Published : 23 Jun 2017 10:26 AM
Last Updated : 23 Jun 2017 10:26 AM
‘‘ஒரு பழத்தில் எத்தனை விதைகள் இருக்கின்றன என்பதை எண்ணிச் சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு விதையில் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்பதை யாராலும் எண்ண முடியாது. கலை என்பது விதையைப் போன்றது. தனி மனிதனாக ஒருவர் பத்து மரங்களை நடலாம். ஆனால், ஒரு கதை அல்லது கட்டுரையைக் காட்டிலும் ஐந்து நிமிடம் ஓடும் குறும்படம் மூலம் ஆயிரக்கணக்கான மனிதர்களிடம் மரம் நடுவதற்கான ஆர்வத்தை எளிதில் தூண்ட முடியும். சினிமா மற்ற எல்லாக் கலைகளையும்விட வெகுஜன மக்களுக்கு நெருக்கமானது.
மண்ணில் விதைப்பதைவிட சினிமா மூலம், மனங்களில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. பத்திரிகையாளனாக எழுத்தின் மூலம் வெளிப்படுத்திய உணர்வுகளை, இனி காட்சியின் வழியாக வெளிப்படுத்த ஆயத்தமாகி இருக்கிறேன்.” ‘நன்றாகத் தேர்வு எழுதியிருக்கும்’ மாணவனைப் போல நம்பிக்கையோடு பேசுகிறார், த.செ. ஞானவேல். பத்திரிகையாளராக இருந்தவர், ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘மிடில் பெஞ்ச்’ மாணவனின் கதையைச் சொல்ல வேண்டும் என்று ஏன் தோன்றியது?
‘இன்று ஒரு தகவல்’ புகழ் தென்கச்சி கோ. சுவாமிநாதனைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். ‘தன் வாழ்வில் அவர் யார் மீதும் கோபமே பட்டதில்லை’ என்பதை அறிந்து, உளவியல் நிபுணர்கள் அவரை ஆராய்ச்சி செய்தார்களாம். தீவிரமான பரிசோதனைகளுக்குப் பிறகு, ‘உங்களால் யாரையும் தோற்கடிக்க முடியாது, உங்களை ஜெயிக்கவும் யாராலும் முடியாது’ என்று ஆய்வு முடிவாகச் சொல்லியிருக்கிறார்கள். தென்கச்சியாரே ஆச்சரியப்பட்டு, ‘எப்படிச் சொல்கிறீர்கள்? ’என்று கேட்டிருக்கிறார். ‘வெற்றியோ தோல்வியோ எது கிடைக்க வேண்டுமென்றாலும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.
நீங்க எந்தப் போட்டியிலும் கலந்துக்காம, ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிற ஆளு. அதனால, நீங்க தோற்கவும் மாட்டீங்க. ஜெயிக்கவும் மாட்டீங்க”னு சொன்னாங்க. யோசிச்சுப் பார்த்தா அது நூறு சதவீதம் உண்மை. ஸ்கூல், காலேஜ்ல நான் மிடில் பெஞ்ச் ஸ்டூடண்ட். ஒரு போட்டியிலேயும் கலந்துகிட்டதே இல்ல. யாராவது பரிசு வாங்கினா ஜோரா கைத் தட்றதோட சரி. சின்ன பசங்க சண்டைக்குக் கூப்பிட்டாகூட போக மாட்டேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
‘மிடில் பெஞ்ச்’ என்ற வார்த்தையை முதன்முதலாக அவரிடம் கேட்டேன். என்னோடு படித்தவர்கள் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் மாணவர்கள் ஞாபகத்தில் இருக்கிறார்கள். வகுப்பில் பெரும்பான்மையா இருக்கிற மிடில் பெஞ்ச் மாணவர்களின் முகம்கூட ஞாபகத்தில் இல்லை. நம்மோடு கூடவே இருந்தவர்களின் பெயரும் முகமும் மறந்துபோவது சாதாரண விஷயமில்லை. கதை பிறந்த கணம் இதுதான்.
‘ஹீரோவாக’ ஒரு மிடில் பெஞ்ச் பையனைப் பார்க்க முடியுமா?
இந்தக் கேள்விக்கான பதில்தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. கூகிள் இணையதளத்தில், ‘மிடில் பெஞ்ச் ஸ்டூடண்ட்ஸ் மூவிஸ்’ என்று தேடினால், ‘திரைப்படம் எடுக்கச் சுவாரசியமான சம்பவங்கள் வேண்டும். மிடில் பெஞ்ச் மாணவர்கள் வாழ்வில் எந்தச் சுவாரசியமும் இருக்காது. அதனால், அவர்களை வைத்துப் படம் எடுக்க முடியாது’ என்று பதில் வந்தது. சுவாரசியம் இல்லாமல் ஒரு மனித வாழ்க்கை இருக்கவே முடியாது. ‘ஹீரோ என்பவர் வேறு யாரோ என்று நினைக்காமல், ஒவ்வொருவரும் தங்களை ஹீரோவாக பார்க்க முடியும்’ என்பதுதான் படத்தின் கதை.
