Published : 20 Sep 2016 10:19 AM
Last Updated : 20 Sep 2016 10:19 AM

திரை விமர்சனம்: சதுரம் 2

சதுர வடிவிலான ஓர் அறை. அதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 2 பேர். இருவரில் ஒருவர் ஒளிப்படக்காரர் (ரியாஸ்). உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அந்தரங்கப் பக்கங்களை மறைமுகமாகப் படம் எடுத்துக்கொடுத்து பணம் பார்க்கும் இளைஞர். இரண்டா வது நபர் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மருத்துவர் (யோக் ஜபீ). ஆனால் தனது சபலத்தால் சக ஊழியரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு மத்தியில் ஒரு பிணம். இந்த இருவரையும் அடைத்து வைத்தது யார்? பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார்? இவர்கள் இருவரும் தப்பித்துச் செல்ல முடிந்ததா?

‘SAW’ என்ற ஆங்கில ஹாரர் படத்தின் பாதிப்பில் உருவான படம் என்பதை நேர்மையாகச் சொல்லிவிட்டே படத்தைத் தொடங்குகிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஒளிப்பட இளைஞரும், மருத்துவரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த அறை ஒரு மரணப் பொறியாக இருப்பதால், இவர்கள் தப்பித்துக்கொள்வார்களா இல்லையா என்ற திகில் கலந்த எதிர்பார்ப்பு படம் தொடங்கிய உடனேயே ஏற்பட்டுவிடுகிறது.

அடைத்து வைக்கப்பட்டவர் கள் தப்பித்துச் செல்வதற்கான சங்கேதக் குறிப்புகள், உதவிக் கருவிகள், ஆகியவை அந்த அறையிலேயே கொடுக்கப்பட்டி ருப்பது திரைக்கதையைச் சுவா ரஸ்யப்படுத்துகின்றன. அடைத்து வைக்கப்பட்டவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தி, அவர்கள் திருந்தி வாழ வழி ஏற்படுத்தித் தர முயல்வதாகக் கதை போகிறது.

விமான விபத்து, டாக்டரின் பின் கதை, ஒளிப்படம் எடுக்கும் இளைஞன், பாலியல் வன்முறை வழக்கு, கொடூரமாகக் கொல்லப் படும் வழக்கறிஞர் ஆகிய உதிரிச் சம்பவங்கள் இந்தச் சதுரத்தில் வந்து எப்படிச் சங்கமிக்கின்றன என்னும் கேள்வி வலுவாக எழுப் பப்படுகிறது. நேர்க்கோட்டில் அமையாத திரைக்கதை சஸ் பென்ஸைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. சதுரத்துக்கு உள்ளேயும் வெளி யிலும் மாறிமாறிப் பயணிப்பது படத்தை அலுப்பில்லாமல் கொண்டுசெல்கிறது. சதுரத்துக் குள் சிக்கியவர்களின் அவஸ்தை, கொடூரமான கொலை என்று சில காட்சிகள் நன்கு படமாக் கப்பட்டுள்ளன.

என்றாலும், டாக்டரின் பின் கதையில் வரும் குடும்பச் சிக்கல் படத்தோடு ஒட்டவே இல்லை. அவரது குடும்பம் கடத்தப்படு வதற்கான காரணமும் தெளிவாக இல்லை. ரியாஸ் சிக்க வைக்கப் படுவதற்கான காரணமும் வலு வாக இல்லை. சதுரத்தில் மனி தர்களைச் சிக்க வைப்பவருக்கு அதற்கான நோக்கம் என்ன என்பதை வலுவாக நிறுவுவதில் திரைக்கதை பரிதாபமாகச் சறுக்கியிருக்கிறது. இந்தப் பின்னடைவு ஒட்டுமொத்தப் படத்தையும் அர்த்தமற்றதாக்கி, அதன் தாக்கத்தைக் குறைத்து விடுகிறது.

சதுரத்துக்குள் இருவரை யும் சிக்க வைத்தவர், குற்ற மிழைத்தவர்கள் திருந்தி வாழ வழி ஏற்படுத்தித் தர முயல்வதாகச் சொல்லப்படுகிறது. ‘பொதுநல உணர்வு கொண்ட த்ரில்லர்’ (Philanthropic Thriller) படமாக முன்வைக்கப்படும் படத்துக்கு ஏற்ற கதைதான் இது. ஆனால், அவரே கடைசியில் அதற்கு முரணாக நடந்துகொள்கிறார். இது திரைக்கதையின் மதிப்பை மேலும் குறைக்கிறது.

முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக டாக்டராக வரும் யோக் ஜபீ பல விதமான உணர்ச்சிகளையும் கொட்டி நடித்து நம்மைக் கவர்கிறார். ஒளிப்படக்காரராக வரும் ரியாஸின் நடிப்பும் பொருத்தமாக உள்ளது.

விஜய், சிவாவின் கலை இயக் கம், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, சதீஷ் பாபுவின் ஒளிப்பதிவு, ராஜா சேதுபதியின் படத்தொகுப்பு ஆகியவை படத் தின் கதை, திரைக்கதைக்கேற்பக் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. பாடலைச் சேர்க்காமல் இருந்தது புத்திசாலித்தனமான முடிவு. இந்தக் கதையில் பாடல் சேர்க்கப் பட்டிருந்தால் அது படத்தின் ஆதாரத் தன்மையையே அடி யோடு கெடுத்திருக்கும். ஒன்றரை மணிநேரத்துக்குள் படத்தை எடுத்த கச்சிதத்தன்மைக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.

படம் முழுவதும் பரவியிருக் கும் திகில் உணர்ச்சியும் மர்மத் தன்மையும் காட்சிப்படுத்தப் பட்டுள்ள விதமும் பாராட்டத்தக் கவை. என்றாலும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம் தூக்கலாக இருக்கிறது.

வாழ்க்கையால் வஞ்சிக்கப் பட்ட ஒருவன் வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்துபவர் களுக்குப் பாடம் புகட்டுவதுதான் படத்தின் சாரம். இது வலுவாக நிறுவப்படவில்லை. பாடம் புகட்டும் முயற்சி, கொடூரமான தண்டனையாக மாறுவதும் இந்தச் செய்தியை நீர்த்துப்போகச் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x