Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

நட்சத்திரங்களுடன் என் வானம்: கிரேஸி மோகன் - நெற்றிக்கு வராத குண்டலினி!

எப்போது எந்த விஷயத்துக்காக போன் பண்ணினாலும் “நீங்க வந்துடுங்களேன்…” என்பார் கிரேஸி மோகன். “ குடும்ப டாக்டர், குடும்ப வக்கீல் வெச்சுக்கறதில்லையா? அதுமாதிரி நீங்க குடும்ப நிருபர்னு வெச்சுக்கோங்களேன்” என்பார்.

பல்வேறு தருணங்களில் கிரேஸி மோகனைச் சந்தித்திருந்தாலும் இதுதான் மோகன் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகம் காட்டுவார். ஆனால், எல்லா முகங்களிலும் ஒரு புன்னகை நிச்சயம் இடம்பிடித்திருக்கும்.

“எதுக்காக உங்களையே வரச் சொல்றேன்னா, எந்த விஷயத்தை எப்ப சொன்னேன்னு என்னை விட உங்களுக்கு நல்லாத் தெரியும். உங்களுக்கும் இவர்கிட்டே என்ன புதுசா கேட்கலாம்னு தெரியும்.” என்பார்.

தன்னுடைய நாடக அனுபவங்கள், அவருடைய தம்பி பாலாஜி ‘மாது’ பாலாஜி ஆன கதை, அயல்நாட்டு நாடக அனுபவங்கள், இன்ஜினீயரிங் படித்துவிட்டு நாடக மேடை ஏறிய மாற்றம் நிகழ்ந்த பின்னணி, மேடையில் நடந்த சொதப்பல்கள், வீட்டுக்குள் நடக்கும் கலாட்டாக்கள் நாடகத்தில் காட்சிகளாகும் சம்பவங்கள் என்று கிரேஸி மோகன் ஏராளமாகச் சொல்லியிருக்கிறார்.

குடும்ப விஷயங்கள் என்று மட்டுமில்லை; ரஜினியுடனான அனுபவம், கமல்ஹாசனோடு கதை விவாதம் செய்தது என்று பல தகவல்களை வேறுவேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கும் கிரேஸி மோகன் ஒரு நகைச்சுவைச் சுரங்கம். ஒருமுறை அவருக்கே சவாலாக அமையும் என்ற ஐடியாவில் ஆன்மிகம் தொடர்பான அனுபவங்களைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்து போன் செய்ததும் உடனே வாங்க என்றார். ஆன்மிகத்தை வைத்து காமெடி செய்யப் போகிறார் என்று எண்ணியபடி போனால் அதிர்ச்சி!

கிரேஸி மோகன் வீட்டுக்கு எப்போது போனாலும் அருமையான காபிக்கு உத்தரவாதம் உண்டு. அன்றைய தினமும் அப்படித்தான். காபி குடித்ததும், “போலாமா?” என்றார். இங்கேயே பேசிடலாமே என்றதும் “இல்லே… வாங்க, சும்மா அப்படியே ஒரு டிரைவ் போயிட்டு வருவோம்” என்றபடி அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். காரில் ஏறி அமர்ந்தவர் அவர் வீடு இருக்கும் மந்தைவெளி தேவநாதன் தெருவில் இருந்து காரை நகர்த்தினார்.

“புதுசா கார் எடுக்கறேன்… அதான் பழகணும்னு எங்கே போனாலும் கார்ல போறேன்… ஆக்சுவலி நாம போற இடம் அடுத்த தெருவுலதான் இருக்கு” என்றார். “பக்கத்துல யார் உட்கார்ந்து இருந்தாலும் ஆர்.டி.ஓ. உட்கார்ந்துருக்கற மாதிரியே இருக்கு. அதனால கொஞ்சம் பதட்டமா இருக்கேன். ஆனா, நான் நல்லா கார் ஓட்டுறேன்னு மந்தைவெளி மாடுகள் எல்லாம் சர்டிபிகேட் கொடுத்திருக்கு… அதனால பயப்படாம வாங்க” என்றார். ‘ஓகே… காமெடி மூட்லதான் இருக்கார்’ என்று நினைத்தபடியே போனால் கிரேஸி மோகனின் கார் ராம கிருஷ்ண மடத்தில் போய் நின்றது.

“ஆன்மிகம்னு சொன்னீங்க இல்லையா… அதான் என் தேடல் எங்கே இருந்து தொடங்குச்சோ அங்கே இருந்தே பேட்டியைத் தொடங்கலாம்னு இங்கே அழைச்சுட்டு வந்தேன்” என்றபடி புத்தம் புதிதாகக் கட்டப்பட்டிருந்த தியான மண்டபத்தின் வாசலில் அமர்ந்தார். ராமகிருஷ்ண மடத்தின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டுப் பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக இருந்தது. “இந்தக் குளிர்ச்சி என் மனசுக்குள்ளே ஏற்பட்ட தருணம்தான் நான் வேறயா மாறுனேன்…” என்று கிரேஸி மோகன் சொன்னபோது அவருக்குள் இருந்து வேறொரு ஆன்மா பேசுவதுபோல இருந்தது.

மிகவும் சீரியஸான குரலில் லேசான நெற்றிச் சுருக்கத்துடன் மடத்துடனான உறவு, ரமணர், காஞ்சி மகா பெரியவர் என்று அவர் சகலமும் பேசினார். பேசி முடித்த பிறகு பேசிய விஷயங்களை மறுபடியும் அசைபோட்டுக்கொண்டோம். பின் அவரே தன் கருத்துகளைத் தள்ளியிருந்து பார்த்து சின்னச் சின்னதாக கமெண்ட் அடித்தார். அப்போது கிரேஸி மோகன் வேறு ஆளாக இருந்தார். அது தான் இயல்பாக எல்லோரும் பார்க்கும் மனிதர். எல்லாம் முடிந்து புகைப்படம் எடுத்து முடித்த பிறகு, “எப்படி எழுதப் போறீங்க?” என்றார்.

“உங்க சீரியஸான கருத்துகள் மிஸ்ஸாகாம உங்க டிரேட் மார்க் டச்சோட எழுதறேன்” என்று சொல்லிவிட்டு வந்ததோடு, அதேபோல எழுதியது அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. ‘கிராப் வைப்பதுபோல பெல்பாட்டம் போடுவதுபோல ஆன்மிகத்தையும் ஃபேஷனாகத்தான் அணுகினேன்’ என்று ஒரு இடத்திலும்… ‘ராமகிருஷ்ண மடத்தில் தியான மண்டபத்தில் உட்கார்ந்து தியானம் செய்யத் தொடங்கிய ஒரு வாரத்திலேயே குண்டலினியை நெற்றிக்குக் கொண்டுவரும் ஆசை வந்தது; ஆனால், இன்றுவரை அது முடியவேயில்லை’ என்று இன்னோர் இடத்திலுமாக கட்டுரையில் ஆங்காங்கே அவருடைய காமெடி டச்சுடன் அவரது கருத்துகளும் வந்ததில் அவருக்கு சந்தோஷம்.

வேறொரு சூழலில் அவர் குடும்பம் தொடர்பான ஒரு செய்தி காதில் விழுந்தது. அதைப்பற்றி அவரிடம் பேசியபோது, “ரொம்ப பர்சனல்… அதனால வேண்டாம்…” என்றார். அந்த கிரேஸி மோகன் அதுவரையில் பார்த்திராத அளவுக்கு எமோஷனலாக இருந்தார். நானும் அவரை ரொம்ப வற்புறுத்தவில்லை. ஏனென்றால் அந்தக் கட்டுரையில் நிச்சயமாக அவருடைய டிரேட் மார்க் காமெடி டச் கொண்டு வர முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x