இன்று ‘ஹீரோ’வாகி ஆயிரத்தில் ஒருத்தராக இருக்கும் பெரும்பான்மையானவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கூட்டத்தில் ஒருத்தராக இருந்தவர்கள்தான். பள்ளிக்கூடமே போகாத ஒருத்தர் நாட்டின் முதலமைச்சராகி, லட்சக்கணக்கானவர்கள் படிப்பதற்கு வழி செய்கிறார். பேருந்து நடத்துநர் சூப்பர் ஸ்டார் ஆகிறார், டீ விற்றவர் நாட்டின் பிரதமராகிறார், வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் யாரும் ஹீரோவாக முடியாது. இன்று எல்லாத் துறையிலும் சாதனை படைத்தவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் முதல் பெஞ்ச், கடைசி பெஞ்ச் மாணவர்களைவிட, மிடில் பெஞ்ச் மாணவர்கள்தான் அதிகம் என்கிற உண்மை நன்றாகப் புரியும். சின்ன வயதில் நாம் கேட்ட கதையில்கூட வேகமாக ஓடும் முயலைவிட, விடா முயற்சியுடன் வென்ற ஆமைதான் ஹீரோ.
அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் ஜோடிப் பொருத்தம் எப்படி?
ஒருத்தனுடைய காதல் வெற்றியடையலாம்... தோல்வியடையலாம். ஆனால், புறக்கணிக்கப்படுவதோ நிராகரிக்கப்படுவதோ ரொம்ப துயரம். மிடில் பெஞ்ச் பையன்களின் காதல் பெரும்பாலும் நிராகரிக்கப்படும். திரையில் எல்லோரும் நாயகனாக வெளிப்படுத்திக்கொள்ளவே விரும்புவார்கள். ஆனால் அசோக் செல்வன், தன்னுடைய தோற்றத்தின் பொலிவைக் குறைத்து, ஆவ்ரேஜ் பையனாகப் பொருந்தி நடித்திருக்கிறார். அமெரிக்காவில் படித்து வளர்ந்த பிரியா ஆனந்த் பாட்டு, இசை என இயல்பிலேயே பன்முகம் கொண்டவர். இவர்கள் இருவரையும் வைத்து, ஒரு ஆவ்ரேஜ் பையனின் காதலை, சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறேன்.
யதார்த்தமான கதைக்குத் தயாரிப்பாளர்கள் கிடைப்பதில் சிரமம் இல்லையா?
எல்லாருக்கும் அமையும்னு சொல்ல முடியாது. எனக்கு சுலபமாகத்தான் அமைந்தது. ‘மாயா’, ‘காஷ்மோரா’, ‘ஜோக்கர்’, ‘மாநகரம்’ என்று தரமான படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியஸ் நிறுவனத்துடன், ரமணீயம் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். பணத்தை முதலீடா போடுகிற தயாரிப்பாளர்கள், நிறைய விஷயங்கள் யோசிப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செஞ்சதையே, முதல் வெற்றியா பார்க்கிறேன். மக்களுக்கு இது நிச்சயமா பிடிக்கும். ஏன்னா, இது அவங்க கதை.
படத்தோட தொடக்க விழா, விளம்பர நிகழ்வுகள்ல, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமுத்திரகனி, பிரகாஷ்ராஜ் பெரிய நட்சத்திரங்கள் எப்படி வந்தாங்க?
அவங்க பெருந்தன்மைதான் காரணம். ‘பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.. மணமே போதும்’னு சொல்லுவாங்க. ஆனா, பூந்தோட்டமே வெச்சிருந்தாலும் மார்கெட்டிங் தேவைப்படுது. கதையை நம்பி எடுக்கிற படங்களுக்கு, ரொம்ப செலவு செஞ்சு மார்கெட்டிங் பண்ண முடியாது. மலையாளத்துல ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் எல்லாரும் சேர்ந்து எல்லாப் படத்துக்கும் சோஷியல் மீடியாவுல மார்கெட்டிங் பண்றாங்க. அதேபோல நம்ம படத்துக்கு முயற்சி செய்யலாமேன்னு தோணுச்சு.
பத்திரிகையாளனாக இவங்க எல்லாரோடவும் நல்ல பழக்கம் இருந்தது. ‘நான் படம் டைரக்ட் பண்றேன்னு சொன்னதும்’ வாழ்த்து சொல்லி, புரமோஷன் பாட்டுல எல்லாரும் பங்கெடுத்தாங்க. அசோக்செல்வன் மேலேயும் நிறைய ஹீரோக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கு. அவருக்காகவும் நிறையப் பேர் ஆர்வமா புரமோஷன் பண்ணாங்க. இப்படி எல்லா தரப்போட ஆதரவும் இருக்கிறதால, எல்லாம் நல்லபடியா நடக்குது. இந்த நேரத்துல அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கிறேன். படம் ஜூலை 14 அன்று ரிலீஸ். கூட்டத்தில் ஒருத்தரா இருக்கிற யாரும் ஆயிரத்தில் ஒருத்தரா மாற முடியும் என்கிற நம்பிக்கையை இந்தப் படம் எல்லாருக்கும் தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT