற சத்தத்தைவிட நாய்களோட காதுக்கு இன்னும் சத்தமாகக் கேட்கும் தெரியுமா? என்னோட நாய்கள் ரொம்ப பயப்படும்.
தீபாவளி டேல நாய்களோட என் ரூமில் போய் ஒளிஞ்சுப்பேன். நாய்களுக்குக் காதில் பஞ்சு எல்லாம் வச்சு, துணி சுற்றி அதுங்களைப் பயப்படாமல் பார்த்துக்குவேன். ஈவ்னிங் சத்தம் குறைஞ்சதும் என்னோட ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT